பெங்களூரு சிறை ரகசியங்கள் வெளியானது எப்படி?


சசிகலாவின் அப்பட்டமான விதிமீறல்கள் 117 நாட்களில் 82 பேருடன் சந்திப்பு
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டு இருப்பதும், இதற்காக டிஜிபி சத்யநாராயண ராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதும் மத்திய அரசுக்கு 3 மாதங்களுக்கு முன்பே தெரியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவின் உதவியாளர் பிரகாஷ், தில்லி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின் மூலம் இந்த தகவல்கள் மத்திய அரசுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, கடந்த 5 மாதமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை டிஐஜியான ரூபா, கடந்த வாரம் அளித்த பேட்டியில், பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலாவுக்கு 5 அறைகள் கொண்ட தனி வளாகம், தனிச் சமையல், தொலைக்காட்சி, சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவுக்கு, சசிகலா தரப்பில் ரூ. 2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதற்கேற்பவே, பெங்களூரு சிறையில் சசிகலா சிறைவாசிக்கு உரிய யூனிபாமில் இல்லாமல், வண்ண உடைகளில் சுதந்திரமாக வலம் வருவது போன்ற வீடியோ படக்காட்சிகள் வெளியாகின.
ஆனால், டிஐஜி ரூபா, பாஜகவின் ஆதரவாளர்; கர்நாடக மாநில சித்தராமையா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்காகவே சசிகலா விவகாரத்தை அவர் கையில் எடுத்திருக்கிறார்; ரூபா பின்னணியில் பாஜக உள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதற்கேற்பவே, ரூபாவுக்கு ஆதரவாக கர்நாடகத்திலும், நாடாளுமன்றத்திலும் பாஜக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். பாஜக-வைச் சேர்ந்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோர் ரூபாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
தமிழக ஆளும் கட்சியான அதிமுகவை தொடர்ந்து தங்களின் பிடியில் வைத்திருக்க, சசிகலா விவகாரம் உதவும் என்பதுடன், இவ்விவகாரத்தால் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு ஏற்படும் அவப்பெயர், அம்மாநிலத்தில் தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்ற சதித்திட்டம் உள்ளடங்கி இருப்பதாகவும் பார்க்கப்பட்டது.

இந்நிலையிலேயே, பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டு இருப்பதும், இதற்காக டிஜிபி சத்யநாராயண ராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதும் மத்திய அரசுக்கு 3 மாதங்களுக்கு முன்பே தெரியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் என்பவர் கொடுத்த வாக்குமூலம்தான், சசிகலா சிக்குவதற்கு காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது. அது பற்றிய விவரம் வருமாறு:
அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தை பெற தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு கடந்த ஏப்ரல் மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் டிடிவி தினகரனின் நண்பர்களில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த மல்லிகார்ஜூனா என்பவரை தில்லி போலீசார் விசாரித்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்த போது கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாசுடன், மல்லிகார்ஜூனா பலமுறை பேசியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தில்லி போலீசார் பிரகாஷ் மீது சந்தேகப்பட்டனர். பிரகாஷ் மூலம்தான் ஹவாலா பணம் ரூ. 10 கோடி தில்லிக்கு வந்திருக்கும் என்று நினைத்தனர். அதை உறுதிப்படுத்த பிரகாஷை தில்லிக்கு வரவழைத்து விசாரித்தனர்.
அப்போது பிரகாஷ், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். எனினும், தினகரன் மூலம் பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்கு ரூ. 2 கோடி தினகரன் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
306-வது சட்டப்பிரிவின் கீழ், பிரகாஷின் இந்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட தில்லி போலீசார், இதுபற்றி மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகுதான் சசிகலா தரப்பில் இருந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு லட்சமாக பணம் கொடுப்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த ஏற்பாடுகள் நடந்ததாகவும், டிஐஜி ரூபாவின் அறிக்கை அதற்கு துருப்புச் சீட்டாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் சசிகலாவை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள வீடியோ படங்கள் ஆதாரமாக மாறி உள்ளன. அந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு எடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகளை பதிவு செய்வதற்கு கைதிகளே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த கைதிகளையே கர்நாடக அரசு வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

தகவல் தீக்கதிர்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்