தமிழ்சினிமா எப்படி இருக்கிறது? நடிகர் நாசருடன் நேர்காணல்:


நடிகர் நாசரை பற்றி சொல்லித்தெரியவேண்டிதில்லை...பல்துறை வித்தகர்.நடிகர் சங்க பொறுப்பை ஏற்று அதை திறம்பட செய்துவருபவர்.சினிமைவை  நேசிக்கிற உண்மையான கலைஞகர்களில் அவரும் ஒருவர்.சினிமாவை பற்றிய கேள்விகளுக்கு அவரிடம் மட்டுமே சரியான பதில் கிடைக்கும்...


நிகழ்காலத்தில் தமிழ்சினிமா எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?
தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி வருகிறது. ஆனால் அது வளர்ச்சியா என்பது கேள்வி. நான் சினிமாத்துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. நான் இந்தச் சினிமாவைப் பார்க்கின்ற பார்வைக்கும் உங்கள் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் இங்கிருந்து வருகின்ற நிறைவான படைப்புகளை மட்டும் வைத்தே சினிமா உலகத்தை மதிப்பிடுகிறீர்கள். நான் உள்ளிருந்து இந்தச் சினிமாவைப் பார்க்கிறேன். அதாவது படம் உருவாகிற விதம். இந்த முப்பது வருடமாக இந்தச் சினிமாவை தயாரிக்கின்ற முறை எப்படியெல்லாம் மாறிக்கொண்டு வருகின்றது என்பதை பார்த்துக் கொண்டு வருகிறேன். ஆகையால் என்னுடைய பார்வை வேறு உங்களுடைய பார்வை வேறு.

என்னுடைய பார்வையில் இங்கு வளர்ச்சி கிடையாது. ஆனால் மாற்றங்கள் நிறைய நடந்தவண்ணம் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் முப்பது வருடத்திற்கு முன்னால் சென்னைக்கு வந்திருந்தால் சாலைகளில் இவ்வளவு நெருக்கடிகள் இருக்காது. காவலர்கள்தான் சிக்னலில் நிற்பார்கள். மக்கள் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றினார்கள். இன்றைக்கு பெரிய மாற்றம் நடந்திருக்கிறது. பென்ஸ்,`பிஎம்டபிள்யூ இங்கு தயாரிக்கப்படுகிறது. பல பகட்டான கார்கள் இந்தச்சாலைகளில் ஓடுகின்றன. ஆனால் சிக்னலில் என்ன நடக்கிறது? இதில் எது வளர்ச்சி? சாலைகளில் பி.எம்.டபிள்யூவும், பென்ஸ்`கார்களும் ஓடுவது வளர்ச்சியா? அப்படியெனில் யாரும் சாலை விதிகளைப் பின்பற்றுவதில்லை என்பது வளர்ச்சியா? இதேதான் சினிமாவிலும்.

நான் 1984-85 காலக்கட்டங்களில் நடிக்க வந்தேன். ‘சைலன்ஸ்!’`என்று சொன்னால் படப்பிடிப்புத்தளத்தில் அனைவரும் அமைதியாகத்தான் இருப்பார்கள். இன்றைக்கு அதை எதிர்பார்கக முடியாது. இது மாற்றமா? வளர்ச்சியா? என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அப்போது ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கும்பொழுது குறிப்புகளை தொடர் வர்ணனைகள் போல் தருவதை இயக்குனரும் அனுமதிக்க மாட்டார். நடிகரும் விரும்ப மாட்டார். ஆனால் இன்று நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும்பொழுது இடதுபக்கம் பார், வலது பக்கம்பார், அப்படியே படியில் ஏறிநின்று திரும்பிப்பாருங்கள் என்று கிரிக்கெட் கமெண்டரிகள் போல சொல்லித் தருகிறார்கள். இப்படித்தான் நடிகனிடமிருந்து நடிப்பை வாங்குகிறார்கள். இது மாற்றமா? வளர்ச்சியா?

அன்றைக்கு ரஜினிகாந்த் படமேயானாலும் நாற்பது பேர்தான் படப்பிடிப்புக்குழுவில் இருப்பார்கள். மூன்றே மூன்று வண்டிகள்தான் படப்பிடிப்புத்தளத்தில் இருக்கும். இன்றைக்கு சின்ன படமானாலும் 120பேர் இருக்கிறார்கள். பத்துப் பதினைந்து வண்டி ஓடுகின்றது. இதுமாற்றமா, வளர்ச்சியா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். படைப்பைப் பார்ப்பது உங்கள் பார்வை. அதே பார்வையை எப்படி நான் பார்க்க முடியும்? இந்தத் தலைமுறையில் இருப்பவர்கள் பழையது எல்லாமே, தேவையற்றது என்றுதான் நினைக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்விதமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டன? எந்தெந்த விஷயங்களை இந்தத் தலைமுறையிலும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று உணரவில்லை.

50களில் பயன்படுத்திய கேமராக்களைப் பார்த்தால் இன்று இருப்பது போல அல்லாமல், என்னபதிவு செய்யப்படுகிறது என்பதைக்கூடபார்க்க முடியாது. ஒரு படப்பிடிப்பை, காட்சியை பதிவு செய்து முடித்தவுடன் 10 நாட்கள் கழித்து லேபிலிருந்து பிரிண்ட் போடப்பட்டு வரும். அந்த பத்து நாட்களும் ஒளிப்பதிவாளர் தூங்க மாட்டார். ஒருவேளை படத்தில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி சாருக்கு பாதி உருவம்தான் பதிந்திருக்கிறது, அல்லது மைக் கேமராவின் சட்டகத்தினுள் வந்துவிட்டது என்றெல்லாம் ஏவிஎம் செட்டியாரிடம் போய் சொன்னால் கொன்னுடுவார். சிவாஜி சாருக்கான கால்ஷீட் கேட்டு வாங்க ஒளிப்பதிவாளரால் முடியுமா? எந்த ஷாட் எடுத்தாலும் அதில் முழுக்கவனமும் இருந்தது. ஒரு காட்சியை நன்கு தீர்மானிக்கப்பட்ட விஷயமாகவே அவர்கள் முடிவு செய்து படப்பிடிப்பு நடத்துவார்கள். டிஜிட்டல் போன்ற புரட்சிகள் எல்லாம் வந்துவிட்ட மாற்றத்தினால் ஒரு நாளைக்கு நூறு ஷாட்கள் எடுத்துக் கொண்டேயிருக்கலாமா?

ஆனால் இன்றைக்கு டிஜிட்டல் என்ற விஷயம்வந்தபிறகு ஒரு நடிகனுடைய செயல்பாடுகள் என்ன வென்று யாராவது புரிந்துகொண்டிருக்கிறார்களா? 

முதலில் தொழில்முறை நடிகர்களே மிகக்குறைவு. இங்கு தொழில்முறை நடிகர்கள் மேல் நம்பிக்கையே இல்லை. ஒரு கதாப்பாத்திரத்தை சிறப்பாகக் கொண்டுவர அவன் எந்தமாதிரியான பயிற்சிகளை மேற்கொள்கிறான். அதைச் சரியாக நடித்துக்கொடுத்த பின்பு அவன் அனுபவிக்கிற உளவியல்பற்றி தெரிந்துகொள்ள அக்கறையிருக்கிறதா?

யார் தொழில்முறை நடிகன்? வெகுகாலமாய் நடித்துக்கொண்டிருப்பவரா? வெற்றிபெற்றவரா? அல்லது முறையாய் பயிற்சி செய்பவரா?
நான் எண்பதுகளில் இந்தத்துறைக்கு வருகின்றபொழுது ஒவ்வொரு அடி படச்சுருளுக்கும் கணக்கு வைத்திருப்பார்கள். எந்த படமானாலும் 1:3தான் ரேஷியோ. இரண்டு மணி நேர படத்திற்கு ஆறுமணி நேர படச்சுருள்தான் கொடுக்கப்படும். அது பெரிய நடிகர் படமானாலும் சின்ன பட்ஜெட் படமானாலும் அதுதான் வழக்கம். அப்பொழுது ஒத்திகை பார்த்து நடிகர்கள் எல்லாம் காட்சிக்கு தயாரான பின்புதான் அந்த காட்சி படமாக்கப்படும். ஒருகோணத்தில் ஒரு முறைதான் பதிவாக்கப்படும். அப்பொழுது ஒருநடிகனுக்கு இந்தக்காட்சி கண்டிபாக திரையில் வரப்போகிறது என்பது தெரியும். அதனால் முழுக்கவனத்துடன் இதில் நடித்தாக வேண்டும்.

அப்பொழுது எங்களுக்கு ஒன்றாவது இரண்டாவது டேக் வாங்கும் வரைதான் அனுமதி. மூன்றாவது டேக்கிற்கு கேமரா மேன் எட்டிப்பார்த்துச் சொல்வார், “நாசர் ஒரு அடி பதிமூன்று ரூபாய் ஐம்பது பைசா., ஞாபகம் ஓ.கே., ஒன்மோர்” என்பார். அப்ப எங்களுக்கு பயம் வரும். இன்றைக்கு டிஜிட்டலில் ஒரே காட்சியை திருப்பித்திருப்பி பல கோணங்களில் எடுக்கின்றபொழுது எப்படி ஒரு நடிகனால் அதே மனநிலையை தக்க வைத்திருக்க முடியும்? ஆனால், நாங்கள் வைத்துக் கொள்கிறோம். எப்படியென்றால் சாப்ட்வேர்போல, புரோக்ராம்களாக மாறுகின்றோம். அந்தக்காலத்தில் ஒரே கோணத்தில் படமாக்குகின்ற பொழுது இந்த மாதிரித்தான் காட்சி வரப்போகின்றது என்பது தெரிந்து ஒரே மனநிலையுடன் நடித்து முடித்துவிடுகிறோம்.

இன்றைக்குப் பல கோணங்களில் படமாக்குகின்ற பொழுது எந்தக்காட்சி எந்தக்கோணத்தில் வெட்டப்படும் என்பதே தெரியாமல் போகிறது. ஆனால், கண்டினூட்டியும் முக்கியம்.குழப்பமாக இருக்கிறது. அதனால் உயிரோட்டமில்லாத வெறுமனே ப்ரோக்ராம் பண்ணப்பட்ட பொருளாகத்தான் எங்கள் மனநிலையை வைத்துக் கொள்கிறோம். இன்றைக்கு படப்பிடிப்பு நடக்கையில் ஒரு ஷாட்முடிந்தவுடன் நான் நடித்து முடித்திருக்கின்ற காட்சி சரியாக வந்திருக்கிறதா? இல்லையா? என்று அறிந்து என் மனநிலையிலிருந்து வெளியேறவும் அல்லது ஷாட் ஓகேவா இல்லையா ஒன்மோர் போவாங்களா என்பதையெல்லாம் சமயங்களில் யாரும் தெரிவிப்பதேயில்லை. அவர்கள் உபகரணங்களை மாற்றுகின்ற பொழுது இயக்குநர்கள் மானிட்டரிலிருந்து எழுந்திருக்கின்ற பொழுதுதான் ‘ஓஹோ, ஷாட் ஓ.கே.போலயிருக்கு’ என்று தெரிந்துகொள்கிறோம்.

அந்தக்காலத்தில் காட்சி நடிக்கப்பட்டவுடன் ‘கட்’ என்று சொல்வார்கள். எங்கள் முகம் தன்னிச்சையாக கேமரா பக்கமாகத்திரும்பும் கேமராவுக்குப் பக்கத்திலேயே
இயக்குனரின் முகம் இருக்கும். அந்த முகத்தைப் பார்த்தாலே எங்களுக்கு ஷாட் ஓ.கே.வா இல்லையான்னு தெரியும்.இயக்குனரின் முகம் சரியில்லை என்றால் நாங்களே ஒன்மோர் கேட்டு நடிப்போம். இன்றைக்கு இயக்குநர் களின் கண் எங்கிருக்கிறது தெரியவில்லை. இதுமாதிரியான விஷயங்களை ஏன் பழையதிலிருந்து கற்றுக்கொள்ள அடம்பிடிக்கிறோம் என்பதுதான் வருத்தம். எந்தச்சூழலில் கலை உருவாகிறது? எந்தச்சூழலில் சினிமா என்ற கலை உருவாகிறது? என்பதை படப்பிடிப்புத்தளத்தில் வந்து பாருங்கள். ஒரே கூச்சலும், குப்பையும், சம்பந்தப்படாத ஆட்களும் கேலியும் இருக்கிற இடத்தில் எப்படி கலை உருவாகும்? நான் வேண்டிக்கொள்வதெல்லாம், ஒரு கலை உருவாவதற்கான சூழலை படப்பிடிப்புத் தளத்தில் உருவாக்க வேண்டும்.

நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று எதன் அடிப்படையில் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அவர்கள் கொடுக்கின்ற பணமும், கால அவகாசமும்தான். கதைகளையெல்லாம் ஆழமாய் பார்ப்பதில்லை. திருப்பித் திருப்பி ஒரே கதைதான் வருகின்றது. இடையில் சின்ன படங்கள் என்று வந்தால் அதற்கு கொஞ்சம் முன்னுரிமை உண்டு. தொழில்ரீதியாக இதுதான் உண்மையான விஷயம்.

-தினேஷ்
நன்றி தீக்கதிர்

Comments