எம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹான் சங்கரதாஸ் ஸ்வாமிகளை நேரில் சந்தித்து வணங்கி அவரிடம் ஆசியும் விபூதி பிரசாதமும் பெற்று நாடகங்களை நடத்தத் தொடங்கினார்.அதன்படி தென்னிந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் நாடகங்கள் நடத்தியது மட்டுமின்றி சிலோன்,யாழ்ப்பா ணம்,நுவரேலியா போன்ற இடங்களில் பல்வேறு சரித்திர நாடகங்களை பி.கா.சுப்பாரெட்டியார் நடத்தி வந்துள்ளார்.ஒரு சமயத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால்நேரு அவர்களை சந்தித்து பணமுடிப்பு கொடுத்து ஆசியும் பெற்றுள்ளார்.பின்னர் 1933-34ல் பர்மாவிலுள்ள ரெங்கூன் சென்று சிறப்புற நாடகம் நடத்தியதுடன்,1935 முதல் 1941 வரை 6ஆண்டுகள் சிங்கப்பூர்,மலேயா ஆகிய இடங்களுக்கு சென்று நாடகம் நடத்தி வந்த பி.கா.சுப்பாரெட்டியார் பெரும் கீர்த்தியுடன் வலம் வந்துள்ளார்.
இவர் ஆரம்பித்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக அப்போது வலம் வந்து ள்ளது.இந்த பாய்ஸ் கம்பெனியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ,இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்,எஸ்.எஸ்.சுப்பையா,ஏ .பி.நாகராஜன்,டி.எம். சிவதாணு,பெண்வேட ஸ்பெசலிஸ்ட் டி.ஆர்.மகாலிங்கம்,மயில்வா கனன் ,டி.கே.சண்முகம்,டி.கே.பகவதி,டி.எஸ்.ராஜமாணிக்கம் உள்ளிட்ட மாபெரும் நடிகர்கள் தங்கியிருந்து பல்வேறு நாடகங்களில் நடித்து அன்றைய காலகட்டத்தில் சாதனை படைத்துள்ளனர்.அப்போது பி.கே.சுப்பாரெட்டியாரின் சரஸ்வதி சபதம்,சத்தியவான் சாவித்திரி,அரிச்சந்திரன் மயான காண்டம்,சதிலீலா,கிருஷ்ணலீலா,நாரதலீலா போன்ற நாடகங்கள் மக்களிடம் மிகவும் புகழ்பெற்றவையாகும்.இருப்பினும் இந்த நாடகங்கள் அனைத்திலும் ஸ்ரீலஸ்ரீ சங்கரதாஸ் ஸ்வாமிகளின் மெட்டுக்கள் மட்டுமே இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.நாடகத் துறைக்கு இத்தகைய சிறப்புகள் செய்து வந்த பி.கா.சுப்பாரெட்டியாருக்கு 1936ம் ஆண்டு மாஸ்டர் கிட்டப்பாவினால் நாடகச்செல்வர் என்ற பட்டம் ராயல் தியேட்டரில் வைத்து வழங்கப்பட்டது.இருப்பினும் எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்ட கலாசிகாமணி பட்டம் நாடக கலைஞர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
மிகச் சிறந்த முருக பக்தரான பி.கா.சுப்பாரெட்டியார் இலங்கையில் நாடகம் நடத்தச் சென்றிடும் போது கண்டி கதிர்காமம் முருகன் கோவிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.இதையடுத்து கதிர்காமம் ஸ்ரீ கதிரேசப்பெருமான் தன்னுட னே இருக்கவேண்டும்மென நினைத்த பி.கே.சுப்பாரெட்டியார் அங்;கிருந்து பிடிமண் எடுத்து பெட்டியில் வைத்து வந்து புளியமாநகரிலுள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து வழிபட்டு வந்துள்ளார்.பின்னர் தனது உழைப்பிற்கு ஊதியமாக கிடைத் ஒருலட்ச ரூபாயை வைத்து புளியமாநகரில் ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலை கட்டியுள்ளார்.
இந்த கோவில் பார்ப்பதற்கு கதிர்காமம் முருகன் கோவில் போன்றும்,கோவிலின் உட்புறங்கள் அனைத்தும் அந்தகால பர்மா தேக்கு மற்றும் மலேயா டைல்ஸ் வைத்து அழகுற கட்டப்பட்டுள்ளது. 1963ம் ஆண்டில் இவருக்கு 73வயதான போதும் கோவிலின் முன்மண்டபம் கட்டுவதற்காக தேவைப்பட்ட நிதியை நாடக கலைஞர்களிடம் திரட்டி கட்டுமானப்பணிகளை முழுமையாக நிறைவு செய்தார்.இதற்கு அவர் அச்சிட்ட துண்டு பிரசுரம் இன்றும் கோவிலில் பிரேம் செய்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இத்தகைய சிறப்பான சேவை செய்து ஸ்ரீ கதிரேசப்பெருமானுக்கு பி.கா.சுப்பாரெட்டியார் கட்டிய ஆலயத்தில் சன்னதியை பார்த்து கைகூப்பி நின்றபடி சிலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சிலையை தற்போது நாடககலைத் துறையில் இருப்போர்கள் இங்குவந்து வணங்கி ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியார் உயிருடன் இருந்த காலத்தில் புளியமாநகரிலுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் ஆடி மாதம் பௌர்ணமி தினத்தன்று நடைபெறுகின்ற உற்சவ திருவிழாவில் நாடகத்துறையின் அனைத்து ஜாம்பவான்களும் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபாடு நடத்திச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.அப்போது விழாவில் பங்கு கொள்ளும் பல்லாயிரக்க ணக்கான மக்களுக்கு கோவிலின் வளாகத்தில் வைத்து அன்னதானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சி இன்று வரை தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.தற்போது இந்த கோவிலில் பி.கா.சுப்பாரெட்டியாரின் மகன் குருசாமி என்பவரது மகனான கந்தசாமி என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.இங்குள்ள கதிரேசப்பெருமானை நினைத்து வழிபாடு செய்தால் ஆயுசு பெருகிடும்,நினைத்த காரியம் கைகூடிடும்,பிரச்சனைகள் முடிவடையும்,திருமண காரியங்களின் தடைகள் நீங்கிடும்,காவடி எடுத்து வழிபட்டால் நோய்நொடிகள் நீங்கிடும்,இலங்கையில் உள்ளது போன்று இங்கும் 12இணைப்புகள் கொண்ட தெடில்காவடி உள்ளது.உற்சவ காலங்களில் இந்த காவடி எடுத்துவரப்படும் என்று பூசாரி கந்தசாமி தெரிவித்தார்.
இருப்பினும் அன்றாடம் கோவிலுக்கு வருகை தந்திடும் பக்தகோடி பெருமக்கள் கோவிலின் முன்புறமுள்ள ஊரணி தீர்த்தத்தில் நீராடி கோவிலின் பிரகாரத்தை சுற்றி வந்து ஸ்ரீ கதிரேசப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு விபூதியை பிரசாதமாக பெற்றுச் செல்கின்றனர்.நாடகக்கலையின் காவலராக வலம் வந்த பி.கா.சுப்பாரெட்டியார் இன்று உயிருடன் இல்லை.ஆனால் கோவிலின் சன்னதியில் இன்றும் சிலையாக நின்று கொண்டிருக்கிறார்.ஆனால் அவர் தனது சொந்த உழைப்பினால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் புளியம்பட்டியில் கட்டியுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவில் நீடித்த ஆயுளுடன் தன்னத்தே வருபவர்களுக்கு ஆயுசை வாரி வழங்கி வருவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருமங்கலம் செல்வராஜ்
Comments
Very informative and intersting
Very informative and intersting
Please Mr Selvarani do post pure right informations about Shri Kathiresan Koil Poorvamsa news
Smt Vanaja Narayanan
9944269444
DONT POST SUCH FALSE INFORMATIONS
DONT POST SUCH FALSE INFORMATIONS