இணைய அடியாட்களின் களமாகிறதா தமிழகம்?

தமிழகத்தில் இணையதள கும்பல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களையும் எதிர்க் கருத்துக்களையும் ஆபாச வசவுகளால் வீழ்த்துவது, குறிப்பாக பெண்களை பாலியல் அடிப்படையில் தாக்குவது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது.
இப்பிரச்சனைக்கு தீர்வு தேடி தொடர்ந்து விவாதங்கள் நடக்கின்றன.சமீபத்தில் எழுத்தாளர் இயக்கத் தலைவர்கள் கருப்பு கருணா, வெண்புறா சரவணன் ஆகியோரின் மீது, கள்ளச் சாமியார் நித்யானந்தாவின் சீடர்கள் மோசமான வக்கிரத் தாக்குதலை நடத்தினார்கள். முற்போக்காளர்கள், எழுத்தாளர்களிடமிருந்து கண்டனக் குரல்கள் வலுவாக எழுந்தன. கண்டனக் கூட்டங்களும் நடந்துவருகின்றன. இருப்பினும், இத்தகைய தாக்குதல்கள் குறைந்தபாடில்லை என்பதுடன், புதிய பரிணாமமும் எடுத்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

அப்பாவிகள் முதல், அதிகாரம் பெற்றோர் வரை

இணையதளத் தாக்குதல்களை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது ஆணாதிக்க வகைப்பட்டவை, பிற்போக்குச் சிந்தனைகளால் விளைகிறவை. சமூக இணைய வசதிகள் பரவலாகத் தொடங்கிய காலத்திலிருந்தே, இந்தவகைப்பட்ட தாக்கு தல்கள் தொடங்கி விட்டன. பெண்ணின் உடலை பாலியல்போகப்பொருளாகப் பயன்படுத்துவது தொடங்கி, மோசமாக சித்தரிக்கப் பட்ட படங்களைப் பரப்பி, மிரட்டுவதும் சுரண்டுவதும்... காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத தால், தன்னையே மாய்த்துக்கொண்ட சேலத்து மாணவியை நாம் அறிவோம்.

நாமக்கல்லில் கந்து வட்டிக் கும்பலிடம் கடன்பெற்ற ஏழைப்பெண்ணை நிர்வாணப்படுத்தி, வீடியோவைஇணையத்தில் விற்று பணம் திரட்டிய கும்பலையும், அதற்கு எதிராக காவல்துறையில் புகாரளித்து, போராடிய தோழர்வேலுச்சாமி, பின்னர் கொல்லப்பட்டதும் அறிவோம்.இரண்டாவது வகைப்பட்ட தாக்குதல்கள், திட்டமிட்ட கும்பல் நடவடிக்கை கள். மதவெறி அரசியலுக்கு பெருமள வில் பயன்படுத்தப்படும் இந்த முறை,திட்டமிட்ட வகையில் கருத்து உருவாக்கத் திற்கும், திசைதிருப்பலுக்கும் பயன் படுத்தப்படுகிறது. எழுத்துக் கலைஞர்கள் கருப்பு கருணா மற்றும் வெண்புறா சரவணன் மீதான தாக்குதல்களைப் போலவே கக்கூஸ் ஆவணப்பட இயக்கு நர் திவ்யபாரதியைக் குறிவைத்து, சாதி

அமைப்பினர் ஒரு தாக்குதலை முன்னெடுத்தனர். சில மாதங்கள்முன்பு காங்கிரஸ் தலைவர் ஜோதிமணி, பாஜக ஆட்சியை விமர்சித்து பதிவிட்ட கருத்துக்காகவும் கடும் வார்த்தைகளால் வசவுக்கு உள்ளாக்கப்பட்டார். இவை உடனடி எதிர்வினைகள் அல்ல; திட்டமிட்டு, ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேரைத்திரட்டி மனச்சோர்வுக்கு ஆளாக்கும்விதத்தில் நடத்தப்படும்ஆபாசவன்முறைத் தாக்குதல்களே.இவ்வகையில் தொடர்ந்து தாக்குதல்களுக்கு ஆளாகிவரும் பெண்கள்,பத்திரிகையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களைப் பட்டியலிட்டால்இச்செய்திக் கட்டுரையில்இடம் போதாது.

அமைப்புகளின் பின்னணி

இணையதளத்தில் கருத்துருவாக்கத்திற்காக ஒவ்வொரு கட்சியும், அமைப்பும் தனது செயல்பாடுகளை இணையப் பிரிவுகளின் வழியேயும் மேற்கொள்கின்றன. உலகம் முழுவதுமே, கட்சிகள்/அமைப்புகளால் இணையதளத்தில் செய்யப்படும் பிரச்சாரம் கருத்து உருவாக்கத்திற்கு நல்ல பலன் கொடுப்பதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதியன தேடி அறிந்துகொள்ளும் தன்மையுடைய பகுதியினரிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திவிட்டால் அது பிற பகுதிமக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும். இணையதளப் பிரச்சாரத்தில் ஈடுபடும் உத்திகள் எல்லா நேரத்திலும் சரியான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இல்லை. உண்மையை மறைத்து, திசைதிருப்பி, அச்சப்படுத்தி எதிர்க் கருத்தை மூழ்கடிக்கும்உத்திகளையும் பரவலாக பயன்படுத்துகின்றனர்.இதில் பெரும்பான்மை மதவெறியர்கள் கடைப்பிடிக்கும் உத்தி, ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாகும்.

‘ஐ ஏம் அ ட்ரோல்’ (நானொருஇணைய அடியாள்) என்ற ஆங்கிலப் புத்தகம் பாஜக/ஆர்எஸ்எஸ்பரிவாரங்களின் இணையதளப் படையில் ஒரு பகுதி என்ன செய்கிறது என்ற உண்மையை ஆதாரங்களுடன் அம்பலமாக்கியுள்ளது. மிகமோசமான மத வன்முறைக் கருத்துக்களையும், வன்மத்தையும் பரப்புவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் ஊதியத்திற்கும், ஊதியமில்லாமலும் அமர்த்தி - வேலைபார்ப்பதை பத்திரிகையாளர் ஸ்வாதி சதுர்வேதி தனது புலனாய்வில் வெளிக்கொண்டுவந்துள்ளார். மிக மோசமாக பெண்களைக் குறிவைத்து திட்டித் தீர்ப்பதும்,மத வன்முறையை தூண்டுவதற்காக பொய்யான படங்களை, செய்திகளை உருவாக்குவதும் கூட அவர்களின் வேலையாக இருந்தது. ஆபத்தான ஒருங்கிணைப்போடு இந்த வேலையைச் செய்துவருகிறார்கள் என்பதுதான் இங்கே குறிப்பிடவேண்டியதாகும்.

அறிவியல் சிந்தனை இல்லாதபோது

இணையத்தில் பரவலாக நிலவும் இரண்டு வகைத் தாக்குதல்களையும் இணைத்து ஒரு உத்தியை உருவாக்கியதுதான் ஒரு ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் வேலை. ஹிட்லர் காலத்தில் அது கோயபல்ஸ் தந்திரம் எனப்பட்டது. மோடியின் தேசத்தில் அது ‘போஸ்ட் ட்ரூத்’ எனப்படுகிறது. தாங்கள் எதை உண்மையாக்க விரும்புகிறார்களோ அதை பல திரிக்கப்பட்ட செய்திகள்மற்றும் படங்களின் வழியே கட்டமைப்பதுதான் அந்த ‘உத்தியாகும்’. அறிவியல் அடிப்படையிலான சிந்தனையை துவம்சம் செய்து, நீ நம்புவதுதான் உண்மை என்று கட்டமைப்பதுதான் அவர்களின் வேலை. மேலும் அவர்கள், ஆரோக்கியமான விவாதங்களை ஆபாசத்தால் நொறுக்குவார்கள்.

பொய்கள் மற்றும் திரிக்கப்பட்ட தகவல்களை வைத்து உண்மையைத் திசை திருப்புவார்கள்.சில மாதங்கள் முன்னர் மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையில் போஜ்பூரி மொழித் திரைப்படத்தின் காட்சி வெறியூட்டலுக்காக பயன்படுத்தப்பட்டது. தேவைக்கேற்ப சிலர் குஜராத் கலவரப்படங்களை எடுத்து மேற்குவங்கத்தில் காட்டினார்கள். மேலும் சிலர் வங்கதேச நாட்டில்எடுத்த வீடியோவை பயன்படுத்திக்கொண்டனர். தேவை கலவரம். அதற்கு எது தேவையோ அதனைஉருவாக்கினார்கள். மேற்குவங்கத்தில் அவர்கள் அம்பலப்பட்டார்கள். ஆனால், இந்தியாவெங்கும் இந்த உத்தி பலமுறை பயன்பட்டுள்ளது. கலவரங்களுக்கு அடிப்படையாக இருந்துள்ளது.

கோவை உதாரணம்

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே வாட்ஸ்அப் வழியாக தகவல்கள் பரவின.கொலை செய்தது ‘எம்’தான் என்று முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டனர். அடுத்த நாள் காலையில் உடற்கூராய்வு அறிக்கை வருவதற்கு முன், வன்முறைத் தாண்டவம் தொடங்கிவிட்டது. அதாவது கொலை பற்றி எந்தக் கவலையுமில்லாமல், கலவரமே நோக்கம் என்று செயல்படுவதில் எந்தவெட்கமும் இல்லை அவர்களுக்கு.

கொலையையும், கலவரத்தையும் சேர்த்தே அனைவரும் கண்டித்தனர். இப்போது, விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்முஸ்லிம் அடையாளம் கொண்டவர். உடனே, வாட்ஸ்அப் வழியே ‘‘போஸ்ட் ட்ரூத்’’ பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. கலவரம் நியாயமான ஒன்று போலவும், முஸ்லிம் கைது செய்யப்பட்டதால், கலவரம் செய்ததும், கடைகளை உடைத்ததும் சரிதான் என்றபடியும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. கலவரத்தைக் கண்டித்தவர்கள், கொலைக்கு ஆதரவானவர்கள் போல் சித்திரம் கட்டமைக்கப்படுகிறது. முஸ்லிம் என்ற அடையாளமே அவர்கள் எதிர்பார்த்தது. பிரச்சாரத்திற்கும், அரசியலுக்கும் அது தேவை. எனவே பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர்.

கேரளத்தின் எதிர்த் தாக்குதல்ஆனால் கேரளத்தில் இந்தஇணையக் கைக்கூலிகள் தினந்தோறும் அம்பலப்படுகிறார்கள். கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதை ஒட்டி, கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானபிரச்சாரம் நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டது. கேரளத்திலோ அவர்களின் ஒவ்வொரு செய்தியும் அடுத்த சில நிமிடங்களில் அம்பலப்பட்டது. பொய்ப் பிரச்சாரங்கள், திரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு உடனுக்குடன் பதில் கொடுத்தார்கள் சேட்டன்மார்கள். கண்ணூர் மாவட்டம் மட்டனூர் உள்ளாட்சித் தேர்தலில், பாஜகவுக்கு எதிர்பார்த்த ஓட்டுக்கூட கிடைக்கவில்லை என்பதும், அவர்கள்அம்பலப்பட்டதன் வெளிப்பாடாகும்.

தமிழகத்தின் களச் சூழல்

தமிழகத்தின் களம், போஸ்ட்ட்ரூத் பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டதோ என்பதுதான் இப்போது எழுகின்ற கவலையாகும். சமீபத்தில்நடிகர் விஜய் தொடர்பான தன்யா என்ற பத்திரிகையாளர் இணையத்தில் விமர்சனம் பதிவு செய்தார். அதற்கான எதிர்வினை சாதாரணமான ஒன்றாக இல்லை. சுமார் 35 ஆயிரம் பதிவுகள் திட்டமிட்ட வகையில் பதியப்பட்டன. ஒரு பிரபல நடிகரின் ரசிகர்கள், சினிமாச் செய்திகளை பகிர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு அது. விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றுவதும் அவர்களின் வேலைதான்.

ஆனால் அதற்காக அவர்களோ அல்லது அவர்களது பெயரிலோ பயன்படுத்தப்பட்ட சிலவார்த்தைகள் ஆபத்தான போக்கைக் காட்டின. தில்லியில் நிர்பயா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதைப் போல கொன்றுவிடுவோம் என்பது உள்ளிட்ட மிரட்டல்களை இளைஞர்கள் தயக்கமின்றி பகிர்ந்தார்கள். ஆபாச வசவுகள், ஆணாதிக்கச் சொல்லாடல்கள் சமூக வலைத்தளத்தில் வெகு நாட்களாகவே தொடர்கின்றன. ஆனால், இந்தமுறை அது திட்டமிட்ட வகையில், தயக்கமில்லாமல் நடைபெற்றது.தமிழகத்தில் பகுத்தறிவுச்சூழலையும், மதநல்லிணக்கத்தையும், சமத்துவ உணர்வையும் பரப்பவிரும்புவோர், முன்னிலும் வேகமாக இளையோரைச் சென்றடைய வேண்டும். வகுப்புவாதிகள் விரும்பும் ஆபத்தான உத்தியை தடுக்க அது அவசியம். மிக அவசரம்.

நன்றி தீக்கதிர்

Comments