உலகிலேயே மிகப்பெரிய கட்சி என்ற `பெருமை’ பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துவிட்டதாம். அக்கட்சியில் 8 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை முந்திவிட்டதாம்.பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டிருந்தாராம்.இதைத்தொடர்ந்து நாடெங்கும் அக்கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டுகால் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்கள் பாஜக உறுப்பினர்களாகச் சேர்ந்ததாக அறிவித்துக் கொண்டார்கள். தற்போது 8 கோடியே 80 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. அக்கட்சியில் 8 கோடியே 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அக் கட்சியை பின்னுக்குத் தள்ளி விட்டு 8 கோடியே 80 லட்சம் உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா முதல் இடத்துக்கு வந்துள்ளதாம்.
பாரதிய ஜனதா உறுப்பினர் சேர்க்கை மார்ச் 31ல் முடிவடையும் நிலையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துவிடுமாம். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த 10 கோடிப் பேருக்கும், தாங்கள் பாஜக உறுப்பினர்கள் என்பது தெரியாதாம்!
நன்றி தீக்கதீர்
தொகுப்பு செல்வன்
Comments