துப்பாக்கியில் இருந்து சீறிப் பாய்ந்த தோட்டாக்கள் பாய்ந்து சிறிதும், பெரிதுமாய் ஏழு பேர் செத்து விழுந்த பரமக்குடி காட்சிகள்... புதிய தலைமுறை இளைஞர் சமுதாயத்துக்கு வெகு புதிதாய் இருக்கலாம். ஆனால், இது புதிய காட்சி அல்ல. சர்வாதிகாரமும், ஏகாதிபத்தியமும் இரு கரம் கோர்த்து இந்த மண்ணை தனது காலடியின் கீழ் போட்டு மிதித்து ஆட்சி செய்த காலங்களில் அன்றாடம் நிகழ்ந்த சம்பவங்களே. சர்வாதிகாரம் விடைபெற்றுக் கொண்டு போய் விட்டது; ஜனநாயகம் ஆட்சி நடத்துகிறது என்ற நமது நம்பிக்கையை கடைசியாக துளைத்துத் தகர்த்திருக்கின்றன... போலீசாரின் துப்பாக்கிகளில் இருந்து அடுக்கடுக்காய் பாய்ந்த குண்டுகள்.
பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த அப்படி என்ன அவசியம்? - பாதிக்கப்பட்ட தரப்பு மட்டுமின்றி, கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவருமே ஆட்சியாளர்களை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்களே கூட மனம் கொதித்து வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள் என்றால்... பிரச்னையின் முக்கியத்துவம் புரியும். போலீசாரின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கிகள், அமைதியை ஏற்படுத்துவதற்குத்தானே தவிர, உயிர்களைப் பறிப்பதற்கு அல்ல! அரசியல் சாசனச் சட்டங்கள் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த சாதாரண விஷயம் இது.
துப்பாக்கிகளின் விசைகளை அழுத்தச் சொல்லி உத்தரவு கொடுத்தவர்கள், சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அழுத்தம் திருத்தமாய் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள் என்றால், அப்புறம் சர்வாதிகார சக்திகளுக்கும், இவர்களுக்கும் பெரிதாக என்ன வேறுபாட்டை நாம் கண்டுபிடித்து விடமுடியும்? ஒரு தரப்பு கற்களை எறிந்து தாக்குகிறது; மறுதரப்பு, துப்பாக்கிகளைக் கொண்டு சுடுகிறது என்றால்... இருதரப்புக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? இருவரும் வன்முறைக்காரர்களே.
பரமக்குடி மட்டுமல்ல; இந்தியா முழுவதுமே இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் என நீக்கமற தேசத்தின் சகல திசைகளிலும் அடித்தட்டு மற்றும் மலைவாழ் மக்கள் இந்தத் தேசத்தின் இயற்கைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். விலைமதிப்பற்ற இயற்கை வளங்களை கொள்ளையடித்து, பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக நமது ஆட்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பரமக்குடிக்கே வருவோம்! அங்கே கலவரத்துக்கான சூழலை உருவாக்கியவர்கள் யார்? கூட்டம் சின்னதாய் இருந்த போதே கலைத்திருந்தால் பிரச்னை வந்திருக்காதே? நடப்பது ஒரு சமூகத்தலைவரின் குருபூஜை விழா. எனும் போது, அந்த சமூகம் சார்ந்த பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த அங்கே வருவதுதானே இயல்பு? அப்படி வருபவர்களை வீணாக கைது செய்து, கலவரத்துக்கான விதையை விதைத்தவர்கள் யார்? அந்த சமூகத்தலைவரை கைது செய்ய அப்படி என்ன அவசியம்? அவர் வந்தால், கலவரம் வரும் என்று காரணம் சொன்னால், அப்புறம் அரசு என்று ஒன்று எதற்கு இருக்கிறது? 100 போலீசார் என்ற இடத்தில் ஆயிரம் பேரை நிறுத்தி, பாதுகாப்புக் கொடுத்திருக்கலாமே? இதற்கு முன் நடந்ததில்லையா? தவிர, நினைவுதினமான அன்றைய நாளில்தானே அஞ்சலி செலுத்த யாரும் வருவார்கள்? அப்படி இருக்க கைது செய்தது புத்திசாலித்தனமான நடவடிக்கைதானா?
சரி! கைது செய்தாயிற்று. தகவல் கேள்விப்பட்டதும் உணர்ச்சி வசப்பட்டு தொண்டர்கள் மறியலில் இறங்குவது எதிர்பார்க்கப்படுகிற ஒரு எதிர்விளைவுதான். மறியலை கலைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கவேண்டும். அது பலனளிக்காத பட்சத்தில் கும்பலை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியிருக்கலாம். ரப்பர் குண்டுகளைக் கொண்டு சுட்டிருக்கலாம். டம்மி வெடிகளை வெடிக்கச் செய்து கும்பலை மிரண்டு ஓடச் செய்திருக்கலாம்.
தடியடிப் பிரயோகம் மூலம் கலைத்திருக்கலாம். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருக்கலாம்.... இன்னும் எவ்வளவோ வழிமுறைகள் இருக்கிறது போலீசாரிடம். நிச்சயமாக கூட்டம் மிரண்டு ஓட்டம் பிடித்திருக்கும்.
அப்படியே, துப்பாக்கிச்சூடுதான் நடத்தியாகவேண்டிய கட்டாயம் என்றால், அதற்கும் இருக்கிறது முறை. உயிர் சேதம் ஏற்படாத அளவுக்கு, கால்களில் காயம் ஏற்படும் வகையில்தான் சுடவேண்டும். ஆனால், தலையிலும், மார்பிலும் குண்டுக்காயங்களுடன் செத்துக் கிடந்தவர்களும், சிகிச்சை பெறுகிறவர்களும்,
அங்கு நின்றிருந்த போலீஸ் அதிகாரிகளின் நோக்கத்தை நமக்கு நன்றாகவே தெளிவுபடுத்துகிறார்கள். குடிமக்களின் பாதுகாப்பை எந்த அரசு உறுதிப்படுத்துகிறதோ, அதுவே மக்களின் அரசாக, மக்களுக்கான அரசாக இருக்கமுடியும். காரணங்கள் ஆயிரம் சொன்னாலும் கூட... துப்பாக்கிகளையும், தூக்குக் கயிறுகளையும் கொண்டு உயிர் பறிக்கிற அரசு, சர்வ நிச்சயமாக மக்களுக்கான அரசாக இருக்கமுடியாது.
நடந்தது மிகப்பெரிய தவறு. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதுகுறித்து விமர்சிக்கக்கூடாது, எதிர்மறை கருத்துக்களை எழுப்பக்கூடாது என யாரும் கருதுவார்களேயானால், அது இன்னும் பெரிய தவறாகி விடும். காரணம்,
நாம் எடுத்த முடிவும், முடிவின் விளைவும் சரியானதுதானா என நமக்கு உணர்த்தி புரியவைப்பவை நேர்மையான விமர்சனங்கள் மட்டுமே. அந்த வகையில், மனித உரிமை ஆர்வலர்கள், மனித உயிர்களை நேசிப்பவர்கள் துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து அழுத்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது கண்டனக் குரலுக்கு பின்னால் மறைந்திருப்பது, இந்த அரசுக்கு எதிரான வெற்று விமர்சனங்கள் அல்ல. இனிவரும் எதிர்காலத்தில், இதுபோன்ற மக்கள் விரோத சம்பவங்கள் தவறியும் நடந்து விடக்கூடாது என்கிற நேர்மையான ஆதங்கமே!
திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
Comments