உளவாளி செயலிகள்-எச்சரிக்கையுடன் பயன்படுத்துவோம் கைபேசியை!



சொன்னபடி கேட்கும், வேண்டியதைத் தேடித்தரும், நினைத்ததைப் பகிர முடியும் என்ற வசதிகளைத் தாண்டி ஸ்மார்ட் போன்கள்
யாருக்கு ஸ்மார்ட்டாக இருக்கின்றன என்பதுதான் தற்போதைய விவாதமாக மாறிவருகிறது.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தைப் பயன்படுத்தி கூகுள் உளவு பார்ப்பதாக ஒரு புகார் உண்டு. அதேபோல ஆப்பிளின் ஐஓஎஸ் மீதும் இப்படி ஒரு புகார் முன்பு வந்திருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பலவற்றின் மீதும் இதுபோன்ற புகார்கள் பல உள்ளன. அந்த வரிசையில் செல்போன் செயலிகள் பலவும் இதே புகாருக்கு உள்ளாகி வருகின்றன.
ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் நிறுவனங்களின் வருமானமே நம்முடைய செய்திப் பரிமாற்றத் தரவுகளின் அடிப்படையில்தான். நமக்கு சில பயன்பாட்டு வசதிகளை தந்துவிட்டு, நாம் பகிரும் தகவல்களை மூலதனமாக்கி வருமானம் ஈட்டுவது
அவர்களின் வணிகத் தந்திரம். இந்தத் தகவல்கள் நேரடியாக நம்முடைய வாழ்க்கையில் குறுக்கீட்டை ஏற்படுத்துமா என்பது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) கைகளில்தான் உள்ளது.
உளவு செயலிகள்
உளவு பார்ப்பது ஒன்றை மட்டுமே தன் வேலையாகக் கொண்டு செயல்படும் செயலிகள் பல தற்போது வந்துவிட்டன. முன்னர் சொன்னநிறுவனச் செயலிகளைப் போல நமக்கு எந்தப் பயனையும்அவை தருவது இல்லை. மாறாக நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம், யாருடன் வாட்சப் சேட் செய்கிறோம்,ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் என்ன?, யாருடன் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், யாருடன் செல்ஃபி எடுக்கிறோம் என்று எல்லா தகவல்களையும் உடனுக்குடன் தன்னுடைய எஜ மானருக்கு பகிர்ந்து கோண்டே இருப்பதுதான் இச்செயலிகளின் முழு நேர வேலை. தனி நபர் களைக் குறிவைத்து அவர்களைக் கண்காணித்து உளவறியும் இந்த செயலிகள் மிகவும் ஆபத்தான சமூகச் சிக்கல்களை உருவாக்கி வருகின்றன.இது சாத்தியமா என்பவர்களுக்கு அமெரிக்காவின் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆண்ட்ராய்டு செயலி மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அவர்கள் உருவாக்கிய ஆண்ட்ராய்டு செயலி யைக் கொண்டு மொபைல் போன் மூலம் ஒருவரின் இருப்பிடம் மற்றும் பயணிக்கும் இடங்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும் என நிரூபித்துள்ளனர். இந்த ஆய்வு குறித்து அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்குவேரா நோபிர், “கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களைப் பதிவிறக்கும் பிளே ஸ்டோரில் 25 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தி எந்தவொரு நபரும் ஒரு செயலியை மக்களின் பயன்பாட்டுக்காக பதிவேற்ற முடியும். அந்த செயலிகளின் நம்பகத்தன்மை குறித்து யாரும் சோதிப்பதில்லை. எனவே ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும் போது அதன் நம்பகத்தன்மை குறித்து சிந்தித்து நாம்தான் முடிவெடுக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். பள்ளி செல்லும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிப்பதற்கு, வேலையாட்களை முதலாளிகள் கண்காணிக்க என்பது போன்ற முகமூடிகளுடன் உளவு செயலிகள் சில கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. இந்த செயலிகளைப் பயன்படுத்தி இருப்பிடம் அறிவது, போன் கால்கள், குறுஞ்செய்திகளை கண்காணிப்பது போன்ற சில வசதிகள் கிடைக்கின்றன. ஆனால், மொத்த போனின் செயல்பாட்டையும் உளவறியக்கூடிய செயலிகள் பல இணையவெளியில் கட்டணத் திட்டத்தில்கிடைக்கின்றன. இந்த செயலிகளை எப்படிப் பயன்படுத்துவது, உளவு பார்க்க வேண்டியவரின் கைபேசியில் எப்படி நிறுவுவது, மாதக் கட்டணம் எனப் பல தகவல்களும் இத்தளங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புகருதி இத்தகைய இணையதளங்கள், செயலிகள் பற்றிய விபரங்கள் இக்கட்டுரையில் இடம்பெறவில்லை.
தற்காப்பு குறிப்புகள்
உளவு செயலிகள் யாருடைய ஸ்மார்ட் போனிலும் நிறுவப்பட்டிருக்கலாம். கண்டறிவது சற்றுக் கடினமே. காரணம் இச்செயலிகள் சுய பெயருடன் பெரும்பாலும் நிறுவப்படுவதில்லை என்பதுதான். செட்டிங்ஸ், டூல்ஸ் என்ற பெயரிலோ அல்லது செயலிப் பட்டியலில் இடம்
பெறாமலோ (Hide) மறைந்திருக்கலாம். இத்தகைய செயலிகள் நிறுவப்பட்டிருக்கிறதா என்பதை தொடர் கண்காணிப்பின் மூலமே கண்டறியமுடியும். சந்தேகப்
படுபவர்கள் மேற்கொள்ளவேண்டிய சோதனைமுறைகள் சில


1. ஃபோனின் இணையத் தொடர்பு தானாகவே செயல்பாட்டிற்கு வருகிறதா என்பதை கண்டறியவும். (Data Activated)
2. ஒய்ஃபீ (Wifi) இணைப்பு தானாகவே செயல்படுதல்.
3. அணைத்து வைக்கப்பட்ட லொக்கேஷன் (Location) வசதி தானாகவே செயல்பாட்டிற்கு வருதல்.
4. குறுஞ்செய்திகளோ, கால்களோ வராத நிலையில் திரை தானாகவே விட்டு விட்டு ஒளிர்தல்.
5. வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் தகவல்களை நாம் பார்க்காமலே படித்ததுபோலக் காட்டுவது ஆகிய செயல்பாடுகளைக் கண்காணித்து அறியலாம். உங்களுக்கு சந்தேகம் வந்தால் உடனடியாக செய்ய வேண்டியது தொலைபேசித் தொடர்புகள், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், புகைப்படங்கள் ஆகியவற்றை உடனடியாக மெமரி கார்டுக்கு பேக்கப் செய்து விட்டு போனை ரீசெட் செய்துவிடுங்கள்.

நன்றி தீக்கதீர் நாளிதழ்

Comments