எட்டு மாதங்களில் 45 கொலைகள்


திண்டுக்கல் என்றால், பூட்டு, பிரியாணி என்ற நிலைமாறி தற்போது கொலை, கொள்ளைக்கு பெயர்பெற்ற நகரமாகி விட்டது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 45 கொலைகள் நடந்துள்ளன.

ஜனவரி மாதத்தில் 2 பேர், பிப்ரவரியில் 5 பேர், மார்ச்- 5 பேர், ஏப்ரல்- 6 பேர், மே மாதம் 7 பேர், ஜூன் -6 பேர், ஜூலை- 6 பேர், ஆகஸ்ட் - 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை பழநியில் பொதுமக்கள் முன்னிலையில் 2 பேரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு சாவகாசமாக தப்பியது. மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நடந்தபோது, பழநியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., எஸ்.பி., மற்றும் 700 போலீஸார் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதுகாப்புக்காக முகாமிட்டிருந்தனர். இந்த நேரத்திலேயே இரட்டைக் கொலை நடந்ததால், உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பழநியில் ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதம் பெண் பள்ளித் தாளாளர் உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய மற்றொருவர் மறுநாள், தனியார் தோட்டத்தில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

கடந்த மாதம் திண்டுக்கல் சிறைச்சாலையின் பின்புறம் ரவுடி ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். கடந்த இரு மாதங்களுக்கு முன் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் ஆஜராக வந்த தூத்துக்குடி சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் மீது, போலீஸார் கண் எதிரிலேயே காரில் வந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியது. இதில் நூலிழையில் பண்ணையார் ஆட்கள் உயிர் தப்பினர்.

கடந்த ஆண்டு, நீதிமன்ற வாயிலில் இதே வழக்கில் ஆஜராக வந்த பண்ணையார் ஆதரவாளர் முத்துபாண்டி என்பவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் தப்பிய அவர், மதுரையில் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.பூட்டு நகரம் கொலை நகரமாக மாறிவருகிறது.

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments