இனி உங்கள் வருமானத்தை செலவழித்தே ஆக வேண்டும்!

மூட்டை மூட்டையாய் கட்டிப் பதுக்கி வைச்சிருக்கிறவனுக்கெல்லாம் இப்படித்தான்யா பாடம் புகட்டணும் என்று சிலஅறிவுஜீவிகளும், ‘தேசபக்திக்காரர்களும்’ சந்தோசமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களுக்கும், கறுப்புப் பண முதலைகளுக்கும், பெரும் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளுக்கும் உள்ள உறவு யாரும் மறுக்கமுடியாத உறவாகும்.

சொந்த அரசியலைத்தாண்டிய இந்தப் பொருளாதார உறவுகள் நமது மக்களுக்குதெரியாத இரகசியங்களுமல்ல. அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உடனே அறிவிக்கப்பட்ட செயல் அல்ல 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள்செல்லாத அறிவிப்பு. கடந்த ஆறு மாதமாய் திட்டமிடப்பட்டது என இப்போது, தகவல் கசிகிறது எனில் என்ன அர்த்தம்? பெருமுதலாளிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் தங்களிடம் உள்ளபணத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றே அர்த்தம்.ஏனெனில், கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றிக்கொள்ள அந்நிய மூலதனம் என்ற பெயரில் ஆயிரத்தெட்டு வழிமுறைகளை அரசே சட்டப்படி செய்துதருகிறது எனும்போது, அதனை செய்துகொள்வதுதானே சுலபமானது.


இந்தியப்பெரு முதலாளிகள் வெளிநாடுகளில் அந்நிய நாட்டு மூலதனமாக கொண்டு சேர்க்கும் பணம் கடந்த சில வருடங்களில் மட்டும் கடும்உயர்வை அடைந்திருக்கிறதே, ஏன், என்னபின்னணி? இந்தியப்பிரதமர் உலக நாடுகளுக்கெல்லாம் சுற்றி வெளிநாட்டு மூலதனத்தை இந்தியாவிற்குக் கொண்டு வருகிறேன் என்கிறார். ஆனால், 1.86 பில்லியன் டாலர் மூலதனம் 2016ஜூனில் மட்டும் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறது. 2015 ஜூலையில் 2.3 பில்லியன் டாலராகவும், ஜூன் 2015ல் 1.92 பில்லியன் டாலராகவும், மே 2016ல்2.69 பில்லியன் டாலராகவும் சென்றுள்ள இந்த மூலதனம் முழுவதும் வெள்ளைப்பணமா என்ன? அதே போன்று 9.03 பில்லியன் டாலர் மொரீஷியசில் இருந்தும், 6.74 பில்லியன் டாலர் சிங்கப்பூரில் இருந்தும் 2014-15 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அந்நிய மூலதனம் என்ற பெயரில் வந்து இறங்கியிருக்கிறது. இது முழுவதும் வெள்ளைப்பணமா என்ன? இந்தியாவில் இருந்துகறுப்பில் கிளம்பி இந்நாடுகள் வழியாக வெள்ளையாக மாறிவருகிறது.

இந்நாடுகளில் இருந்து வரும்அந்நிய மூலதனம் 52 சதத்தை ஆய்வு செய்து இதைத்தடுக்கும் உறுதியுள்ளதா மோடி அரசுக்கு?ஆண்டுக்கு ரூ.75,000 கோடியாக இருந்த வெளிநாட்டு மூலதன வரம்பை ரூ.1,25,000 கோடியாகஉயர்த்தி வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கியின்உத்தரவின் பயன் யாருக்குப் போய்ச்சேர்ந்துள்ளதெனவும், இப்படியாக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் பணம் யாருடைய பணமென்றும் இந்திய மக்களுக்கு அறிவிப்பாரா மோடி?கறுப்புப்பணம், கள்ளப்பணம், போலித்தாள்கள் என பலப்பல வார்த்தைகள் சொல்லப்படுகின்றன.

ஊழல் அரசியல்வாதிகளும், முதலாளிகளும் நூற்றுக்கணக்கான கோடிகளை வீடுகளிலும், அலுவலகங்களிலும், நிலங்களில் குழி தோண்டியும் பணமாக பதுக்கி வைத்திருப்பார்கள் என்றே நம்புகின்றனர் பாமர ஜனங்கள். கைக்குப் பணம் வந்து சேர்ந்த ஓரிரு வாரங்களுக்குள் அதைச்சொத்தாகவும், மூலதனமாகவும், வெளிநாட்டு வங்கியிருப்பாகவும், வெளிநாட்டு சொத்து மூலதனமாகவும் மாற்றிக்கொள்வதற்கென்றே மாபெரும் ஏற்பாடுகள் எல்லாம் இருக்கும் நாட்டில், பணமாக பதுக்கி வைக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லையென்பதே உண்மை. அதே நேரம். பதுக்கலில் ஈடுபட்டுள்ள யார்வீட்டிலும் பணமாக இருக்காது என்று மொத்தமாக கூறமுடியாது.

உதாரணத்திற்கு பத்து கோடிவரை ஒருவர் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது இந்தப் பத்துக்கோடியை இருநூறு பேரை வைத்து, ஐம்பது நாட்களுக்குள் வங்கியில் மாற்றுவது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலையல்லவே! சரி, ஒருவரால் தன்னிடம் இருக்கும் பத்துகோடியை மாற்றமுடியவில்லை என வாதத்துக்கு வைத்துக்கொள்வோம். இப்போது வங்கியில் வந்து அடையாள அட்டைகாண்பித்து, படிவம் எழுதிக்கொடுத்து வரிசையில் நின்று கட்டிவிடுவாரா? பத்து கோடிக்கு ஆசைப்பட்டு வங்கியில் கட்டினால், நாளைஅவரது மொத்தச்சொத்தையும் வரிமான வரித்துறை சுரண்டி எடுத்துவிடும் என்று தெரியாதா அவருக்கு? அத்தனை நேர்மையான, பயந்த, நல்லமனசுள்ள ஊழல் அரசியல்வாதிகளும், பண முதலைகளும் இந்தியாவில் இருக்கிறார்களா என்ன? யாரை நம்பச்செல்கிறார் மோடி? அதற்காக, வங்கிகளுக்கு பணமே வராது என்று சொல்லவில்லை. 500, 1000 ரூபாய் தாள்கள்நிச்சயம் ஐம்பது நாள்களும் வந்து குவியும்.

ஆனால், யாரிடமிருந்து வரும்? மகளின் கல்யாணத்திற்காக பல வருடமாய் சேர்த்து வைத்திருப்பார்ஒரு ஏழைத்தந்தை, நகை வாங்க வேண்டும்என்பதற்காக பல்லாண்டாய் சேர்த்து வைத்திருப்பார் ஓர் ஏழைத்தாய். வியாபாரச்சுற்றுக்காக மொத்த வியாபாரிக்கு கட்டுவதற்காக ஒரு சாதாரண வியாபாரி சில லட்சங்களில் வைத்திருப்பார். காய்கறிக்கடைக்காரர், மளிகைக் கடைக்காரர், மருந்து விற்பனையகங்கள் வைத்திருப்போர், சாலையோர வியாபாரிகள், தெருக்களில் அலைந்து விற்பனை செய்வோர், சிறு உணவகங்கள் வைத்திருப்போர் என இவர்களது கையிருப்பில் உள்ள சிற்சில லட்சங்கள் இப்போது வங்கிக்கு போய்ச்சேரும். ஆனால், அவர்கள் அதை உடனே எடுக்க முடியாது. வங்கியின் இருப்புஉயரும். 2017, ஜனவரியில் மோடி அறிவிப்பார் இத்தனை லட்சம் கோடிகள் கறுப்புப்பணத்தை நான்கைப்பற்றியுள்ளேன் எனப் பெருமையோடு.

ஆனால், அது யாருடைய பணம்? கறுப்புப் பணம் எப்படி உருவாகிறது என்பதைஅறிந்த அரசு, அது உருவாகும் வழிமுறைகளையெல்லாம் அப்படியே கண்டும், காணாமல் விட்டுவிட்டு இப்போது கறுப்புப்பணம் என்று பாய்ந்திருப்பது நடுத்தர மற்றும் சிறு குறு தொழில்முனைவோர் மற்றும் சிறு வியாபாரிகள் மீதுதான். பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு மட்டும் பெரு முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன் ரூ.1.10 லட்சம் கோடி. வராக்கடன் 8.5 லட்சம் கோடி ஆக பெரு முதலாளிகளிடம் இருந்து அரசுக்கு வரவேண்டிய இந்தப் பணமெல்லாம் கறுப்பு பணமாகஅவர்களிடம் குவிந்த பணம்தான் என்பதில் சந்தேகமே கொள்ளத்தேவையில்லை. அரசின் சலுகையால் மிச்சமான பணம் என்றோ அல்லது நான்வங்கிக்கு கட்ட வேண்டிய பணம் என்றோ எந்தப்பெரு முதலாளியும் கணக்குக்காட்டப்போவதில்லை.

அதை அவர்கள் வெள்ளையாக மாற்றிக்கொள்ளத்தானே சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. ஆக, சுமார் பத்து லட்சம் கோடிபணம் இந்த வகைகளில் மட்டும் சில முதலாளிகளிடம் மட்டும் குவிந்திருக்கிறதே, அதைப்பறிக்க முடியுமா மோடியால்?இப்போது உண்மையில் என்ன நடக்கிறது?நமது பணத்தையெல்லாம் வங்கிக்கு சேகரிக்கிறார் மோடி. அதை நாம் எடுத்துக்கொள்ள இன்னும் சில மாதம் ஆகும். அப்படியெனில், அந்தப்பணம் யாருக்குப் பயன்படும்? இனி உங்கள் வருமானத்தையெல்லாம் நீங்கள் செலவழித்தே ஆகவேண்டும்.

நன்றி தீக்கதிர்
தொகுப்பு.செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments