போயஸ் தோட்ட வீட்டு முன்பு சங்கு ஊதிய தொண்டர்கள் : சசிகலா நேரில் பார்த்து அதிர்ச்சி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ''என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்" என்று அதிரடியாக கூறினார்.
  இதனையடுத்து கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற் கும், தற்போது முதல்வராக அவரை தேர்வு செய்ததற்கும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான சோபியா தேன் மொழி என்பவர், 2 நாட்களுக்கு முன்பு சசிகலாவுக்கு எதிராக பாடல் பாடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் போரூரைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் சுமார் 10 பேர் சசிகலாவை புகழ்ந்து பாடியபடி போயஸ் தோட்டத்துக்கு வந்தனர். அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், புகழ்ந்துதானே பாடுகிறார்கள் என்று நினைத்து சசிகலா வசிக்கும் வீட்டு முன்பு வரை அனுமதித்து விட்டனர்.

வீட்டு முன்பு சென்ற தொண்டர்கள், மறைத்து வைத்திருந்த சங்கை எடுத்து திடீரென ஊத ஆரம்பித்து விட்டனர். இரவில் 10 பேர் சேர்ந்து சங்கு ஊதியதால் அந்த இடமே பரபரப்பாகி விட்டது. அப்போது வீட்டுக்குள் இருந்த சசிகலா, சங்கு சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து பால்கனியில் வந்து நின்று பார்த்தார்.
இதை சற்றும் எதிர்பாராத போலீஸார், உடனடியாக 10 பேரையும் பிடித்து ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

நன்றி தி இந்து தமிழ்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments