திமுகவின் ஆட்சியின் போது தொடக்கி வைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தை,
குழந்தைகள் நல உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற போவதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்புக்கு எதிர்ப்புக்கள் வலுப்பெற தொடங்கியுள்ளன.
தன்மானமுள்ள தமிழறிஞர்களே இதற்கு பதில் சொல்லட்டும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்த நிலையில், இக்கட்டிடத்தை மாற்றும் முடிவை தமிழக அரசு கைவிடா விட்டால் மாநில அளவில் கல்விமான்களை திரட்டி போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் சங்கத்தின் மாநில தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
8 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுததப்பட்ட இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது. நூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொதுநூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது.
டிபிஐ வளாகம் பள்ளிக் கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும்.
குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு உருவாக்க முடியும்.அதைச் செய்ய மனமில்லாமல், முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை.
ஆகவே, அரசு இந்த முடிவை கைவிடாவிடின், கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத்திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.
விமர்சனம் எழுத .....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments