வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து சேவா என்ற வைரஸ் மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருடப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை.
இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. செர்ட்-இன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நிழல் உலக சந்தையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'சோவா' என்ற வைரஸ் முதல்முறையாக விற்பனைக்கு வந்தது. அது, யூசர்நேம், பாஸ்வேர்டு ஆகியவற்றை திருடக்கூடியது. முதலில், அமெரிக்கா, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளை அந்த வைரஸ் குறிவைத்தது. கடந்த ஜூலை மாதம், இந்தியா உள்பட பல நாடுகளை தனது இலக்கு பட்டியலில் சேர்த்துள்ளது.
அந்த வைரஸ் மொபைல் ஆப் மூலமாக நுழைந்து மொபைல் பேங்கிங் செயலியை வாடிக்கையாளர் பயன்படுத்தும்போது, யூசர்நேம், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திருடி விடும். இது, வங்கிக்கணக்கில் உள்ள பணம் திருடு போவதற்கு வழி வகுக்கும். எனவே, வாடிக்கையாளர்கள் ஆபத்தான செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். முறையான 'ஆப் ஸ்டோர்' மூலமாக செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். நம்பகத்தன்மையற்ற வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடாது. மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் சந்தேகத்துக்குரிய 'லிங்க்'குகளை திறக்கக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments