பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்! தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கு நாட்டைத் திறந்து விட்ட மோடி அரசு
1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல்விலையை நாள்தோறும் மாற்றியமைக்கப் போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.முதலில், நாட்டின் 5 நகரங்களில் மட்டும் இம்முறை சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.இது மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் முன்பு மத்திய அரசிடம் இருந்தது. எண்ணெய் நிறுவனங்களும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களாகவே இருந்தன. ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்தபின், தனியார் எண்ணெய் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டு,
50 சதவிகித எண்ணெய் உற்பத்தி, துரப்பன பணிகள் தனியார் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டன. அந்த நிறுவனங்கள் தங்களின் லாப வேட்கைக்காக, பெட்ரோலிய பொருட்களின் விலைகளை தாங்களேநிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களை நெருக்கின. வாஜ்பாய் தலைமையிலான முந்தைய பாஜக அரசு அதை ஏற்றுக் கொண்டது.மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2ஆவது ஆட்சிக் காலத்தில், பெட்ரோல் விலையை மட்டும் எண்ணெய்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.ஆனால், அதற்கடுத்து வந்த மோடி அரசோ, பெட்ரோல் மட்டுமன்றி, டீசல்விலையையும் தனியார் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ள அனுமதி அளித்தது. எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் முற்றாக விலகிக் கொண் டது.அதைத்தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதற்கே மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்துவரும் நிலையில், மே 1-ஆம் தேதி முதல் நாள்தோறும் விலையை மாற்றியமைப்பதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ் தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.முதலில், புதுச்சேரி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், ராஜஸ்தான் மாநிலம் உதாம்பூர், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் என 5 நகரங்களில் மட்டும் இந்த விலைமாற்றத்தை சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்துள்ள எண்ணெய் நிறுவனங்கள்,
பின்னர் நாடு முழுவதற்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளன.‘நாள்தோறும் விலைகளை மாற்றம்செய்வது சாத்தியம்தான்’ என்றும், ‘அதனடிப்படையிலேயே சந்தை விலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் - டீசல் விலையில்மாற்றம் கொண்டு வர முடிவெடுத்துள் ளோம்’ என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் பி. அசோக் தெரிவித்துள்ளார்.எண்ணெய் நிறுவனங்களின் இந்த திடீர் அறிவிப்பு, லாரிகள், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களின் இந்த தன் னிச்சையான அறிவிப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்; முன்புபோல அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், பெட்ரோலியப் பொருட் களின் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் முடிவானது, வல்லுநர்களின் பரிந்துரை அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்ட விவகாரம்என்றும்,
மத்திய அரசு இதில் தலையிட எதுவும் இல்லை என்றும் மத்திய பெட் ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
முதலாளிகளுடன் கைகோர்த்து மக்களை சுரண்டும் மத்திய அரசு
இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பனம் செய்யும் உரிமையை ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷேல்ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.அந்த நிறுவனங்கள் எண்ணெய் துரப் பனம் செய்ய அனுமதிக்கப்பட்டபோது,
ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை வெறும் 30 அமெரிக்க டாலர்கள்தான். தற்போது அந்நிறுவனங்கள் ஒரு துரும்பைக்கூட நகர்த்தாமல், ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை லாபம் பெற்று வருகின்றன. அத்துடன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்க ஒருபேரலுக்கு 15 அமெரிக்க டாலர்களை இந்த தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இவ்வளவும் போதாது என்றுதான்கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அன்றாடம் ஏற்படும் ஓரிரு டாலர் விலை மாற்றத்தைக் கூட ஈடுகட்டாமல், 15 நாட்களுக்கு ஒருமுறை விலைகளை ஏற்றி வந்தனர். தற்போது, 15 நாட்களெல்லாம் பொறுக்க முடியாது என்று கூறி அன்றன்றைக்கே விலையை உயர்த்தி லாபம் சம்பாதிக்கும் கொள்ளையில் இறங்கியுள்ளன.விலையை நிர்ணயிப்பது என்னவோஅரசுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் என்றாலும்,
அதனால் கிடைக்கும் கொள்ளை லாபம் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற எண்ணெய்நிறுவனங்களுக்கே செல்லப் போகின் றன. அதனால்தான் இவ்விஷயத்தில் தாங்கள் தலையிட முடியாது என்று மோடி அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சர் கையை விரித்துள்ளார்.கச்சா எண்ணெய் விலை 10 டாலராககுறைந்தாலும்,
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப் பில்லை. காரணம், ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அந்நிய முதலீடுகளை அதிகமாக ஈர்க்க வேண்டும் என்றால், தங்களுடைய நிறுவனங்களின் லாபத்தை பங்குச் சந்தையில் அதிகமாகக் காட்ட வேண்டும் என்ற லாப வெறிதான்.மறுபுறம் மத்திய அரசும் தன்பங்குக்கு கலால் வரி மூலம் கொள்ளை வருவாய் ஈட்டுவதற்கு பெட்ரோலியப் பொருட்களை விட வேறு பெரிய வாய்ப்பில்லை.
இதனால்தான் 2015-ல்கச்சா எண்ணெய் விலை, சரிந்துகொண்டே வந்தாலும் பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்திக்கொண்டே வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 5 முறைக்கு மேல் கலால் வரியை மோடி அரசு உயர்த்தியது. 2014-ல் கலால் வரி மூலம் ரூ. 9,184 கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியது. உலகிலேயே பெட்ரோலியப் பொருட்களின் மீதுஅதிக வரி விதிக்கும் நாடு இந்தியாதான்.
Comments