பிப்.18 செவ்வாய் கிரகத்தில் பறக்க போகும் முதல் ஹாலிகாப்டரும் -2050 அமையவுள்ள smartcity யும்

 


           செவ்வாய் சூரியக் குடும்பத்தில் நான்காவது கோளாகும். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இதை செந்நிறமாகக் காட்டுவதால் செவ்வாய் எனப்படுகிறது. சூரியக் குடும்பத்தில் இரண்டாவது சிறிய கோளான செவ்வாய்க் கிரகத்திற்கு பூமியின் துணைக்கோளான நிலாவைப் போல்    போபாஸ்,தைமாஸ் என்ற மிகச்சிறிய இரண்டு துணைக்கோள்கள் உள்ளன.

  பூமியிலிருந்து அதன் தொலைவு சராசரியாக 20 கோடி கிலோமீட்டர் ஆக உள்ளது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை 5.7 கோடி கிலோமீட்டர்கள் தூரத்தில் நெருங்கிவரும். இதுவே பூமியிலிருந்து நிலவின் தூரமான 3.84 லட்சம் கிலோமீட்டரை விட 150 மடங்கு அதிகமாகும்.

புவியின் விட்டம், கொள்ளளவுடன் ஒப்பிட்டால், நமது பூமியில் செவ்வாயை போலுள்ள ஆறு கிரகங்களை உள்ளடக்கிவிட முடியும். புவியின் நிறையில் பத்தில் ஒரு பங்கையே தனது நிறையாக கொண்டுள்ள செவ்வாயின் ஈர்ப்புவிசை புவியைவிட 62% குறைவு. அதாவது, பூமியில் 100 கிலோ எடையுள்ள மனிதர் செவ்வாயில் 38 கிலோ எடை மட்டுமே கொண்டிருப்பார்.  பூமியின் வளிமண்டல அழுத்தத்துடன் ஒப்பிடும் போது செவ்வாயின் வளி அழுத்தம் 1%-த்திற்கும் குறைவு தான்.


செவ்வாயின் நிலப்பரப்பு சிலிக்கான், ஆக்சிஜன், உலோகங்களை உள்ளடக்கிய தாதுக்கள் மற்றும் பாறைகளை உருவாக்கும் தனிமங்களையும் கொண்டதாகவும் மேற்பரப்பு அதிகமான புழுதி படலத்தை கொண்டதாகவும் உள்ளது. துருவப்பகுதி பூமியைப் போலவே பனி சூழ்ந்திருந்தாலும், அப்பனி பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்சைடை கொண்டதாக உள்ளது. செவ்வாயில் சராசரி வெப்பநிலை −55°C, அதன் நிலநடுக்கோட்டு பகுதியில் கோடைக்கால மதியத்தில் அதிகபட்சமாக 20°C வெப்பநிலை ஏற்படலாம் , குளிர்காலத்தில்

 -200°C, என கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் உயரமான இமயமலையை விட

 செவ்வாயில்  ஒலிம்பஸ் என்ற மலை உயரம் அதிகம்.

 செவ்வாயின் உள்மையப்பகுதி புவியின் மையப்பகுதியை போல் பாறைக் குழம்பாக இல்லை. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே குளிர்ந்து விட்டதால் செவ்வாயில் காந்தப்புலம் இல்லை. அதனால் சூரியக்கதிர்வீச்சு, விண்கதிர்வீச்சின் அளவு அதிகம். அதிக கதிர்வீச்சும், குறை ஈர்ப்பு விசையும்,  மனித உடற்கூறில் மாற்றங்களை ஏற்படுத்தும் அபாயமுள்ளது.

செவ்வாய்க்கு படையெடுக்கும்  விண்கலங்கள்

பூமி சூரியனை 365 நாட் களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது ஆனால், செவ்வாய்க்கு ஒரு சுற்று சுற்றி வர 687 நாட்கள் எடுக்கும். (  உங்களுக்கு 50 வயது என்றால் செவ்வாயில் 25 வயதுதான் ஆகும்)எனவே சுமார் 26 மாதங்களுக்கு ஒரு முறை பூமியும் செவ்வாயும் நெருங்கி வரும். இதை பயன்படுத்தி செவ்வாய்க்கு  விண்கலங்கள் படையெடுக்க துவங்கியுள்ளன.2013 ல் அனுப்ப பட்ட இந்தியாவின் மங்கல்யானும் இந்த உத்தியை பயன்படுத்தி அனுப்பட்டு தற்போதும்  செவ்வாயை ஆய்வு செய்து வருகிறது.


       ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் நம்பிக்கை என்ற பொருள் தரும் 'அல் - அமல்' விண்கலம், சொர்க்கம் குறித்த கேள்விகள் என்ற பொருள் தரும் சீனாவின் தியான்வென் -1 (Tianwen 1), 'விடாமுயற்சி' என்ற பொருள் தரும் பெர்சிவரன்ஸ் (Perseverance) என்கிற ரோவர் ரோபோ விண்கலத்தை ஏந்தி செல்லும் அமெரிக்காவின் 'மார்ஸ் 2020’ ஆகிய 3 விண்கலங்களும் செவ்வாயை நோக்கி சீறி பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மாதங்களில் ஒவ்வொன்றாக செவ்வாயை அடையும்.

                       இதில் அமெரிக்காவின் மார்ஸ்20202 வரும் பிப்18. 2021 அன்று செவ்வாயில் தரையிருங்குகிறது. இந்த  விண்கலம் தனிச்சிறுப்பு மிக்கது. பாத்பைன்டர் போன்ற ரோவர்களை ஏற்கனவே செவ்வாய் கிரக தரையில் இறக்கி ஆய்வு செய்திருக்கும் அமெரிக்கா இந்த முறை ரோவருடன் ஹெலிகாப்டர் ஒன்றையும் செவ்வாய் கிரகவானில் முதல் முறையாக பறக்க விடுகிறது.

                  ரோவர் சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ள ரோபோ ஒன்று செவ்வாய்கிரக தரையை துளையிட்டு ஆய்வு செய்யும்,மண்,கல் மாதிரிகளை சேகரித்து வைக்கும். எதிர்காலத்தில் செவ்வாய்க்கு செல்லும் மற்றொரு விண்கலம் மூலம் அவற்றை பூமிக்கு கொண்டுவரும் திட்டமும் உள்ளது. அடுத்த 2 ஆண்டுகள் தினந்தோறும் செவ்வாயின் வானிலையை கண்காணிப்பது போன்ற பல நுணுக்க  ஆய்வுகளை  செய்யும் .ரோவரில்  ஆக்ஸிஸன் தயாரிக்கும் கருவியும் உள்ளது எதிர்காலத்தில் மனிதர்கள்செவ்வாய்க்கு செல்லும் போது  ஆக்ஸிஸன் தேவைக்குக்கான ஆய்வாக இது இருக்கும்.

                  ரோவர்,ரோபோவும் தரைப்பகுதியில் ஆய்வு செய்யும். அதே நேரத்தில் செவ்வாயின் கால்வாய்கள்,ஒடைகள்,பள்ளத்தாக்குகளில் ஹெலிகாப்டர்பறந்து சென்று ஆய்வு செய்யும்.  வளிமண்டலம் குறைவாக இருப்பதால் மிக வேகமாக அதன் இறக்கைகள்சுற்றும், சூரிய சக்தியில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.தற்போது செவ்வாயை நோக்கி செல்லும் 3 விண்கலங்களும் எதிர்காலத்தில் மனிதர்கள் செவ்வாயில் குடியேற புதிய தகவல்களைகொண்டுவந்துசேர்க்கும்.

       

 மனிதர்கள் செவ்வாய்க்கு செல்ல முடியுமா?

 தற்போதுள்ள  விண்வெளி தொழில்நுட்பத்தில் செவ்வாயக்கு மனிதர்களை அனுப்பலாம், மீண்டு திரும்ப முடியாது,ஒருவழிப்பாதைதான்.

