பொதுவாக கிராமப்புறத்தில் “ஏழரையை இழுத்து விட்டு விட்டாயே” என்று கூறுவார்கள். இன் றைக்கு மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக் கும் மன்மோகன் சிங் அரசு மக்களுக்கு ஏழ ரையை இழுத்து விட்டுள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாள் நள்ளிரவில் பெட்ரோல் லிட்டருக்கு ஏழரை ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய மக்கள்அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
ஆனால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
என்பது போல மத்திய கூட்டணி ஆட்சிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர், இந்த விலைஉயர்வுக் கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும் இது எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு என் றும் கொஞ்சம் கூட நா நடுங்காமல் பொய் யுரைக்கிறார். பொதுவாக, “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடு வது” என்பார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ‘தொட்டிலில் கிடந்த குழந்தையை கொன்று விட்டு போலீசிலும் புகார் கொடுக்கச் சென்ற’ கதையாக நடிக்கிறது.
பெட்ரோல் விலை உயர்வினால் இந்திய மக் கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிர சும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒருவரை யொருவர் விஞ்சும் அளவுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
“சகிப்புத் திலகம்” மம்தா பானர்ஜி, கூட்ட ணிக் கட்சிகளை கலந்து கொள்ளாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கழுவிய மீனில் நழுவிய மீனாக நழுவுகிறார். இவரது கட்சியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் தம்மை கேட்காமல் கட்டணத்தை உயர்த்திவிட்ட தாகக் கூறி, அவரது பதவியை பறித்தார். இப் போது தம்மைக் கேட்காமல் பெட்ரோல் விலையை உயர்த்தியதற்காக அரசிலிருந்து தமது கட்சியை விலக்கிக் கொள்வாரா? அல் லது அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக் கிக் கொள்வாரா?
காங்கிரஸ் கூட்டணியில் நீண்ட காலமாக இடம்பெற்றுள்ள திமுகவின் தலைவர், பெட் ரோல் விலையை குறைக்குமாறு வலியுறுத்து வோம் என்று பட்டும் படாமல் கூறுகிறார். ஏதோ இந்த முடிவுகளுக்கும் தமது கட்சிக்கும் தொடர்பே இல்லை என்பது போல நடந்து கொள்ள முயல்கிறது திமுக. இந்தக் கட்சியைச் சேர்ந்தவர் தான் மத்திய உரத்துறை அமைச்ச ராக இருக்கிறார். உரத்திற்கான மானியத்தை வகைதொகை யின்றி வெட்டுகிறது மத்திய அரசு. உரவிலை தாறுமாறாக உயர்த்தப்படுகிறது. அதற்கும் கூட மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு தமது கடமை முடிந்துவிட்டது என்று கருதுகிறது
திமுக. மத்திய அமைச்சரவை உருவாக்கத் தின்போது வலுவான, கொழுத்த இலாக்காக்களை கேட்டு திமுக செய்த ஆர்ப்பாட்டத்தை நாடறியும்; நீரா ராடியா அறிவார். மக்களுக்கு பாதிப்பு என்றால் மட்டும் கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுவதை திமுக தனது கடமையாகவே வைத் துக் கொண்டுள்ளது. ஆனால் பதவிகளை பெறுவதில் மட்டும் அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டை பின்பற்றுகிறது.
இந்த விலை உயர்வை அரசு தீர்மானிக்கவில்லை என்றால், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நச்சரித்தபோதும், உ.பி. உள்ளிட்ட மாநில தேர்தல்களின் போது எண்ணெய் விலை உயர்வை நிறுத்திவைக்க காங்கிரஸ் கட்சியால் எப்படி முடிந்தது? அப்போது மட்டும் சர்வதேச சந்தையில் எண் ணெய் விலை குப்புற விழுந்துகிடந்ததா? அல்லது இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து சந்திர மண்டலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததா?
பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்க ளை வதைப்பதற்கு பதிலாக, கலால் வரி உள்ளிட்ட வரிகளை குறைப்பதன் மூலம் மக்கள் தலையில் சுமையை ஏற்றுவதை தவிர்க்க முடியும் என்று இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இப்போது எண்ணெய் நிறுவனங் கள், மத்திய அரசு கலால் வரியை குறைத்தால் விலை உயர்வை தவிர்க்கமுடியும் என்று கூறியுள்ளன. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு முதலாளிகளுக் கும் பல்லாயிரம் கோடி வரிச்சலுகைகளை வாரி வழங்கும் மன்மோகன்சிங் அரசு, இந்திய மக்களின் வாழ்வை சூறை யாடுவதில் மட்டும் ஈவிரக்கமின்றி நடந்து கொள்கிறது.
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ் தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் கூட பெட்ரோல் விலை நமது நாட்டை விட குறைவாகவே உள்ளது. உதாரண மாக, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை இந்தியாவை விட 26 சதவீதம் குறைவு.
இந்த லட்சணத்தில் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையையும் உயர்த்தப்போவதாக சங்கு ஊதி மணியடிக்கிறது மன்மோகன் சிங் அரசு. சிறப்புச் சலுகையாக விஷத்தின் விலையை மட்டும் குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இருக்கிறதோ என்னவோ?
மத்திய அரசின் வஞ்சகத்திற்கு எதிராக நாடு தழுவிய முறை யில் தன்னெழுச்சியாக கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. இது பெட்ரோல் கிணற்றில் விழுந்த தீயாக பற்றி பரவவேண்டும். தமிழ்நாட்டில் மே 31 முழு அடைப்புக்கு அழைப்பு விடப் பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக சுமையை ஏற்றினால் கழுதைகூட தரையில் படுத்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. கல்லால் அடித்து விரட்டிக் கொண்டே போனால் நாய் கூட திரும்பி குரைக்கிறது. நாம் மனிதர்கள்.
-மதுக்கூர் இராமலிங்கம்
நன்றி- தீக்கதிர் நாளிதழ்
உங்கள் கருத்துக்களை எழுத ....ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments