வைகோ என்னும் தீர்க்கதரிசி...

வைகோ  நல்ல அரசியல் தலைவர். இலங்கையாகட் டும்,முல்லை பெரியாறு பிரச்சனையாகட்டும் முதல் குரல் அவருடையதாக தான் இருக்கும். பிறகு ஏன் அவருக்கும் அவரது கட்சிக்கும் மக்கள் ஓட்டு போட மறுக்கிறார்கள்.  எனக்கு தெரிந்து அவரது பேச்சு... கிரேக்கத்திலே.. ஏதென்ஸிலே என   ஆரம்பித்தால்... ஆரமிச்சுட்டார்ப்பா... என்  மக்கள்  கூட்டம் கலையத்தொடங்கிவிடுகிறது.தற்போது அவரது கட்சிகொள்கைகளுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பிஜேபி யோடு கூட்டணி வேறு
. தனது ஆதர்சன தலைவரான பெரியாரை செறுப்பால் அடிக்க வேண்டும் என்கிறார்கள் பிஜே.பி.காரர்கள். அதையெல்லாம் காதில் வாங்காமல் எதற்கு கூட்டணி... பிஜேபி  ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் வாங்கி கொடுப்பார்கள்  என்று நம்புகிறார் வைகோ. தனியாக கால் கிலோ ஆல்வா கூட வாங்கித்தரமாட்டார்கள் பிஜே.பி.காரர்கள். தற்போது தீவிர பிரச்சாரத்தில் இருக்கும் வைகோ தனது கூட்டணிக்கே  சேம் சைடு கோல் போட்டு வருகிறார்.

“தமிழ் நாட்டின் 40 தொகுதிகள் இல்லாமலேயே மோடி பிரதமராகி விடுவார்”- விருதுநகரில் நடந்த ஊழியர் கூட்டத்தில் வைகோ  தீர்க்க தரிசனமாக பேசியுள்ளார்.
மோடி பிரதமராவது இருக்கட்டும், அவர் எம்.பி.யாகவாவது ஆகி விடுவாரா? எதற்காக இரண்டு தொகுதிகளில் போட்டி? என்று பிஜேபி ஆதரவாளர்களே பட்டி மன்றம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அது தனி கதை.ஆனால் இங்கே மோடியின் கடைக்கண் பார்வைக்காகத் தவ மாய்த் தவமிருந்து கொண்டிருக்கும் திருவாளர் வைகோ தன் பாடுதிண்டாட்டமாய்ப் போய்விட்டதைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருக் கிறார்.தமிழகத்தில் பிஜேபி கூட்டணி யின் தொகுதி பங்கீடு பிரச்சனை, சினிமா, சீரியல்களையும் மிஞ்சும் காமெடி, சஸ்பென்ஸ் காட்சிகளுடன் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்ததைத் தமிழக மக்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


விஜயகாந்த்தும், ராமதாசும் இரண்டு மாதத்திற்கும் மேலாக கயிறு இழுக்கும் போட்டி நடத்திக் கொண்டிருக்க, தன் பிஜேபி எஜமானர்களுக்கு மிகவும் நல்ல பிள்ளையாய் நடந்து கொண்டார் வைகோ.10 சீட்டில் ஆரம்பித்து, 8 சீட் என்று உறுதியளித்து, இறுதியில் 7 இடங்கள் தான் தர முடியும் என்று பிஜேபி கையை விரித்த போதும், எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார் வைகோ.மதிமுக-வின் தேர்தல் அறிக் கையை வைகோ வெளியிட்டு முடிக்க, மறுநாளே வேக வேகமாய் எதிர்வினைகள், எதிர்ப்புக் குரல்கள் - மாற்றுக் கட்சிகளிடமிருந்து அல்ல, ‘வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணிக்குத் ‘ தலைமை தாங்கு வதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் பிஜேபி-யிடமிருந்து.இந்திய நாட்டுக்கு யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என்று பெய ரை மாற்ற வேண்டுமென தேர்தல் அறிக்கையிலே வைகோ சொல்ல, நோ, நோ கூடாது, ‘பாரதம்’ என்று தான் நாங்கள் பெயர் சூட்டுவோம் என்கிறார் தமிழக பிஜேபி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன். வைகோவுக்கு பதில் என்ற போர்வையில் தங்களது ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை வெளிப்படையாகவே போட்டு உடைத்துள்ளார்.

தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு என்று தேர்தல் அறிக்கை யிலே எழுதி வைத்து வைகோ வாசித்துக் கொண்டிருக்க, ‘கடந்த 30 வருடங்களில் ஒரு முறை கூட தமிழ் ஈழத்தை ஆதரித்து பிஜேபி பேசியது கிடையாது’ என்று விளக்கம் தருகிறார் வெங்கையா நாயுடு.இதெல்லாம் இருக்கட்டும். இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிஜேபி நிறுத்தியிருக்கும் வேட் பாளரின் பெயர் குப்புராம். இவர் ‘ராமர் சேது பாதுகாப்பு இயக்கத்தின்’ - அதாவது சேது சமுத்திரத் திட்ட தடுப்பு இயக்கத்தின் - அகில பாரத தலைவராம். ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி அமைப்புகளின் தென் தமிழக துணைத்தலைவராகவும் இருப்பவராம்.சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ‘மறுமலச்சி‘ திமுக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கையோடு, தங்கள் வேட்பாளர் குப்பு ராமுக்காக, இராமநாதபுரம் தொகுதியிலிருந்து தான் வைகோ தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்று பிஜேபி விரும்பு கிறதாம். விரக்தியின் விளிம்பில் நிற்கும் தொண்டர்கள் பேசிக் கொள் கிறார்கள்.

ஆனால், வைகோ தான் ஒரு தீர்க்கதரிசி என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார். தங்களுடைய சந்தர்ப்பவாதக் கூட்டணி தமிழகத் தில் நிச்சயம் தேறாது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டதால் தான் ‘தமிழ் நாட்டின் 40 தொகுதிகள் இல்லாவிட்டாலும் கூட’என்று இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டார்.சேம் சைடு கோல் அடித்துக் கொண்டிருக்கும் வைகோவுக்கு இந்த ‘அற்புதமான’ கூட்டணி அமைய ஆறு மாத காலமாக ‘மன உளைச்சலோடு’ பாடுபட்ட தமிழருவி மணியன் ஆறுதல் சொல்ல முன்வருவார் என்று நம்பலாம்.

-தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்