அம்மா படத்தை அப்புறம் ஒட்டலாம் - கிழிந்து கிடக்கும் வாழ்க்கையை ஒட்டுங்கள்!

 
சென்னை, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை நிலைகுலைந்து கிடக்கிறது. வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு செல்பவர்களை, எங்கே தங்கப் போகிறீர்கள் என்று கேட்டால், ‘தெரிந்தவர்கள் வீடு இருக்கிறது. அங்கு தங்கப் போகிறோம்’ என்பார்கள். இப்போது அந்த வீடுகள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் அனைத்துப் பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வசதிஉள்ளவர்கள் வீடுகளில் வெள்ளம் புகுந்தது என்றால் ஏழை, எளிய மக்களின் வீடுகள் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.
இந்த பேரிழப்புக்கு இடையில் ஆங்காங்கே பொங்கி எழும் மனிதநேயம் ஆறுதல் அளிக்கிறது. சாதி,மத வித்தியாசமின்றி மக்கள் ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சென்னையை நோக்கி உதவிக் கரங்கள் நீளுகின்றன. ஆனால் தாங்க முடியாத இந்த சோக வேளையிலும் ஆளுங்கட்சியினரான அதிமுகவினர் அடிக்கும் லூட்டிகளும் விளம்பர வெறியும் , நிவாரணத்திலும் `ஆட்டையை போடுவதில்’ காட்டும் அதீத ஆர்வமும் அதிர்ச்சியளிக்கிறது. வெள்ளப்பகுதியை பார்வையிட வந்த முதல்வர் ஜெயலலிதா வேனில் அமர்ந்தபடி, நனைந்து கொண்டிருந்த மக்களைப் பார்த்து ‘வாக்காள பெருமக்களே’ என்று அழைத்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை.

அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிவாரணப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
 அதாவது அரசின் அலட்சியம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலஹாசனை ஐந்தாறு பக்க அறிக்கை விட்டு வறுத்து எடுத்துவிட்டார். என் வரிப்பணம் எங்கே போகிறது என்று கேட்ட ஒரே குற்றத்திற்காக, கருத்து கந்தசாமி, குழப்ப பிசாசு, தீய சக்தி என்றெல்லாம் பட்டம் கொடுத்து மகிழ்ந்து இருக்கிறார். ஓ.பி இந்த அறிக்கையை எழுத எடுத்துக் கொண்ட நேரத்தில் இரண்டு தெருக்களுக்குச் சென்று உதவியிருக்கலாம்.தமிழகத்தில் அரசியல் கட்சிகள் டிஜிட்டல் போர்டு வைப்பதென்றால் ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள். ஆனால் அதிமுகவினருக்கு மட்டும் அது பொருந்தாது. மாநிலம் முழுவதும் அதகளம் செய்து வருகிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் பாகுபலி பட போஸ்டரை உல்டா செய்து, அந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் பாகுபலியை தண்ணீரில் இருந்து பாதுகாத்தது போல அம்மா தனியொருவராக தமிழகத்தை பாதுகாத்துவிட்டதாக சித்தரித்து டிஜிட்டல் போர்டு வைத்துள்ளனர் அதிமுகவினர்.

இன்னமும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. மறுபுறத்தில் குடிநீருக்கும், பாலுக்கும், ஒரு வாய் சோற்றுக்கும் படும் பாடும் சொல்லும் தரமல்ல. அந்த மக்களை இப்படி கிண்டல் செய்வது குரூரமானது.மறுபுறத்தில் நிவாரணப் பொருள்களை யார் கொடுத்தாலும் அதில் அம்மா படம் ஒட்டித்தான் கொடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் நிர்ப்பந்திக்கிறார்களாம். தன்னார்வ நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் சென்னைக்கு தங்களது சொந்த பொறுப்பில் பொருள்களை அனுப்பினாலும் அதில் அம்மா படம் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால்தான் மக்களிடம் கொடுக்க அனுமதியாம். இதனால் பொருள்கள் தருவது தாமதமாகிறது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. உடனடியாக அதிமுக தலைமை இதை மறுத்திருக்கிறது. ஆனால் அதிமுகவினர் இவ்வாறு நிர்ப்பந்திப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.கர்நாடக மாநிலத்திலிருந்து சில நல்ல உள்ளங்கள் தண்ணீர் பாட்டிலை சென்னைக்கு கொண்டுவந்துள்ளனர். அம்மா படம் ஒட்டாமல் குடிநீர் பாட்டிலை கொண்டுசென்றால் பாட்டிலுக்கு ரூ. 5 அபராதம் என்று அவர்களிடம் வசூலித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுகவினர் கொடுத்துள்ள டோக்கனை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகிறதாம். இடியாத வீடுகளாக இருந்தாலும் அதிமுகவினர் சொல்லிவிட்டால் நிவாரணம் உண்டு.






















ஆனால் வீடு இடிந்தாலும் ஆளுங்கட்சி சொல்லவில்லையென்றால் நிவாரணம் இல்லை. தரப்படும் நிவாரணத்திலும் ஒரு பகுதி சுருட்டப்படுகிறதாம். பிற மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டி நிவாரணப் பொருள்கள் பெறுவதைக் கூட முறையாகப் பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் தாமதங்கள் செய்யப்படுகின்றன. 
                         நிவாரண கப்பல்களிலிருந்து பொருள்களை விநியோகிப்பதிலும் தாமதம்.ஒரு இடத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்க உணவுப் பொட்டலங்கள் தயாரித்தார்களாம். அதில் ஒட்டுவதற்கு அம்மா படம் உடனடியாக கிடைக்காததால் அதற்காக அலைந்திருக்கின்றனர். இதற்குள் தயாரித்த உணவு கெட்டு குப்பையில் கொட்டப்பட்டிருக்கிறது.



அம்மாவின் ஆணைப்படிதான் சேலம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அம்மாவின் உத்தரவு நகல் ஒன்றை அனுப்புமாறு தகவல் உரிமை ஆர்வலர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.அதிமுக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நோகடிக்காதீர்கள். நிவாரணப் பணியில் அரசியல் வேண்டாம் என்று நீங்கள்தான் கூறினீர்கள். ஆனால் நீங்கள் செய்வது அநாகரீக அரசியல்.





தகவல் தீீக்கதீர்
தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments