நான் ஒரு கொலையாளியாக மாறியிருக்க வேண்டும். இயக்குநர் மிஷ்கின்

கடைசியாக எடுத்த படத்தால் 4.50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நான் ஒரு கொலையாளியாக மாறியிருக்க வேண்டும். என்று திரைப்பட இயக்குநர் மிஷ்கின் கூறினார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அவர் பேசியதாவது:
வாழ்க்கையில் சந்தோசமான நேரத்தைச் செலவிடுவது என்பது என்னைப் பொறுத்தவரை புத்தகங்கள் படிக்கும் நேரம் தான். புத்தகத்தைப் படித்ததால் தான் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டேன். நான் வீடு வாங்கவில்லை. 10 லட்சம்ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கியுள்ளேன். புத்தக மலைக்குள் ஒரு எலி போல், ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போலச் சுற்றித்திரிகிறேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எனது பாட்டி எனக்கு பாலமித்ரா, அம்புலி மாமா, முத்து காமிக்ஸ் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
எனக்கு 3500 கதைகளை அவள் கூறியிருக்கிறாள். எனக்குள் கதைகளைப் புகுத்தியது பாட்டிதான். அதிலிருந்துதான் எனதுபுத்தகம் வாசிக்கும் பழக்கம் துவங்கியது. டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு படித்து தான் நான் புத்துயிர்ப்பு அடைந்தேன்.

தேர்ந்த கதைச்சொல்லியாக மாற வேண்டுமானால் புத்தகங்கள் படியுங்கள்.இருபது ஆண்டுகளுக்கு முன் கதைச் சொல்லிக் கொண்டிருந்த பாட்டிகள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்றால் தொலைக் காட்சியை ஆவெனப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்நான் கடைசியாக எடுத்த படத்தால் 4.50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நான் ஒரு கொலையாளியாக மாறியிருக்க வேண்டும். ஆனால், என்னைக் காப்பற்றியது புத்தகங்கள் தான். எல்லா சோகமும் சொறிந்து கொள்வதைப் போலத்தான். புத்தகங்களைப் படிக்கும் போது தான் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர முடியும்.புத்தகங்களைப்படிப்பது ஒரு தவநிலை.

அதை நான் செல்லும் வழியெங்கும் செய்துகொண்டிருக்கிறேன். மனிதகுலத்தின் அனுபவத் தொகுப்பாக இருக்கும் புத்தகங்களை படிப்பதை விட வேறு எதுவும் நமக்குப் பயன்தராது. குழந்தைகள் படித்துமுதலிடத்தில் வரவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே கிடையாது. குழந்தை தேர்வில் தேர்ச்சி செய்தால் போதும். அதுவும் சமூகத்துக்காகவே தேவைப்படுகிறது. எனதுமகளுக்கு டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோரின் புத்தகங்களைப் படிக்க கொடுக்கிறேன். அவளும் கதை சொல்கிறாள். குழந்தைகள் இலக்கியம் படிக்கும் போது தான் வாழ்வியலை கற்றுக்கொள்ளும். எதிர்காலத்தில் அச்சமின்றி வாழும் பக்குவம் பெற்றுவிடும். நமது குழந்தைகள் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். அவர்களுக்குப் புத்தகங்களை வாங்கிக்கொடுத்து படிப்பதை ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் வாழ்வு வளமாக அமையும் என்று அவர் கூறினார்.

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்



Comments