வீரர்கள் நின்று கண்காணிக்கும் வகையில் ஏழு கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறச்சுவர்களில் பலவிதமான பாறைக்கற்களைக் கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால் இக்கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. கோட்டை கட்டுவதற்கான செங்கற்களை அப்பகுதியிலேயே தயாரித்து சுட்டு பயன்படுத்தியுள்ளனர். மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பாறைகளை வெட்டி எடுத்தபின் அதில் ஏற்பட்ட பள்ளம் இக்கோட்டைக்கு அகழி போன்று அமைந்துள்ளது.
கி.பி.1877 ஆம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. வெள்ளத்தின் காரணமாகவோ, பெயர்த்தெடுத்ததன் காரணமாகவோ இக்கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த கற்கள் தற்போது பெருமளவில் இல்லை. கற்கள் பெயர்ந்து போன நிலையில் கற்கோட்டையாக இல்லாமல் வெறும் செங்கல் கோட்டையாகவே இப்போது காட்சியளிக்கிறது.
இக்கோட்டை வட்டவடிவமானது. இது போல வட்டவடிவக் கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரியிலும் உள்ளது. தற்போது உள்ள வட்டவடிவக் கோட்டைகளில் காலத்தால் பழமையானது கமுதியில் உள்ள கோட்டை. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இக்கோட்டையை நினைவுச் சின்னமாக பாதுகாத்து வருகிறது. இக்கோட்டையைக் கட்டியது யார் எனப் பார்ப்போம்.
இராமநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சேதுநாட்டை ஆண்ட சேதுபதி மன்னர்கள் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பல கோட்டைகளைக் கட்டியுள்ளனர். கிழவன் சேதுபதி, சேதுபதிகளில் மிகச் சிறந்த மன்னராகக் கருதப்படுகிறார்.
அவருக்கு இணையான சிறப்புக்கு உரியவர் கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட திருவுடையத்தேவர் என்ற முத்து விஜய ரெகுநாத சேதுபதி. இவர் கமுதி, பாம்பன், ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் பிரான்ஸ் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் புதிய வடிவங்களில் கட்டப்பட்டுள்ளன. கமுதிக்கோட்டை வட்ட வடிவமும், செங்கமடை கோட்டை அறுங்கோண வடிவமும் கொண்டவை. பாம்பன் கோட்டை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது போக எஞ்சி இருந்ததும், 1964 இல் வீசிய புயலில் அழிந்துவிட்டது. எனவே அதன் வடிவமைப்பைத் தெரிந்துகொள்ள இயலவில்லை.
கமுதிக்கோட்டையைக் கட்டிய சேதுபதி மன்னர் திருவுடையத்தேவர், 12 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும் கிழவன் சேதுபதிக்கு இணையான நிர்வாகச் சிறப்புக்குரியவர். அவரின் மேலும் சில சிறப்புகள் கீழே:
குண்டாறு, பரளையாறு ஆகிய இரு ஆறுகளும் இணையும் இடத்திலிருந்து இரகுநாதகாவிரி என்ற கால்வாய் வெட்டி உத்தரகோசமங்கை அருகே உள்ள களரிக் கண்மாயுடன் இணைத்து வறண்டுபோன பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையைப் பெருக்கியவர்.
தன் இரு மகள்களின் கணவனான, இராமேஸ்வரம் பகுதி அரசப் பிரதிநிதியாய் இருந்த தண்டத்தேவருக்கு, சிவத்துரோகம் செய்தார் எனக் கருதி மரணதண்டனை விதித்தவர். அதன் பிறகு அவரின் இரு மகள்களும் உடன்கட்டை ஏறினர். இருமகள்களின் நினைவாக அக்காள்மடம், தங்கச்சிமடம் என இரு மடங்களை உருவாக்கினார். இன்று அப்பெயரில் அங்கு இரு ஊர்கள் உருவாகியுள்ளன.
இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையின் உள் பகுதி முழுவதும் ஓவியங்கள் தீட்டி அழகுபடுத்தியவர். அதில் உள்ள ஓவியங்களில் இருப்பவரும் அவரே. இராமநாதபுரம் நகரில் உள்ள முத்துராமலிங்கசுவாமி ஆலயம் இவர் காலத்தில் கட்டப்பட்டதே.
இவர் பல தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்தார். மதுரை சொக்கநாதப் புலவரின் பணவிடு தூது, தேவை உலா ஆகிய நூல்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டவை.
இவ்வளவு சிறப்புக்குரிய திருவுடையத்தேவர் தான் கமுதிக்கோட்டையை கட்டினார். ஆனால் நினைவுச் சின்னமாகப் பராமரித்து வரும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இதை, அத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் என்ற பகுதியில் கட்டபொம்மன் கோட்டை எனவும், நினைவு சின்னம் பற்றிய தகவல் பகுதியில் கமுதிக்கோட்டை எனவும் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை 2010இல் வெளியிட்ட தகவல் அட்டையில் இதை கட்டபொம்மன் கோட்டை என்றே பதிவிட்டுள்ளது. ஏற்கனவே சேதுபதிகளின் பல வரலாற்றுத் தடயங்கள் அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளதும் தவறான பெயருடன் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
எனவே கோட்டையைக் கட்டிய மன்னர் பெயரில் கமுதிக்கோட்டைக்கு திருவுடையத்தேவர் கோட்டை என பெயரிட்டு பாதுகாக்க தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையை கேட்டுக் கொள்கிறேன்.
கட்டுரையாளர்:
வே.இராஜகுரு, தலைவர்,
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்,
இராமநாதபுரம்.
Comments