       


   மனிதர்கள் செவ்வாய்க்கு செல்ல வேண்டுமானால், இவ்வளவு தூரம் செல்வதற்கும் திரும்பி வருவதற்கான எரிபொருள், அவர்களுக்கான ஆக்சிஜன், உணவு, உடை இவற்றுடன் பாதுகாப்பு சாதனங்கள் என அதிக எடையை கொண்டு செல்லும் பெரிய விண்கலம் தேவை. மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப 30 டன் எடையை சுமந்து செல்ல வேண்டியிருக்கும் என்கிறது  அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவின் மதிப்பீடு. குறைந்த காற்றழுத்தம், மற்றும் ஈர்ப்பு விசை காரணமாக செவ்வாயில் அதிக எடை கொண்ட விண்கலத்தை தரையிறக்குவது கடினம்.

விண்கலங்கள் சாதாரண விமானம் போல் மேலெழும்பி விண்ணுக்கு சென்று விடாது. பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட அவை வேகமாக ஒரு நொடிக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தை எட்ட வேண்டும். இதற்கு ராக்கெட்டுகள் தேவைப்ப்டுகின்றன. இதற்கான ராக்கெட்டை தயாரிக்க நம் புவியிலேயே குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கும் மேலாகும். செவ்வாயிலிருந்து திரும்புவதற்கு அதன் விடுபடும் வேகம் ஒரு வினாடிக்கு 5 கிலோமீட்டர் அளவில் உள்ளது. இதனால் செவ்வாயிலிருந்து விண்கலம் கிளம்ப அங்கும் ஒரு ராக்கெட் தேவைப்படும்.

  ஏற்கனவே சொன்னது போல தற்போதுள்ள நிலையில் ஒருவழிபாதைதான்  அங்கே நிரந்தரமாக குடியேறுவதுதான் வழி.

செவ்வாய் குடியேற்றம்

2050 வாக்கில் செவ்வாயில்  Smartcity   உருவாக்க படும் என அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் இலன்மஸ்க் தெரிவித்துள்ளார்.செவ்வாயில் மனிதர்கள் தங்க நிர்மாணிக்கப்படும் குடில்களில்   செவ்வாயின் தரைக்கு அடியில் தங்குமிடம்,  காய்கறி பயிரிடும் பகுதி, உடற்பயிற்சிக்கான பகுதியுடன் பிரத்யோக ஆய்வகமும் இருக்கும் என்றும் இக்குடில்கள் மனிதர்களுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொடுப்பதோடு, சூரிய கதிர்கள், விண்கதிர்கள், புழுதிப்படலம், நுண்கிருமி தொற்று, தட்பவெப்பம் ஆகிய அனைத்திலிருந்தும் பாதுகாக்கும் என்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பு திட்டமான மார்ஸ் ஒன் தெரிவித்துள்ளது. மேலும் செவ்வாயின் குறைவான ஈர்ப்பு விசையை சமாளிக்க விண் வெளியாளர்களுக்கு பிரத்யோக உடையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.



எல்லா பிரச்சனைகளையும் தொழில்நுட்ப ரீதியாக தீர்க்கமுடியுமென குறிப்பிட்டுள்ள மார்ஸ் ஒன் மனித குலத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல சில சவால்களை, அபாயங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டுமென்றும் கூறியுள்ளது.

 எனது கட்டுரை வெளியிட்ட தமிழ்டாக்ஸ் இணையத்திற்கு நன்றி


 கட்டுரை தகவல்களோடு கீழே சில காணொலி இணைப்பு  இணைத்துள்ளேன்

1.செவ்வாய் கிரகத்தில் குடியேற நீங்கள் ரெடியா?

https://www.youtube.com/watch?v=9uRAYG5ypNU


2.செவ்வாய் கிரகத்தில் பறக்கபோகும் முதல் ஹலிகாப்டர்

https://www.youtube.com/watch?v=RrUM9DcknKA


3.பிப்.18-2021 மார்ஸ் ரோவர் படிபடியாக செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கும் காட்சி

https://www.youtube.com/watch?v=g351N3on1D8


4.இன்னொரு பூமியாக மாறுமா செவ்வாய் கிரகம்?

https://www.youtube.com/watch?v=900uQBvNMOU


Comments