காங்கிரஸ்- பாஜக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

ஊழல் என்ற குட்டையில் ஊறி மொதித்த மட்டைகள்தான் காங்கிரசும் பாஜகவும். ஊழல் என்னும் ஓட்டப்பந்தயத்தில் போட்டி வந்தால் காங்கிரசும் பாஜகவும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு ஓடும். அநேகமாக இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் வெற்றிக்கோட்டை தொட்டு விடக்கூடும். இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழல் குறித்து இருகட்சிகளும் சரமாரியாக குற்றம்சாட்டுவது, சவால்விடுவது, தொடைதட்டுவது என்று களத்தில் இறங்கியுள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது அரவிந்த் ஜெக்ரிவால் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியவுடன் பாஜகவினர் அவரை பாராட் டினர். ஆனால் அவரோ அதே வேகத்தில் பாஜக தலைவர் கட்காரி மீது பாய்ந்துவிட் டார். இப்போது இரண்டு பெரிய கட்சிகளும் சேர்ந்து கெஜ்ரிவாலுக்கு எதிராக தோள் தட்டுகின்றனர் நாங்கள் யானைகள், நீ சிறு ஈ என்று கெஜ்ரிவாலை விமர்சனம் செய்கின்றனர்.

அதிலும் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், எனக்கு பேனாவில் மை ஊற்றியும் எழுதத் தெரியும், ரத்தம் ஊற்றியும் எழுதத் தெரியும் என்று அகிம்சை உணர்வு பொங்கிட கெஜ்ரிவாலை அன்பாக மிரட்டினார். எனது தொகுதிக்குள் வந்துவிட்டு நீ உயிரோடு திரும்ப முடியுமா என்றும் பாசம் பொங்கிட கேட்டார்.இதற்கு பலத்த கண்டனம் எழுந்தவுடன், எங்கள் கட்சியுடன் மோதும் அளவுக்கு கெஜ்ரிவால் ஒன்றும் ஆள் கிடையாது. ஒரு எறும்பால் யானையை அழிக்க முடியாது என்றுதான் கூறினேன் என்றார். இந்நிலையில் சிம்லாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பதாக பாஜக கூறுவது வெறும் நாடகம் என்று கூறியுள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தா லும், பாஜக ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது. அப்படி இருக்கும் நிலையில் பாஜக நாடகம் போடுவது சரிதானா என்பது சோனியாவின் கருத்து.அத்துடன் நிற்கவில்லை அவர், காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான் ஊழல் மலிந்து விட்டது என்று கூறுவது வெட்கக்கேடான விசயம் என்றும் பொங்கியுள்ளார். போபர்ஸ் ஊழல் துவங்கி நிலக்கரி சுரங்க ஊழல் வரை, ஊழலை மறைக்க காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட முயற்சிகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் ஊழல் மலிந்துவிட்டது என்று கூறினால் அவருக்கு கோபம் வரத்தானே செய்யும்.போபர்ஸ் ஊழல் சம்பந்தப்பட்ட குவாத்ரோச்சியை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட முயற்சிகள் கொஞ்சமா நஞ்சமா? யாருக்கும் எளிதில் மனமிறங்காத மன்மோகன் சிங்கே வருத்தப்பட்டு, ஒரு வெளிநாட்டுக்காரரை இந்த அளவுக்கு பாடாய்ப்படுத்தியிருக்கக்கூடாது; இப்படி செய்தால் யாராவது வெளிநாட்டினர் முதலீடு செய்ய வருவார்களா என்று அழுதே விட்டார்.பீரங்கி வாங்க இடைத்தரகராக இருந்து ஆட்டை போடுவதற்கு பெயர்தான் அந்நிய முதலீடாம் இத்தகைய முதலீட்டாளர்களுக்குத்தான் வெற்றிலைபாக்குடன் விருந்து வைக்க தயாராகி வருகிறார் மன்மோகன் சிங். அலைவரிசை கற்றை ஊழல், நிலக்கரி ஊழல் என சுற்றி வளைத்து நெருக் கினாலும் காங்கிரஸ் கட்சி அதுகுறித்து கவலைப்படுவதே இல்லை.
 வந்ததைவிட வராததை நினைத்தே அவர்கள் அமைதி அடைகிறார்கள். காங்கிரஸ் மீதான ஊழல் புகார்கள் குறித்து பாஜக தலைவர் கட்காரி வீர வசனம் பேசிக்கொண்டிருந்தார். அன்னா ஹசாரே குழுவில் இருந்தவரை கெஜ்ரிவால் பாஜகவைப் பொறுத்தவரை நல்லவராகத்தான் இருந்தார். ஹசாரேவின் ஆசியுடன் அரசியல் கட்சி துவங்கியவுடன் பாஜகவையும் அவர் பாய்ந்து பிடுங்கத் துவங்கிவிட்டார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கட்காரி, சர்க்கரை ஆலை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களையும் நடத்தி வருகிறார். பூர்த்தி என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த நிறுவனங்களுக்கு விவசாயிகளை ஏமாற்றி ஏகப்பட்ட நிலத்தை சுருட்டியிருக்கிறார். இதைத்தான் கெஜ்ரிவால் வெளிப்படுத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டு கட்காரி மீது சுமத்தப்பட்டவுடன் பாஜக தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கட்காரிக்கு ஆதரவாக அணிதிரளத் துவங்கியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறும் அத்வானி, அத்துடன் நிற்கவில்லை. விசாரணை நடத்தப்பட்டால் கட்காரி தூய்மையானவர் என்று தெரியவரும் என்கிறார். அதாவது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரும் உள்குத்து குத்துகிறார். அத்வானிக்கு எதிராக மோடியை கொம்பு சீவிவிட்டவர் கட்காரி.

அதற்கு நேரம் பார்த்து கட்டாரியை வீசியுள்ளார் அத்வானி.பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ், கட்காரி மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை; இதை ஏற்க முடியாது என்கிறார். இவரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் உள்ளார். அத்வானிக்கும், மோடிக்கும் இடையில் நடக்கும் குத்துச்சண்டையில் இருவரையும் வீழ்த்தி தமக்கு கட்காரி ஆதரவு தரக்கூடும் என்று சுஷ்மா நினைத்திருக்கக் கூடும்.பாஜக அலுவலகத்திற்கு தண்ணீர் பானை வாங்குவதில் கூட தலையிடும் ஆர்எஸ்எஸ், கட்காரி ஊழல் விவகாரம் பாஜகவின் உட்கட்சி பிரச்சனை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளது. மொத்தத்தில் ஊழல் கறை நல்லது என்பதுதான் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் நிலை. ஊழல் சேற்றை இரண்டு கட்சிகளுமே வாரி வாரி பூசிக் கொள்ள தயங்குவதில்லை. இவர்கள் இப்போது போட்டுக்கொள்ளும் சண்டையே கூட ஒரு நாடகம்தான். நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல், ஊழல் குறித்து வேறு யாரும் பேசவிடாமல் பார்த்துக் கொள்வதில் இரண்டு கட்சிகளும் ஒற்றுமையாகவே செயல்படுகின்றன.

-மதுக்கூர் இராமலிங்கம்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

இன்றைய அரசியலில் யாரையுமே நம்ப முடியல ! உண்மைய சொல்லி இருக்கிங்க!
Unknown said…
மிகவும் அருமை நன்றி சகோ