ராஜபக்சேவின் குடும்பச் சொத்தாகப் போகும் இலங்கைத் தீவு

2013 ஜூலை 29ம் நாளன்று அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்திற்கு 25 வயது பிறக்கிறது. இந்த 25 ஆண்டுகளிலும் முழுமையாக அமலுக்கு வராமலேயே, அதற்கு சாவுமணி அடிக்கத் துடிக்கிறது, அழகிய இலங்கை தேசத்தை எதேச்சதிகாரப் பாதையில் திசை திருப்பத் துடிக்கும் ராஜபக்ஷே அரசு.இலங்கை தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமல்ல, சிங்களர்கள் உள்பட அந்நாட்டின் மொத்த மக்களும் வாழ்கிற அனைத்து 9 மாகாணங்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அதிகாரங்களைப் பறித்து, ஒட்டுமொத்த ஆதிக்கத்தையும் தனது கைகளுக்குள் அடக்கிக் கொள்ள தீவிரமாய் முயற்சிக்கிறார் ஜனாதிபதி ராஜபக்ஷே.
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 1987ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையான அம்சமே, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் 13வது பிரிவை திருத்தம் செய்வது என்பதாகும்.இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் 13வது பிரிவில் திருத்தம் கொண்டுவந்ததன் விளைவாக, தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்பட மொத்தம் 9 மாகாண அரசுகள் உருவாகின. மாகாண கவுன்சில்கள் சட்டம் எண் 42, 1987 என்ற சட்டமே உருவானது. இந்தச் சட்டம், மாகாணங்களில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, நிலம் தொடர்பான பரிவர்த்தனைகள் உள்பட மாகாண விவகாரங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாகாண அரசுகளே தீர்மானித்துக் கொள்ள வழிவகை செய்கிறது.


எல்டிடிஇ மீதான இறுதிக் கட்டப் போரையொட்டியும், அதற்குப் பின்னரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்தழித்துவிட்ட ராஜபக்ஷே அரசு, கடலும், மலைகளும், வனங்களுமாக உலகின் மிகச் சிறந்த இயற்கை எழில்கொஞ்சும் பிரதேசமாக திகழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை - தமிழ் மக்களின் சொந்த இருப்பிடங்களை - உலகளாவிய சுற்றுலா வர்த்தகத்திற்கும், கனிமவளங்களை சூறையாடும் பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கும் தாரைவார்த்து சேவகம் செய்ய முடிவு செய்திருக்கிறது.தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் மட்டுமல்ல, தலைநகர் கொழும்புவையும், இலங்கை கடலோரப் பகுதிகள் அனைத்தையும் இவ்விதமே பன்னாட்டு நிதி மூலதனத்திற்கு விருந்துவைக்க ராஜபக்ஷே திட்டமிட்டிருக்கிறார். அதற்கு கைமாறாக, இலங்கையில் இன்னும் நீண்டகாலத்திற்கு தனது ஆட்சியை நீடிக்க செய்யவும் ஏகாதிபத்திய சக்திகளுடன் பேரம் பேசி வருகிறார்.இதனொரு பகுதியாகவே, இலங்கையின் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்றத்தை அவர் சிறுமைப்படுத்துகிறார்; சமீபகாலமாக ராஜபக்ஷே அரசின் அனைத்து பட்ஜெட்டுகளுமே குறிப்பிட்ட 2 அமைச்சர்களின் துறைகளுக்கு அளவுக்கதிகமான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளன. அந்த இருவரும், பஷில் ராஜபக்ஷே, கோதபய ராஜபக்ஷே ஆகியோர் ஆவர். பாதுகாப்புத்துறை, கல்வித்துறை, பொருளாதார அபிவிருத்தித் துறை, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை என முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து அமைச்சகங்களும் இவர்கள் இருவரிடம்தான் உள்ளன. இவர்கள் வைத்ததே சட்டம். கல்வித்துறையிலும், நகர்ப்புற மேம்பாட்டிலும் கூட ராணுவத்தை ஈடுபடுத்துகிறார்கள் இவர்கள். கொழும்பு நகரில் குடிசைகளை அகற்றும் பணியில் ராணுவம் நேரடியாக இறங்குகிறது. தமிழ் மாகாணங்கள் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இதர மாகாணங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இலங்கைத் தீவு முழுவதுமே ராஜபக்ஷே குடும்பத்தினரின் கைகளில் சிக்கி ராணுவமயமாகிக் கொண்டிருக்கிறது.ராணுவத்தின் உதவி கொண்டு எதேச்சதிகார ஆட்சியை மெல்ல மெல்ல நிறுவ முயலும் ராஜபக்ஷேவுக்கு, குறைந்தபட்ச அதிகாரங்கள் கொண்டவைதான் என்ற போதிலும் சுயேட்சையான அதிகாரங்கள் கொண்டிருப்பதால் மாகாண அரசுகள் அவரது கண்களை உறுத்திக் கொண்டிருக்கின்றன.

செப்டம்பரில் மாகாணத் தேர்தல்கள் நடத்த வேண்டிய காலம்.குறிப்பாக எல்டிடிஇ இல்லாத நிலையில், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள தேர்தல் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்தேகத்திற்கிடமின்றி இங்கு தமிழ் தேசிய கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது நடந்தால் இயல்பாகவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம் கோரும் தமிழ் மக்களின் குரல் மேலும் வலுவடையும்.வடக்கு மாகாணமே இருக்கக் கூடாது என்று எண்ணும் ராஜபக்ஷே அரசுக்கு இது ஏற்புடையதல்ல. எனவேதான், தேர்தல் நடந்தாலும் அதிகாரம் ஏதும் இல்லாத, ஓர் பொம்மை அரசாக வடக்கு மாகாண அரசு இருந்துவிட்டு போகட்டும் என எண்ணுகிறது. அதற்கு தடையாக இருப்பது 1987 ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம்.திருத்தத்தை திருத்திவிட்டால் மொத்த அதிகாரமும் தனது கைக்கு வந்துவிடும் என்று கணக்குப் போடுகிறது அரசு. ஆனால் ராஜபக்ஷேயின் ஒரு சில ஆதரவு கட்சிகள் தவிர, அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ், லங்கா சமசமாஜ கட்சி உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடது முன்னணி ஆகியவையும் மாகாணங்களின் உரிமைகளை பறிக்கும் திருத்தத்தை கடுமையாக எதிர்த்துள்ளன. ராஜபக்ஷேயின் சொந்த அமைச்சர்கள் 8 பேர் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.அத்தனைக்கும் மேலாக, 1987 ஒப்பந்தத்தின் மற்றொரு தரப்பான இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அனைத்தையும் மீறி மாகாண அதிகாரங்களை பறிப்போம் என்கிறார் ராஜபக்ஷே. இலங்கையில் எதேச்சதிகாரம் எழுகிறது. அதற்கு எதிராக மக்களும் எழட்டும்!

- நன்றி தீக்கதிர் 

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments