ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கி சாதனைகள் படைத்த மாவீரருக்கு கோவில் கட்டி வழிபடும் கிராமமக்கள்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கிப்பிடித்து சாதனை செய்து உயிர்நீத்த மாடுபிடி வீரரின் நினைவாக கோவில் கட்டியுள்ள அப்பகுதி மக்கள் அவரை தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
சுமார் 300ஆண்டுகளுக்கு முன்பாக மாமதுரை நகரின் மேற்கு தொலைவில் விவசாய செழிப்பு மிகுந்த இடத்திற்கு கருத்தமாயன் என்பவரின் குடும்பத்தினர் வந்து தங்கியுள்ளனர்.இதை தொடர்ந்து கருத்தமாயனின் உறவினர்களும் அந்த செழிப்பு நிறைந்த பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதையடுத்து சில ஆண்டுகளில் அந்த நிலப்பகுதி மக்கள் அதிகமாக வசித்திடும் சொரிக்காம்பட்டி என்ற கிராமமாக மாறியிருக்கிறது.இந்த ஊரின் முத்தகுடியான கருத்தமாயனும் மக்களும் ஒன்றிணைந்து விவசாய பணிகளில் தீவிரம் காட்டியதுடன் கால்நடைகள் வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.வயலில் உழைத்த களைப்பு நீங்கிடவும் விவசாய பெருமக்களுக்கு உற்சாகம் செய்திடவுமான விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறியிருந்தது.அதன்படி இங்கு நடந்திட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் கருத்தமாயனின் நான்கு மகன்களில் கடைசி மகனான அழகத்தேவன் என்பவருக்கு காளைகளை அடக்குவதில் எல்லையில்லா ஆர்வம் இருந்துள்ளது.இவருடைய மாடுபிடி ஆர்வத்தை ஊக்குவித்து போட்டிகளில் பெற்றிடும் வெற்றிகள் அனைத்திற்கும் அழகத்தேவனின் உயிர்நண்பனான சமயன் என்பவர் திகழ்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றிடும் பல்வேறு வகையான காளைகளின் குணாதிசயங்களை ஆய்வு செய்து அதனை மடக்கிப்பிடிக்கும் கலையினை வளர்த்துக் கொண்ட அழகத்தேவனும் அவரது நண்பர் சமயனும் சிறந்த மாடுபிடி வீரர்களாக அக்காலத்தில் உருவாகியிருந்தனர்.இது எவரிடமும் பிடிபடாத மாடு என்று உரிமையாளர்களால் சவால்விடப்படும் மாடுகளை தன்னுடைய தனித்திறமையால் மடக்கிப்பிடிப்பது அழகத்தேவனின் தனிச்சிறப்பாகும்.இன்றைய அலங்காநல்லூரைப் போன்று அன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டிற்கு பெயர்போன ஊராக விக்கிரமங்கலம் திகழ்ந்துள்ளது.இந்நிலையில் விக்கிரமங்கலம் ஜல்லிக்கட்டில் நின்று விளையாண்ட பல்வேறு காளைகளை மின்னல் வேகத்தில் அழகத்தேவன் மடக்கிப்பிடித்து தொடர் வெற்றிகளை குவித்து வந்துள்ளார்.இதனால் அழகத்தேவனின் வீரமும் காளைகளை அடக்கிடும் திறமையும் மாமதுரையைச் சுற்றிலும் பரவியுள்ளது.அழகத்தேவன் பங்கேற்றிடும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியையும் காண்தற்காக அக்காலத்திலே ஒரு ரசிகர் பட்டாளமே அவருக்கு இருந்துள்ளது.இதனை கண்டு பொறாமை கொண்ட அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூத்த மாடுபிடி வீரர்கள் ஒன்று சேர்ந்து அழகத்தேவனை நீண்காலமாக கண்காணித்து அவரது யுக்திகளை கணித்துள்ளனர்.
இதையடுத்து அழகாத்தேவனை வீழ்த்துவதற்காக அடங்காத காளையொன்றை அந்த கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் தயார் செய்தனர்.அந்த காளைக்கு அழகத்தேவனின் தனித்துவத்திற்கு எதிரான பாய்ச்சலை சொல்லிக்கொடுத்து பக்குவப்படுத் தியிருந்தனர்.மேலும் தங்களது மாட்டை அடக்குபவருக்கு தங்களது கிராமத்தின் மூத்தகுடியின் பெண்ணை திருமணம் செய்து தருவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.இந்த சூழ்ச்சியை அறியாத மாடுபிடி வீரரான அழகத்தேவனும் அவரது உயிர்நண்பனுமான சமயனும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர்.அப்போது மூத்த மாடுபிடி வீரர்களால் தயார் செய்யப்பட்ட முரட்டுக்காளை மட்;டும் அழகத்தேவனிடம் சிக்கிடாமல் போக்குகாட்டி விளையாடியுள்ளது.ஒருகட்டத்தில் விடாமுயற்சியுடன் வீறுகொண்டு எழுந்த அழகத்தேவனை அந்த காளை வயிற்றில் குத்தி குடலை சரியச் செய்துள்ளது.இருப்பினும் குடல் சரிந்து ரத்தம் வெள்ளமாக சிதறிய நிலையிலும் தனது இறுதிகட்ட சூட்சுமத்தை பயன்படுத்திய அழகத்தேவன் அடங்காத காளையை அடக்கி மண்ணில் சாய்த்துவிட்டு தானும் மண்ணில் சாய்ந்துள்ளார்.இதனை கண்ட அவரது நண்பர் சமயன் தான் உடுத்தியிருந்த துணியை கிழித்து  அழகத்தேவனின் வயிற்றில் கட்டி அவரை தனது தோழில் தூக்கிப் போட்டுக்கொண்டு சொரிக்காம்பட்டி கிராமத்திலுள்ள நந்தவனம் எனும் தோட்டத்திற்கு ஓட்டமாக ஓடிவந்து சேர்த்துள்ளார்.
தனது மகன் அழகத்தேவன் ஜல்லிக்கட்டில் காயமடைந்த தகவலறிந்த அவரது தந்தை கருத்தமாயன் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் நந்தவனம் தோட்டத்திற்கு திரண்டு வந்து ஆறுதல் தெரிவித்தனர்.பின்னர் தொடர்சிகிச்சை மேற்கொண்டதன் பலனாக அழகத்தேவன் உடல்நலம் பெற்றிட ஆரம்பித்துள்ளார்.இதனையறிந்த பக்கத்து கிராமத்து மூத்த மாடுபிடி வீரர்கள் அழகத்தேவன் மீண்டு வந்தால் தங்களது மூத்தகுடியின் பெண்ணை திருமணம் முடிக்க கேட்டுவிடுவான் என்று பயந்து அழகத்தேவனை சதியின் மூலம் கொன்று விடமுடிவு செய்தனர்.இதற்காக அழகத்தேவன் வைத்தியம் செய்து வந்த இடத்திற்கு தங்களது ஆட்களை ஆள்மாற்றி அனுப்பினார்கள். ஆள்மாறாட்டம் செய்து நந்தவனம் சென்றவர்கள் அழகத்தேவனுக்கு குடல் சரிந்த இடத்தில் கள்ளிக் கொழுந்தினை வைத்து மருந்து கட்டியுள்ளனர். இதனால் கள்ளியின் விஷம் சிறிது சிறிதாக அழகத்தேவனின் உடலில் கலந்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.அப்போது அடங்காத காளை களையெல்லாம் தனது மதிநுட்பத்தால் மடக்கிப்பிடித்த மாவீரன் அழகத்தேவன் தனது கடைசி ஆசையாக தனக்கு சொரிக்காம்பட்டி நந்தவனத்தில் கோவில் கட்ட வேண்டும்,அதன் மூலமாக ஜல்லிக்கட்டு பற்றிய விழப்புணர்வு வரும் சந்ததியினருக்கு தெரியவந்திடும் என்று தனது கிராமத்தினரிடம் கூறிவிட்டு உயிர் துறந்துள்ளார்.
இதையடுத்து மாடுபிடி மாவீரன் அழகத்தேவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிடும் வகையில் அவரது வாரிசுகளும்,கிராமத்தினரும் ஒன்றிணைந்து சொரிக்காம்பட்டி கிராமத்தில் அழகிய கோவிலை எழுப்பி இன்றும் வழிபட்டு வருகின்றனர்.இந்த கோவிலில் காளையை அழகத்தேவன் அடக்குவது போன்ற சிலை வைக்கப்பட்டு அதனை அப்பகுதி மக்கள் வணங்கிச் செல்கின்றனர்.மேலும் நட்பின் இலக்கணமாக அழகத்தேவனுடன் இருந்த சமயனுக்கும் அங்கே சிலை வைக்கப்பட்டள்ளது.இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜல்லிக்கட்டில் அவர்களது வீரத்தையும் விவேகத்தையும் போற்றிடும் வகையில் இருவரும் இன்றுவரை அப்பகுதி மக்களின் நெஞ்சங்களில் நீங்காமல் உள்ளனர்.அதே போல் குடல்சரிந்த அழகத்தேவனை தனது தோளில் சமயன் தூக்கிச் சென்ற போது அவர்கள் தாகசாந்தி செய்திட இளைப்பாறிய இடங்களில் கற்கள் போடப்பட்டு மக்கள் வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.வீரம் விளைந்த மாமதுரை மண்ணில் அடங்காத முரட்டுக்காளைகளை அடக்கி சாதனை படைத்து சதியினால் உயிர்நீத்த மாடுபிடி வீரர்களின் முதல்வனான அழகத்தேவனின் கோவிலில் வழிபட்டு சென்றால் ஜல்லிக்கட்டில் போட்டிகளில் வெற்றி உறுதி என்பதால் சொரிக்காம்பட்டி கிராமத்திற்கு வந்து அழகத்தேவன் கோவிலில் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, அழகத்தேவன் போன்ற மாவீரர்களின் தியாகத்தினால் இன்றுவரை அழியாமல் உள்ளது என்பதே நிஜம்....
- செல்வராஜ்.

Comments