சென்னை, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை நிலைகுலைந்து கிடக்கிறது. வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு செல்பவர்களை, எங்கே தங்கப் போகிறீர்கள் என்று கேட்டால், ‘தெரிந்தவர்கள் வீடு இருக்கிறது. அங்கு தங்கப் போகிறோம்’ என்பார்கள். இப்போது அந்த வீடுகள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் அனைத்துப் பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வசதிஉள்ளவர்கள் வீடுகளில் வெள்ளம் புகுந்தது என்றால் ஏழை, எளிய மக்களின் வீடுகள் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.
இந்த பேரிழப்புக்கு இடையில் ஆங்காங்கே பொங்கி எழும் மனிதநேயம் ஆறுதல் அளிக்கிறது. சாதி,மத வித்தியாசமின்றி மக்கள் ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சென்னையை நோக்கி உதவிக் கரங்கள் நீளுகின்றன. ஆனால் தாங்க முடியாத இந்த சோக வேளையிலும் ஆளுங்கட்சியினரான அதிமுகவினர் அடிக்கும் லூட்டிகளும் விளம்பர வெறியும் , நிவாரணத்திலும் `ஆட்டையை போடுவதில்’ காட்டும் அதீத ஆர்வமும் அதிர்ச்சியளிக்கிறது. வெள்ளப்பகுதியை பார்வையிட வந்த முதல்வர் ஜெயலலிதா வேனில் அமர்ந்தபடி, நனைந்து கொண்டிருந்த மக்களைப் பார்த்து ‘வாக்காள பெருமக்களே’ என்று அழைத்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை.
