ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவரது வருமானத்தைவிட 200 சதவீதம் அதிகம்- வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா


ஜெயலலிதா விடுதலையாகி தமிழக முதல்வராக பொறுப்பேற்று ,ஆர்.கே. நகரில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து தேர்தல் வேலைகளை துவங்கிய அதே நேரத்தில் கர்நாடக வழக்கை மேல்முறையீடு செய்துள்ளது.இந்நிலையில்
ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவரது வருமானத்தைவிட 200 சதவீதம் அதிகம் என்று ஜெயலலிதாவின் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் கர்நாடக அரசின் சிறப்பு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா கூறினார்.இதுதொடர்பாக ஜூன் 5 `தி எகனாமிக் டைம்ஸ்’ நாளேட்டில் அவரது நேர்காணல் வெளிவந்துள்ளது.



நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏன்?
பொதுவாக ஒரு சிறப்பு விடுப்பு மனுதயார் செய்திட ஓரிரு வாரங்கள் ஆகலாம். மேலும், இப்போது உச்சநீதிமன்றத்திற்கு கோடைக்கால விடுமுறை. எனவேவிடுமுறையில் பணியாற்றும் அமர்வாயம், எங்கள் மனுவை ஓர் அவசர முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதாது.எங்கள் மனுவை ஏற்காமல் போகலாம்.எனவே அநேகமாக ஜூலை 1க்குப் பின்னர் எங்கள் மனுவைத் தாக்கல் செய்வோம்.

ஆனால் மேல்முறையீடு செய்வது தொடர்பாக கர்நாடக அரசாங்கம் இழுத்தடித்ததே?மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தால், அரசாங்கத்தின் சட்டச் செயலாளர்தான் அதுதொடர்பான முடிவினை எடுக்க முடியும். ஆனால், இந்த வழக்கில் ஒரு முதல்வர் சம்பந்தப்பட்டிருப்பதால் கர்நாடக முதல்வரும், கர்நாடக அமைச்சரவையும் அமர்ந்து ஒரு கூட்டு முடிவு எடுத்திருக்கிறது. இது தொடர்பாக நிச்சயமாக நான் சந்தோஷப்படுகிறேன். சட்டத்திற்கு உட்பட்டு இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் எந்த அளவிற்கு அரசியல் நிர்ப்பந்தம் இருக்கிறது?

சட்ட வல்லுநர்களின் அறிவுரையின்படி இந்த வழக்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறதேயொழிய, வேறெந்தக் காரணத்தினாலேயும் அல்ல. உச்சநீதிமன்றத்தால் இந்த அரசுக்கு அளிக்கப்பட்டிருந்த பொறுப்பை அது நிறைவேற்றாமல் இருந்திருந்தால்தான் அது தன் கடமையிலிருந்து நழுவியதாகக் கருதப்பட்டிருக்கும். குற்றம்சாட்டப்பட்டவர் தமிழக முதல்வராக இருந்தார் என்பதற்காகஎந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. காங்கிரசில் ஒரு பிரிவினர் மேல்முறையீட்டுக்கு எதிராக முதல்வருக்கு அறிவுறுத்தினார்கள். ஆனாலும் மற்றவர்கள் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று எனக்கே கூட கடிதம் எழுதினார்கள்.

இந்த வழக்கில் வாதிடுவதற்கு உங்களுக்கு அடிப்படையாக இருப்பவை என்ன? உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புரையில் சட்டரீதியாகவும், உண்மைகளின் அடிப்படையிலும், கணிதரீதியாகவும் பிழைகள் இருக்கின்றன. குற்றம்சாட்டப்பட்டவரால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள வருமானங்களுக்கான ஆதாரங்களை நாம் வெறுமனே கூட்டிப்பார்த்தாலேகூட, அவரது வருமானத்தைவிட 200 சதவீதத்திற்கும் அதிகமாக அவருக்கு சொத்துக்கள் இருப்பது தெரியவரும். அவருக்கான கடன்களைச் சேர்த்ததில் பிழைகள் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இவையன்றி, கட்டுமானத்திற்குச் செலவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் கூறியிருப்பதிலும் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஜெயா பப்ளிகேஷ ன்ஸ் நிறுவனத்திலிருந்து வருமானம் என்பது, எங்களிடம் உள்ள கணக்கின்படி, ஒன்றுமேஇல்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் அது 1.15 கோடி ரூபாய் என்று கூறியிருக்கிறார். ஆயினும் தீர்ப்புரையில் இந்தத்தொகை 4 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது குற்றம்சாட்டப்பட்டவரே கூறியதைவிட 2 கோடியே 85 லட்சம் ரூபாய் அதிகம்.

குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்தின் மதிப்பு அவரது வருமானத்தைவிட மிகையாக இருப்பது 10 சதவீதத்திற்குக் குறைவுதான் என்றும், கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கின்படி அது அனுமதிக்கப்படக் கூடியதே என்றும் கூறப்படுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

அக்னிஹோத்ரி வழக்கை எல்லா வழக்கிற்கும் ஒரு கணித சூத்திரம் போன்றோ அல்லது அறிவியல் சூத்திரம் போன்றோ பிரயோகிக்க முடியாது. ஒருவரின் வருமானம் 10 ஆயிரம் கோடிரூபாயாக இருந்து, அதற்கும் மிகையாக அவர் 900 கோடி ரூபாய் வைத்திருக்கிறார் என்றால், அதனை அனுமதிக்கப்படக்கூடியதே என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அது 40 ஆயிரம் ரூபாய் அல்லது 50 ஆயிரம் ரூபாய் என்கிற அளவிற்கு இருப்பின், அதனை மிகச்சிறிய அளவிலானது என்றோ புறக்கணிக்கத்தக்கது என்றோ கூறலாம். இதனையும் சிறப்பு விடுப்பு மனுவில் நாங்கள் எழுப்பிட இருக்கிறோம், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராகவும் வாதிட இருக்கிறோம்.

இதையும் படிக்கவும்

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு நகல் இலவச டவுன்லோட் செய்ய...


எவ்வளவு விரைவில் உங்கள் சிறப்பு விடுப்பு மனுமீது தீர்ப்பு கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இதனை நாம் ஊகித்துணர முடியாது. விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறுவதற்கு 18 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நான்கே மாதங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. ஆயினும், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள் விரைவாக நடத்தப்பட்டு முடிக்கப்பட வேண்டும் என்கிற விழிப்புணர்வு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

தகவல் தீக்கதிர்
தமிழில் : ச.வீரமணி
தொகுப்பு செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments