இளைஞர்கள் மரணத்தின் கதவுகளைத் தட்டுகிற காலம் துவங்கி விட்டது. மருத்துவர் கு.சிவராமன் -

30 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மரணத்தின் கதவுகளைத் தட்டுகிற காலம் துவங்கி விட்டது. மது அருந்ததாத  இளைஞர்களை பார்ப்பது அரிது என்கிறார் மருத்துவர் கு.சிவராமன்
 1970களில் ரஷ்யாவில் ஆலம் ஆட்டா என்ற அறிவிப்பு வெளியானது. அதாவது ஹெல்த் ஃபார் ஆல் (அனைவருக்கும் சுகாதாரம்) என்ற கோஷத்தை அன்றைக்கு இருந்த ரஷ்ய அரசு (சோவியத் அரசு) இப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. 1947ம் ஆண்டு இந்திய குடிமகனின் சராசரி ஆயுட்காலம் 37 வயது. தற்போது சராசரி ஆயுட்காலம் 64. அன்றைக்கு தொற்று நோய்களால் மனித உயிர்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்தன. ஊழி என்ற காலரா, அம்மை நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் தாக்குதலால் மக்கள் ஆயிரம், 2 ஆயிரம் பேர் என மடிந்தார்கள்.
ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனத்திற்கு தொற்று பரவி மனித இனம் அழிந்த காலமும் உண்டு. பிளேக் என்ற நோய் மக்களை ஆட்டிப்படைத்தது. இன்றைய தலைமுறை பிளேக் நோய் என்றால் என்ன என்று கேட்கிறது. ஆனால் இன்றைக்கு தொற்று இல்லாத நோய்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள். சர்க்கரை நோய், மாரடைப்பு, கேன்சர் போன்ற நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நோய்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் துரத்துகிறது.

அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். உதாசீனப்படுத்தக் கூடாது. அடையாற்றில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் நான் உட்பட பல டாக்டர்கள் கலந்து கொண்டோம். ஒரு தலைமுறை தனது அடுத்த தலைமுறை மனிதர்கள் மரணத்தைத் தழுவுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா என்று எனது நண்பர் கேட்டார். ஆம் நண்பர்களே இந்த கேள்வி மருத்துவ ஆய்வுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையான கேள்வியாகும்.
30 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மரணத்தின் கதவுகளைத் தட்டுகிற காலம் துவங்கி விட்டது. மது அருந்தாத, புகைப்பிடிக்காத இளைஞர்களை காண்பது அரிது. அந்த இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். புகைப்பிடிப்பதைக்காட்டிலும் உயிருக்கு ஆபத்தானது மது குடிப்பது. ஆனால் மது குடிப்பது உயிருக்கு ஆபத்தானது என்று மது பாட்டில்களில் விளம்பரப்படுத்துவது இல்லை.
இது ஒரு வணிகத் தந்திரம். நீங்கள் என்றாவது ஒரு முறை ஆல்கஹால் குடித்தால் உங்களுக்கு கண்டிப்பாக ஈரல் சுருக்க நோய் வரும். குடிப்பழக்கம் இல்லாத நல்ல ஈரல் உள்ள யாராவது உங்களுக்கு தானமாக கொடுத்தால் தான் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். இங்கே எல்லோரும் குடிகாரர்களாக இருக்கும் போது நல்ல ஈரல் உள்ள மனிதர்கள் கிடைப்பதும் அரிதாகிவிடும். பிறகு யாரையும் காப்பாற்ற முடியாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்திரிக்காயை நாம் பயன்படுத்தக்கூடாது, பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது, களைக்கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது.
இவைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது குறித்து நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் நானும் நம்மாழ்வாரும் கலந்து கொண்டோம். அந்த கத்திரிக்காயை சாப்பிட்டால் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாவோம் என்று கூறினோம். கருத்தரங்கில் கலந்து கொண்ட ஒரு மூத்த விஞ்ஞானி எங்களை கடுமையாக சாடினார். 10 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அந்த விஞ்ஞானி நல்ல வசதி வாய்ப்புகளோடு ஓய்வு பெற்று சென்றிருப்பார். தற்போது உலக சுகாதார நிறுவனம் களைக்கொல்லியைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த களைக்கொல்லிகளை 11 ஐரோப்பிய நாடுகள் தடை செய்துள்ளன.


ஆனால் நமது மாவட்டங்களில் இந்த களைக்கொல்லி இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அமெரிக்காவில் ராபின் பறவைகள் புகழ்பெற்றவை. தற்போது ராபின் பறவைகளை காணவில்லை. ஏன் ராபின் பறவைகளை காண முடியவில்லை என்று ரேச்சல் என்ற பெண்மணி ஆய்வில் இறங்கினார். பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் டிடிபி ரசாயன உரத்தால் தான் ராபின் பறவைகளின் முட்டைகளில் விரிசல் ஏற்படுகிறது என்று கண்டறிந்து மௌன வசந்தம் என்ற தனது நூலில் வெளி உலகிற்கு தைரியமாகச் சொன்னார். இந்த ரசாயண உரத்தால் சாரஸ் என்ற நாரை இனமும் அழிந்தது. அமெரிக்காவே ஆடிப்போனது.இந்தியாவில் சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பல இனங்கள் அழிந்து வருகின்றன. இந்த ரசாயனங்கள் நமது உணவில் கலப்பதையும், மனித இனம் அழிவதையும் கண்டுகொள்ளாமல் அரசுகள் உள்ளன.

(திண்டுக்கல் புத்தக திருவிழாவில் ‘நலம் நலமறிய ஆவல்’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து)தொகுப்பு: இலமு... நன்றி.தீக்கதீர்





உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments