மதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான
முனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழி,பானைஓடுகள் கண்டறியப்பட்டது.இந்த பானை ஓடுகளில் கி.பி 1ம் மற்றும் 2ம் நூற்றாண்டைச் சார்ந்த தென்மையான தமிழ் பிராமி எழுத்து வடிவமான த,ச ஆகிய இரு எழுத்துக்கள் ஒரு ஓட்டில் காணப்பட்டது.மற்றொரு பானையில் த,ர ஆகிய தமிழ் பிராமி எழுத்துக்கள் வாக்கியம் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.
மேலும் மற்றொரு பானையோட்டில் மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மீன்சின்னம் வளமையை குறிக்கும் சின்னமாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.அதே போல் சுடுமண் பொம்மைகள் மற்றும் சில சிறுஉருளை வடிவிலான சிவப்பு நிறம் கொண்ட மண்பாண்ட பொருட்கள்,முதுமக்கள் தாழிகளில் மேற்பகுதியிலுள்ள வட்டவடிவிலான மூன்று மற்றும் நான்கு அடுக்கு கொண்ட அலங்காரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.சிறிய அளவிலான முதுமக்கள் தாழிகளில் கயிறு போன்ற அலங்காரம் சுற்றிலும்
காணப்படுகிறது.மேலும் மண்பாண்டங்களில் எழுத்துக்களும் அலங்கார குறியீடுகளும் மண்பாண்டங்கள் சுடுவதற்கு முன்பாக வரையப்பட்டவை என்று ஆய்வில் தெரியவந்தது.அத்துடன் உடைந்த நிலையில் ஜாடி,சிறுமண்பாண்ட ஓடுகள் இந்த பகுதி முழுவதிலும் அதிகளவில் சிதறிக் கிடக்கிறது.இதை தொடர்ந்து இப்பகுதியில் தொடர்ச்சியான களஆய்வு மேற்கொண்ட போது குறுநில மன்னர்கள் இங்கு ஆட்சி புரிந்ததற்கான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது.
அதன்படி கௌசீலன் என்ற பகுதியை கௌதில மன்னரும்,தென்னம்தோப்பு என்ற பகுதியை முரசொலி என்ற மன்னரும் ஆண்டதாக கருதப்படுகிறது.
இவர்கள் ஆட்சியின் போது பல்வேறு காரணங்களால் போர் மூண்டதாக கூறப்படுகிறது.குறிப்பாக இந்த போர்க்கள காட்சிகள் அனைத்தும் காரைக்கேணி கிராமத்தில் படுகளம் எனும் பாரம்;பரிய திருவிழாவாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விரு நாட்டு மன்னர்களின் வாரிசுகள் இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.அக்காலத்தில் முரசொலிவர்மன் தோற்கடிக்கப்பட்டதால் அவரது மனைவி கண்டமரத்தி உடன்கட்டை ஏறினாள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.முரசொலிவர்மன் கோட்டைமேடு பகுதியில் பெரிய செங்கற்கல்லும்,நினைவு கற்சிலையும் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.கௌசீல பாண்டிய மன்னர் பகுதியில் நடத்தப்பட்ட களஆய்வில் நடுகற்கள்,ஆசனைகற்கள்,கற்சிற்பங்கள் மேலும் மண்பாண்ட ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக சதி சம்மந்தமான நடுகற்கள்,நிர்வாகம் செய்தவர்களின் கோட்டைமேடு பகுதிகளிலும் மக்கள் வாழ்ந்ததற்கான பழமையான தடயங்களும் அதிகளில் காணப்படுகிறது.
இந்த ஆய்வுகள் குறித்து கவசக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவரும்,சாத்தூர் ஸ்ரீராமசாமிநாயுடு ஞாபகார்த்த கல்லூரி(தன்னாட்சி) வரலாற்றுத் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர்.து.முனீஸ்வரன் கூறுகையில்: தமிழர்களின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் சார்பில் கவசக்கோட்டை பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.அப்போது கி.பி 1ம் மற்றும் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துவடிவங்கள் கொண்ட பானையோடுகள் உள்ளிட்ட பல்வேறு மன்னர் காலத்து வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது. பண்டைகாலம் முதல் மன்னராட்சி காலம் வரையிலான வரலாற்று சிறப்பு பெற்று விளங்கிய இப்பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொண்டால் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறை மற்றும் பண்பாட்டினை வெளிக்கொண்டு வரமுடியும் என்று தெரிவித்தார்.
தகவல் செல்வராஜ்
நன்றி தினபூமி நாளிதள்
Comments
இது கொண்டியின் நீரூற்றும் பகுதி
"முதுமக்கள் தாழிகளில் மேற்பகுதியிலுள்ள வட்டவடிவிலான மூன்று மற்றும் நான்கு அடுக்கு"
இது பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் பானை.
அருமை. தோடல்கள் தொடரட்டும்.
வே.இராஜகுரு,
இராமநாதபுரம்
இது கொண்டியின் நீரூற்றும் பகுதி
"முதுமக்கள் தாழிகளில் மேற்பகுதியிலுள்ள வட்டவடிவிலான மூன்று மற்றும் நான்கு அடுக்கு"
இது பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் பானை.
அருமை. தோடல்கள் தொடரட்டும்.
வே.இராஜகுரு,
இராமநாதபுரம்
இது கெண்டியின் நீரூற்றும் பகுதி
"முதுமக்கள் தாழிகளில் மேற்பகுதியிலுள்ள வட்டவடிவிலான மூன்று மற்றும் நான்கு அடுக்கு"
இது பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் பானை.
அருமை. தேடல்கள் தொடரட்டும்.
வே.இராஜகுரு,
இராமநாதபுரம்