வானத்தில் இன்று இரண்டு நிலவு?

ஆகஸ்ட் 27  (புதன்) இரவு வானத்தில் சந்திரனும் செவ்வாய்க் கோளுமாக இரண்டு நிலவுகள் தெரியும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவது வெறும் புரளிதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வதந்திகளையும், செவ்வாய்க் கோள் தொடர்பான இதர தவறான நம்பிக்கைகளையும் பொதுமக்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் பேராசிரியர் நா. மணி, பொதுச்செயலாளர் ஸ்டீபன் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு. ஆகஸ்ட் 27ம் தேதி இரவு வானில் செவ்வாய் கிரகம் முழு நிலவு போல பெரிதாக தெரியும், எனவே அன்று வானில் இரண்டு நிலவுகளை பார்க்கலாம் என புரளிச் செய்திகள் வலைத் தளத்தில் உலா வருகின்றன. கணினியின் துணைகொண்டு புனைவாகத் தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன. இவை வெறும் புரளிகள்தாம். பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

பழைய வதந்தி

நிலவைப் போன்று பெரிதாக செவ்வாய் கிரகம் தெரியும் என்ற போலி செய்தி இதற்கு முன்னரும் வெளிவந்துள்ளது. மெய்யாக 2003ல் துவங்கிய புரளி இது. இந்தப் புரளியின் பின்னணி என்ன. செவ்வாயும் பூமியும் சூரியனை மையமாக வைத்து நீள் வட்ட பாதையில் சுற்றுகின்றன. இவ்வாறு ஒவ்வொன்றும் தன் பாதையில் கிரகங்கள் சுற்றி வரும்போது அவற்றுக்கு இடையே தொலைவு மாறி மாறி அமையும். பூமிக்கும் செவ்வாய்க்கும் சராசரி தொலைவு 22.5 கோடி கி.மீ. என அமைந்தாலும், செவ்வாய்-சூரியன்-பூமி என்ற வரிசையில் சூரியனுக்குப் பின்புறம் செவ்வாய் அமையும் தொலைவு நிலையில் செவ்வாய் சுமார் 40.1 கோடி கி.மீ. தொலைவில் இருக்கும்.

ஆனால் சூரியன்-பூமி-செவ்வாய் என்ற வரிசையில் பூமிக்கு மேலே செவ்வாய் இருக்கும் அண்மை நிலையின்போது தொலைவு வெறும் சுமார் 5.46 கோடி கி.மீ. என அமையும். பொதுவாகவே சராசரி 780 நாட்களுக்கு ஒருமுறை பூமியும் செவ்வாயும் இவ்வாறு அண்மை நிலைக்கு வரும் என்றாலும் 2003 ஆகஸ்ட் 27 ஆம் தேதி சிறப்பானது என்கிறார் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தி அறிவியலாளர் டாக்டர் தா.வி. வெங்கடேஸ்வரன். மேலும் கிரகங்கள் சுற்றும் பாதை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. நீள்வட்ட பாதையில் உள்ள தடுமாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு முறையும் அண்மை நிலைக்கு வரும்போதும் பூமி-செவ்வாய் தொலைவு சற்றே கூடி குறையும்.அவ்வாறு கூடி குறையும் தொலைவு அதற்கு முன்னர் 60,000 ஆண்டுகளில் ஆகக்குறைவான தொலைவாக இருந்தது அந்த 2003ம் ஆண்டு.

அன்று பூமிக்கும் செவ்வாய்க்கும் தொலைவு 5,57,58,000 கிமீ எனவும் அதற்கு 60000 ஆண்டுகளுக்கு முன்னர் 55718000 கிமீ எனவும் இருந்தது. கிமு 57,617 ஆண்டில் தான் இது போல ஆகக்கூடி அருகே வந்த நிலை ஏற்பட்டது, அதுபோல ஆககூடி அருகே வரும் நிலை மறுபடி 2287ம் ஆண்டில் ஏற்படும். எனினும் இந்த நாட்களிலும் வெறும் கண்களுக்கு ஒளிப்புள்ளியாகத்தான் செவ்வாய் தென்படும். மேலும் உள்ளபடியே வரும் 2014 ஆகஸ்ட் 27 அன்று முழு நிலவு பௌர்ணமி நாள் அல்ல என்பது மட்டுமல்ல அன்று செவ்வாய் பூமிக்கு அருகே உள்ள நிலையில் கூட இருக்காது! இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று தொலைவு 5,57,63,108 கி.மீ. என அமையும். ஆகவே தொலைவில் கூட எந்த சிறப்பும் இல்லை என்கிறார் டாக்டர் தா.வி. வெங்கடேஸ்வரன். எனவே இரண்டு முழு நிலவுகள் வானில் தென்பட வாய்ப்பே இல்லை. ஆயினும் புரளி பரப்புகிறவர்கள் இந்த அளவுக்குக் கூட சரிபார்ப்பது இல்லை.

ஒளிப்புள்ளி

செவ்வாயின் விட்டம் 3390 கி.மீ. என்றாலும் அவ்வளவு தொலைவில் இருப்பதால் வெறும் ஒளிபுள்ளி போலத்தான் தென்படும். ஆகாய விமானம் பெரிது என்றாலும் உயரே பறக்கும் போது சிட்டு குருவி அளவு கூட காட்சிப்படுவதில்லை அல்லவா? அதுபோல வெகு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தின் காட்சி கோணம் மிக அருகே உள்ளபோது சுமார் 25.113 ஆர்க் வினாடி எனவும் தொலைவு நிலையில் வெறும் சுமார் 3.492 ஆர்க் வினாடி எனவும் தான் இருக்கும். நிலவு சராசரி 1800 ஆர்க் வினாடி எனவே ஆகமொத்தத்தில் செவ்வாய்க்கோளானது நிலவின் 72ல் ஒரு பங்காக சிறிதாகத்தான் தென்படும். அதாவது சுமார் 72 முறை செவ்வாய் தோற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கினால் நிலவின் அளவு வரும். எனவே வரும் ஆகஸ்ட் 27 தேதி இரவு கூட செவ்வாய் வெறும் ஒரு ஒளிப்புள்ளியாகத்தான் தென்படும். நிலவு அளவு பெரிதாக ஒன்றும் தென்படாது டாக்டர் வெங்கடேஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார்.


பீதி கொள்ள செய்யும் கயவர் செயல்

அந்தகாலத்தில் வேப்பமர உச்சியில் பேய் இருக்கிறது என புரளி பரப்பினார்கள். இன்று வெகு தொலைவில் இருக்கும் செவ்வாய் நமக்கு அருகே உள்ள நிலவு போல பெரிதாக தெரியும் என்று புரளி பரப்புகிறார்கள். இரண்டும் பகுத்தறிவை மட்டுப்படுத்தி மக்களை பீதி கொள்ள செய்யும் கயவர்கள் செயல்தான். எனவே மக்கள் விழிப்புடன் இருந்து, புரளிகளைப் பரப்பி மூட நம்பிக்கைகளை விதைக்கும் கயவர்களைப் புறந்தள்ள வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுகொள்கிறது. செவ்வாய் கிரகத்தை ஒட்டி வேறு சில அடிப்படை ஆதாரமற்ற அச்சத்தையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள்.

உதாரணமாக செவ்வாய் தோஷம் பற்றியதாகும். பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் இத்தனை கோடி கி.மீ. தூரத்தில் இருக்கும்போது அதன் சுற்றுப் பாதையில் பூமிக்கு அருகில் வரும் போது பாதிப்புகள் அதிகமாகவும் மிக தூரத்தில் செல்லும்போது விளைவுகள் குறைவாகவும் இருக்க வேண்டுமல்லவா? இது பற்றி சோதிடம் எதுவும் கூறுவதில்லை. ஒரு நபர் பிறக்கும்போது செவ்வாய் கிரகம் எந்த ராசிக் கட்டத்தில் இருக்கிறது என்பதை மட்டுமே கணக்கில் கொள்கிறார்களே தவிர அதன் தூரத்தை கணக்கில் கொள்வதில்லை. எனவே, இவை உட்பட அறிவியல் பூர்வமற்ற விஷயங்களை நம்ப வேண்டாம் என்றும் மூடநம்பிக்கைகளுக்கு பலியாகிவிடலாகாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments