கடந்த காலங்களைப் போல தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தவறாகிவிட்டால் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
பாஜகவை ஆதரிக்க புதிதாக இதுவரை எந்த ஒரு கட்சியும் முன்வரவில்லை. பிஜூ ஜனதாதளம் (பிஜேடி) மற்றும் அதிமுகவை சம்பந்தப்படுத்தி வெளியான செய்திகளை இந்த இரு கட்சிகளும் அதிகாரப் பூர்வமாகவே மறுத்துள்ளன. பிஜேடி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க முன்வரும் என்று தேர்தல் முடிந்தது முதல் யூகங்களை ஊடகங்கள் கிளப்பி விட்டு வருகின்றன.
அருண்ஜெட்லி தலைமையில் மத்தியஸ்த முயற்சிகள் நடந்து வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால், இதுபற்றி தாங்கள் ஆலோசனை எதுவும் நடத்தவில்லை என்றும் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றோம் என்றும் பிஜேடிதலைவரும் ஒரிசா முதலமைச் சருமான நவீன் பட்நாயக் கூறி யுள்ளார். முடிவுக்கு காத்திருக் கிறோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா வும் கூறியுள்ளார். எந்தக் கட்சி ஆதரிக்க முன்வந்தாலும் அதை வரவேற்க தாங்கள் தயார் என்பது பாஜகவின் நிலைபாடு ஆகும். இவ்விஷயத்தில் ஆர்எஸ்எஸ் பாஜக தலைமைக்கு முழுச் சுதந்திரம் அளித்துள்ளது. தேசிய நலனை முன்நிறுத்தி அனைத்துக்கட்சிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேற்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகரும் எந்த ஒரு கட்சிக்கு முன்பும் ‘அனுமதி இல்லை’ என்ற போர்டை வைக்கவில்லை என்று மற்றொரு செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வியும் கூறியுள்ளனர். இதனிடையே தேர்தல் முடிவுகள் வருதோடு பாஜகவுக்குள் மோடிக்கு எதிரான முயற்சிகள் நடந்தால் அதை தடுப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மோடி எதிர்ப்பாளர்களில் முக்கியமானவருமான சுஷ்மா சுவராஜூடன் மூத்த தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், புதன்கிழமை காலை சுஷ்மாவை அவரது வீட்டில் சந்தித்துப்பேசினார். முன்னாள் தலைவர் நிதின் கட்காரியும் சுஷ்மாவுடன் நீண்டநேரம் பேசினார். பல்வேறு கோஷ்டிகளை ஒருமித்த கருத்திற்கு கொண்டு வரும் பொறுப்பை கட்காரி ஆர்எஸ்எஸ் சார்பில் ஏற்றுள்ளார். செவ்வாய்க்கிழமை எல்.கே.அத்வானியுடன் கட்காரி பேச்சுவார்த்தை நடத்தினார். கட்காரியின் இந்த சந்திப்புகளுக்கு மற்றொரு அம்சமும் உண்டு. தனது பெயரில் உள்ள பூர்த்தி கம்பெனியின் சந்தேகத்துக்கு இடமான பொருளாதார பேரங்கள் அம்பலமானதைத் தொடர்ந்தே கட்காரி 2013ல் கட்சித் தலைவர் பதவியை இழந்தார். வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் தன்மீது எந்த ஒரு குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கட்சிகொடுக்கும் எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தே கட்காரி மற்றத் தலைவர்களை சந்தித்துப்பேசி வருகிறார்.
மோடியுடன் சுமார் 2மணி நேரமும் கட்காரி பேசினார். மோடியின் வலதுகரமான அமித்ஷாவை சந்தித்து அருண்ஜெட்லி பேசியுள்ளார். ராஜ்நாத் சிங் தலைவர் பதவியிலிருந்து விலக நேர்ந்தால் கட்காரிக்கும் அமித்ஷாவுக்கும் இடையே கடும் போட்டி உருவாவதற்கான வாய்ப்பும் உள்ளது.
தொகுப்பு
செல்வன்
Comments