தங்கம் - சும்மா பெயர கேட்டாலே அதிருதுல்ல.... என்ற ரஜினியின் பஞ்ச் டயலாக்கு பொருத்தமான வார்த்தை. நடுத்தர,மற்றும் ஏழை திருமண வயதிலிருக்கின்ற பெண்கள்,அவர்களின் பெற்றோர்களின் தூக்கத்தை கொடுக்கின்ற வார்த்தையாக தங்கம் இருக்கிறது. சிலமாதங்களுக்கு ஒருமுறை விலை உயர்ந்த காலம் போய் தினசரி விலை உயர்வு ஏற்படுகின்ற நிலைமை தற்போது. பெரும் முதலாளிகளால் நடத்தப்படுகிற (ஆன்லைன் வர்த்தகம்)ஊகவணிகம் காரணமாக விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. டாலர் மதிப்பு சரிவடைந்து வருவதால், டாலரில் முதலீடு செய்யும் மோகம் குறைந்துள்ளது.
தேவை அதிகரித்து வரும் நிலையில், தங்கம் உற்பத்தி அதனை ஈடுகட்டும் வகையில் உயரவில்லை. இந்நிலையில், பல நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றன.
கடந்த 2010ஆம் ஆண்டில் இலங்கை, பொலிவியா, மொரீஷியஸ் உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மொத்தம் 87 டன் தங்கத்தை வாங்கி உள்ளன.
அமெரிக்காவிடம் உள்ள தங்கத்தின் இருப்பு 8133.5 டன். கடந்த 2009ம் ஆண்டு கணக்கின்படி இந்திய ரிசர்வ் வங்கி வசமுள்ள தங்கம் கையிருப்பு 558 டன்னாகும். (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோவாகும்.) இந்தியா உலக தங்கம் தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயம் பொதுமக்களிடமும், கோவில்களிலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் அளவை கணக்கெடுத்தால் அது அமெரிகாவின் தங்க இருப்பைவிட
அதிகமிருக்க வாய்ப்புண்டு.
நம் நாட்டில் தங்கத்திற்கான தேவை, அடுத்த பத்தாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 1,200 டன்னாக அதிகரிக்கும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ) தெரிவித்துள்ளது, ஆதலால் தற்போதைக்கு தடையில்லாமல் தாறுமாறாக தங்கம் ஏறிக் கொண்டுதானிருக்கும்.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்க முதலீடு காரணமாக 2014-ல் ஒரு பவுன் தங்கம் 36 ஆயிரம் ரூபாயைத் தொடும் என்பது நிச்சயம். இது கற்பனையோ, சாத்தியமில்லாத யூகமோ இல்லை. கண்டிப்பாக இனி தங்கத்தின் விலை இறங்க வாய்ப்பே இல்லை. உயர்ந்து கொண்டேதான் இருக்கும். நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்பவர்களுக்கு எப்போதும் ஏறுமுகம் தான் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஒரு நிறுவனத்தின் வட்ட மேலதிகாரி.
பெங்களூரில் நடைபெற்ற ஒரு தமிழ் குடும்பத்தின் திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, அதில் மணப்பெண்ணும் சரி,கலந்து கொண்டவர்களும் சரி மிககுறைத்த அளவிலான நகைகள், பட்டுபுடவைகள் தவிர்த்து காட்டன் சேலைகள் உடுத்தியிருந்தது ஆச்சரியங்களுள் ஒன்று .இந்தியாவின் பிறமாநிலங்களைவிட தமிழகத்தில் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகம். மேலும் ஒரு தனிமனிதனின் அந்தஸ்தை தீர்மானிக்கிற விஷமாக பார்க்கப்படுகிறது.
கிட்டதட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிஞர் ஷேக்ஸ்பியரின் மஞ்சள் பூதம் என்ற கவிதையில் தங்கம் என்னவெல்லாம் செய்யும் என சொல்கிறார்.....
தங்கம் மஞ்சள் நிற ,ஜொலிக்கும்
ஆபூர்வ தங்கம்?
கடவுளே, வேண்டாம்
நான் சோம்பேறி,பக்திமான் அல்ல
அது கறுப்பை வெள்ளையாக்கி விடும்
மோசடியை நியாயமாக்கி விடும்
கயவனை கனவானாக்கிவிடும்
கிழவனை வாலிபனாக்கிவிடும்
கோழையை வீரனாக்கிவிடும்.
அவ்வளவு ஏன்
உங்கள் பக்கத்திலிருப்பதே
புரோகிதர்களுக்கும்
வேலைக்காரர்களுக்கும்
அதிருஷ்டம் என சொல்லிவிடும்,
பலவானின் சிரசிற்கு அடியில் இருக்கும்
தலையணைகளையும் உருவிவிடும்.
இந்த மஞ்சள் அடிமை
மதங்களைச் சேர்த்து வைக்கும்
அவற்றைப் பிளவு படுத்தும்
பாவிகளை மன்னிக்கும்
அழுகி நாறும் குஷ்டனையும்
தழுவ வைக்கும்
திருடர்களை அரசவையில் அமர்த்தி
பட்டங்களை அளிக்கும்....
மனிதகுலத்தின்
பொது விபச்சாரியே
தேசங்களுக்கு இடையில்
மோதல்களை அல்லவா
உருவாக்குகிறாய்...
பல நூறுஆண்டுகளுக்கு முன்பே எழுதபட்ட ஷேக்ஸ்பியரின் கவிதைகள் தற்போதைய காலத்திற்கும் சரியாக பொருந்துகின்றன.தங்கம் வரும் காலங்களில், ''வாடி என் தங்கம்!'' என்று கொஞ்சுவதற்கான வார்த்தையாக மட்டுமே தங்கம் மாறிப் போகுமோ....?!
அ.தமிழ்ச்செல்வன்
விமர்சனம் எழுத
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments