நாசரின் ‘நச்’ கேள்வி

நடிகர் நாசரை பற்றி சொல்லவேண்டியதில்லை, நடிகர் சங்கத்தலைவர், சிறந்த குணச்சித்திர நடிகர். எந்த மாதரியான கதாபாத்திரமானலும் அதை தன் சிறப்பான நடிப்பு முலமாக நம் கண்முன் நிறுத்துபவர்.  திட்டிவாசல்  என்ற திரைப்படத்தின்  பாடல் வெளியிட்டு விழாவில் கேரவன் பயன்படுத்தும் பந்தா பண்ணும் நடிகர்களை பார்த்து நச் கேள்வி ஓன்றை கேட்டிருக்கிறார்.
வெளிப்புறப் படப்பிடிப்புகளின்போது இயக்குநர்கள், நாயக நடிகர் - நடிகையர் போன்றோர் பயன்படுத்தும் வாகனம் கேரவன் என்பது. அதில் சமயலறை, சாப்பிடுமிடம், படுக்கை, கழிவறை என எல்லா வசதிகளும் இருக்கும். கடும் வெயிலில் படப்பிடிப்பின் இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் சற்றே ஓய்வெடுக்கவும், உணவு அருந்தவும் இதனைப் பயன்படுத்துவார்கள். தயாரிப்பாளருக்கு ஒரு செலவினமாகக் கருதப்படும் இந்தக் கேரவன் என்பது அந்த வசதி தேவைப்படுவதாலா அல்லது அந்தஸ்தைக் காட்டிக்கொள்வதற்காகவா என்றொரு சரியான கேள்வியை முன்வைத்திருக்கிறார்
நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசர். கே 3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரதாப் முரளி இயக்கியிருக்கும் திட்டிவாசல் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டின்போதுதான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார் நாசர்.“நான் சிறு முதலீட்டுப் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பவன். இருந்தாலும் பல படங்கள் ஆரம்பித்து முடிக்க இயலாமல் நிற்பதைக் கேள்விப்படும்போது அந்த வலியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காரணம் நானும் இப்படிப் பணத்தை இழந்தவன்தான். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலைப் பகுதியில் நடந்தது. நான் தங்கியிருந்த இடத்துக்கும் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கும் 35 கிலோ மீட்டர் தொலைவு. எனக்குக் கடுமையான முதுகு வலி வேறு. அந்த இடத்துக்குக் காரிலும் பிறகு இரு சக்கர வாகனத்திலும் மறுபடியும் காரிலும் என்று மாற்றி மாற்றிச் செல்லவேண்டிய கட்டாயமானதொரு பாதை வேறு. இதையெல்லாம் பார்த்து நான் படப்பிடிப்பு நடக்குமிடத்திலேயே தங்கிவிடத் தீர்மானித்தேன்.

படப்பிடிப்புக் குழுவினர் சுமார் 34 பேருடனும் ஒரே கூரையின் கீழ் பல நாட்கள் தங்கிய அனுபவம் என் வாழ்வில் மிகவும் அரிதானது. மறக்க இயலாத அற்புத அனுபவம் அது. பழங்குடி மக்களின் வாழ்வினை சமகால அரசியல்வாதிகளும் பண முதலைகளும் எப்படிச் சூறையாடுகிறார்கள் என்பதைச் சொல்லுகிற கதை என்பதால் எனக்கு மிகவும் பிடித்த படமாக இது அமைந்திருக்கிறது. கால விரயம் இல்லாமல் திட்டமிட்டு படக்குழுவினர் செயல்பட்ட விதத்திலும், எல்லோருடனும் பேச, பழக, பகிர கிடைத்த அருமையான வாய்ப்பினாலும் நான் மிகவும் அனுபவித்துச் செய்த படமாக இந்த திட்டிவாசல் அமைந்துவிட்டது. நான் சிரமப்படுவதைக் கண்டு வேறு வசதிகள் வேண்டுமா என்று தயாரிப்பாளர் கேட்டபோது நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். படப்பிடிப்பின்போது கேரவன் வைப்பது தேவை கருதித்தான் இருக்கவேண்டும். ஆனால், இன்று அது அந்தஸ்த்தின் குறியீடாகிவிட்டது’ என்றார் அவர்.

நன்றி தீக்கதீர்
தொகுப்பு : செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments