உடல் கூட்டினை தணித்து நிம்மதியான உறக்கத்தினை தந்திடும் பாரம்பரியம் மிகுந்த பனைநார் கட்டில்கள் தயாரித்திடும் பணிகள் திருமங்கலம் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நமது முன்னோர்களின் வாழ்வு ஓர் அறம் சார்ந்த அறிவியலாகவே இருந்து வந்துள்ளது.அதனை நாம் மேற்கொள்ளும் போது உடல்நலம்,மனநலம் என வாழ்க்கையே உற்சாகமானதாக மாறிவிடுகிறது.இதன் ஒருபகுதியாக செயற்கையாக பொருட்களால் உருவாக்கப்படும் மெத்தைகளுக்கு மாற்றாக 100சதவீதம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பனைநார் கட்டில்களுக்கு தமிழ்நாட்டில் மீண்டும் மவுசு அதிகரித்து வருகிறது.இயற்கையான பனைநார் நமது தோலில் நேரடியாக படும்போது வியர்வை துவாரங்கள் சீராவது மட்டுமின்றி இறந்த செல்கள் வெளியேறிட வசதிசெய்வதாக பழங்கால ஏடுகளில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.நமது உடலில் உண்டாகும் வெப்பத்தை சமப்படுத்தி உடல்சூட்டை பனைநார் கட்டில்கள் தணித்திடும் தன்மை கொண்டதாகும்.இதனால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வெப்பம் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது.மேலும் சிறுநீரகங்கள் அதன் பணிகளை துரிதமாக செய்து உடலுக்கு ஒத்திசைவான சூழலை உருவாக்கி உடலில்பித்தம் அதிகரிக்காமல் உடல் மிகவும் குளிர்ச்சியாக இருக்க பனைநார் கட்டில்கள் பெரிதும் உதவுகிறது.
பனைநார் கட்டில்கள் பெருமளவு உடல்சூட்னை தணிப்பதால் முடிஉதிர்தல் பிரச்சனை 90சதவீதம் கட்டுப்படுத்தப்படுகிறது.அதுமட்டுமின்றி சிறுநீரகங்கள் சிறப்புடன் செயல்படுவதால் உடல் சரியாக இயங்கிஇரத்த ஓட்டங்கள் சீராக இருக்கும்பட்சத்தில் தூங்கி எழுந்திடும் போது உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருந்திடும்.தூக்கத்தில் இருந்து எழும்போது ஏற்படும் தலைவலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பனைநார் கட்டிலினால் தீர்க்கப்படுகிறதாம்.ஆனால் இத்தகைய சிறப்புடன் பாரம்பரியம் மிக்க பனைநார் கட்டில்களின் ஆதிக்கம் தற்போது மீண்டும் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.பனைமரத்து நார் எடுத்து கட்டப்பட்ட கட்டில்கள் உடல்சோர்வு மற்றும் மனச்சோர்வினை போக்குவதற்கு இன்றைய அவசர வாழ்வில் அவசியத் தேவையாக மாறிவருகிறது.நாம் பயன்படுத்திடும் மெத்தைகள் உடல் சோர்வினை போக்குவதற்கு பதிலாக உடலை அதிகளவு சூடாக்குகிறது.அதனால் எவ்வளவு நேரம் தூங்கினாலும் அசதியோடே இருக்க நேரிடுகிறது.
ஆனால் முழுவதும் இயற்கையான பனைநார் கட்டில் நமது உடல்சோர்வினை முற்றிலுமாக நீக்கிட பெரிதும் உதவுகிறது.
பலரால் தூக்கப்படும் குழந்தைகள் இரவினில் உடல்வலி காரணமாக தூங்காமல் அழுவது வழக்கம்.அதற்கு பரிகாரமாக நமது முன்னோர் குழந்தையை முறத்திலிட்டு ஆட்டுவார்கள்,இல்லையென்றால் வேஷ்டியிலிட்டு ஆட்டுவார்கள்.இதை தொடர்ந்து உடல்வலி நீங்கி குழந்தைகள் நிம்மதியாக தூங்கிடும்.அதே போல் தான் இந்த பனைநார் கட்டிலும் மசாஜ் செய்வது போல் உடலை லேசாக அழுத்தி உடல் அலுப்பினை முழுவதுமாக நீங்கச்செய்து நம்மை நிம்தியாக தூங்க வைக்கிறது. பலருக்கு எழுந்த பிறகு கண்எரிச்சல் காரணமாக ஏற்படும் உடல்சூட்டினை பனைநார் கட்டில்கள் முழுவதுமாக நீக்குகிறது.இந்த கட்டிலில் உள்ள துளைகள் கட்டிலின் கீழே இருந்தும் காற்று தந்திடுகிறது.இது உடல் சூடு ஏற்படுவதை இல்லாமல் செய்து விடுகிறது.எனவே தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்திடும் பனைமரத்திலிருந்து சேகரிக்கப்படும் பனைநாரிலிருந்து உருவாக்கப்படும் கட்டில்களுக்கு தற்போது சந்தையில் மவுசு அதிகரித்து வருகிறது.மேலும் பனைநார் கட்டில்களின் பயன்பாடு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தங்களாச்சேரி மற்றும் எஸ்.மீனாட்சிபுரம் அன்னவயல் களத்தில் பனைநார் கட்டில்கள் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.அதன்படி இயற்கை விவசாயியாக உள்ள அன்னவயல் களத்தின் நிர்வாகி காளிமுத்து என்பவர் பனைமரத்திலிருந்து நாரினை பிரித்தெடுத்து அதனை சீர்செய்து பூவரசமரத்தின் கட்டைகளால் ஆன கட்டிலில் பின்னி பாரம்பரியம் மிகுந்த பனைநார் கட்டில்கள் மற்றும் மடக்கு கட்டில்களை தரமுடன் உற்பத்தி செய்து வருகிறார். இந்த கட்டில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.தற்போது ரூ.6500 முதல் ரூ.8500 வரையில் இந்த பனைநார் கட்டில்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் மரவேலை செய்பவர்கள்,பனைநார் பின்னுபவர்கள் என ஏராளமானோருக்கு இங்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.செயற்கையான பொருட்களை உபயோகிப்பதனால் மக்களின் வாழ்க்கை செயலிழந்து வரும் நிலையில் இயற்கையான பொருட்களை உபயோகிப்பதில் பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால் பாரம்பரியம் மிக்க பனைநார் கட்டில்கள் பயன்பாடு பொதுமக்களிடையே தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது.எனவே இயற்கையினை போற்றிடும் விதத்தில் உடலுக்கு புத்துணர்ச்சியினை தந்திடும் பனைநார் கட்டில்கள் மீண்டும் ஒரு ரவுண்டு வந்திடும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது….. பாரம்பரியம் காப்போம்….. பலனடைவோம்….
ஆக்கம். ஜெ.எஸ்.செல்வராஜ். திருமங்கலம்.
Comments
on other blogs? I have a blog centered on the same subjects you discuss and
would really like to have you share some stories/information. I know my visitors would enjoy your work.
If you are even remotely interested, feel free
to shoot me an email.