பொக்கிஷத்தை பாதுகாத்து வரும் வால்முளைத்த மர்ம மனிதர்கள்


700ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலின் உள்ளே கீழ் நோக்கி சென்றிடும் பாதாள சுரங்கத்தில் பாண்டிய மன்னர்களின் ஒட்டுமொத்த பொக்கிஷத்தை வால்முளைத்த மனிதர்கள் பாதுகாத்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள சின்னஞ்சிறு கிராமம் கூடக்கோவில்.இங்கு வசித்திடும் மக்கள் பெரும்பாலானோர் விவசாயிகளாக உள்ளனர்.கோவில்களுக்கும்,கல்விக்கூடங்களுக்கும் புகழ் பெற்று திகழந்திடும் கூடக்கோவில் கிராமத்தின் தென்மேற்கு பகுதியில் 12ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னரால் பல்லவர்களின் கட்டிடக்கலையம்சம் நிறைந்து காணப்படும் ஈஸ்வரன் கோவில் உள்ளது.மதுரைக்கு அருகில் கூடுதலாக ஒரு கலையம்சம் மிக்க கோவிலை கட்டுவதற்காக பாண்டிய மன்னரால் தேர்வு செய்யப்பட்ட இடமே தற்போது கூடக்கோவில் என்றழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.12ம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த சோழர்கள் மற்றும் பல்லவர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி கி.பி.1251ம் ஆண்டில் பாண்டிய மன்னன்ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையம்பதியை கைப்பற்றி பாண்டியர் காலத்திற்கு மறுமலர்ச்சி கொடுத்துள்ளார்.அவரது காலத்தில் தான் தற்போது கூடக்கோவில் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

முழுவதும் செதுக்கப்பட்ட கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த கோவிலை மதுரைக்கு அழைத்துவரப்பட்ட சோழர்கள் மற்றும் பல்லவர்களின் கட்டிடகலை நிபுணர்களும் தொழிலாளர்களும் உள்ளுர் மக்களின் உதவியுடன் நிர்மாணித்துள்ளனர்.

இந்த பகுதியில் அதிகம் வசித்து வந்த அந்தணர்களுக்காக கிணறு,கல்தொட்டி,பூந்தோட்டம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய நந்தவனத்துடன் இந்த ஈஸ்வரன் கோவில் கட்டப்பட்டுள்ளது.எங்கு காணினும் கண்கவர் சிற்பங்கள்,அழகுற வடிவமைக்கபட்டள்ள சிலைகள்,கோவிலின் முகப்பில்
பல்லவர்கால கட்டிட கலையை நினைவு படுத்திடும் சிங்கத்தின் சிலை,அழகுமிகு கருவறை,கோவிலில் சுவாமிக்கு அணிவித்திடும் அணிகலன்களை பாதுகாத்திட பாதாள சுரங்கம்,பழமையான கல்வெட்டுகள் என நேர்த்தியாக இந்த கோவில் வடிவமைக்கபட்டு வந்தது.இந்நிலையில்
பாண்டிய வம்சத்தின் கடைசி மன்னரான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் 13ம் நூற்றாண்டு துவக்கத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.கி.பி.1308ல் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இறந்துவிட்ட நிலையில் அவரது வாரிசுகளுக்கிடையே கடுமையான
போட்டியும் மோதல்களும் ஏற்பட்டுள்ளது.இதனையறிந்த டெல்லி சுல்தானின் தளபதி மாலிக்காபூர் கி.பி.1311ம் ஆண்டில் மதுரையின் மீது மாபெரும் படையெடுப்பு நடத்தி மதுரையம்பதியை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டார்.இதனை தொடர்ந்து மதுரை, டெல்லி சுல்தானத்தின் 23வது மாநிலமாக மாற்றப்பட்டு விட்டது.
மதுரையை வசப்படுத்திக் கொண்ட மொகலாய படைத்தளபதி மாலிக்காபூர் மதுரையம்பதியின் செல்வங்களை கண்டு மலைத்ததுடன்,பாண்டிய மன்னர்களின் வசமிருந்த செல்வங்கள் மற்றும் பாண்டியர்களால் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் வழங்கப்பட்டிருந்த கோவில்களை கொள்ளையடித்து ஒட்டுமொத்த செல்வத்தையும் அள்ளிவருமாறு தனது படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.அதன் பேரில் களமிறங்கிய மொகலாய படைகள் பாண்டிய மன்னர்களின் அரண்மனைகள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பழமையான கோவில்களின் பொக்கிஷங்கள் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டது.இது போன்ற நிகழ்வுகள் எப்போதாவது நடைபெறும் என்று எண்ணியிருந்த பாண்டிய மன்னர்கள் தங்களது பொக்கிஷங்களை காப்பாற்றிட வசதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு நீண்ட தொலைவு சென்றிடும் பாதாள சுரங்கப்பாதைகளை நிர்மாணித்து வைத்திருந்தனர்.இந்த பாதாள சுரங்கப்பாதைகளில் ஒன்றாக மூதூர் மதுரையிலிருந்து கூடக்கோவில் ஈஸ்வரன் கோவில் கருவறை வரை நோக்கி அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையில் மதுரையம்பதியின் பெரும்பாலான பொக்கிஷத்தையும்,விலைமதிப்புமிக்க ஆபரணங்களையும்,சிலைகளையும்,அணிகலன்களையும் பாதுகாவலர்கள் புடைசூழ எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்ததாகவும் இந்த பொக்கிஷத்திற்கு பாதுகாப்பாக மதுரை அழகர் மலையில் வசித்துவந்த ராட்சத வானரங்கள் ஏராளமானவற்றை பாதாளசுரங்கத்தின் உள்ளே விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கூடக்கோவில் பகுதிக்கு வந்த மாலிக்காபூரின் படை,பட்டாளங்கள் பாண்டிய மன்னரின் பொக்கிஷத்தை கண்டுபிடிக்க முடியாத வெறியில் கலைநயத்துடன் கட்டப்பட்டிருந்த ஈஸ்வரன் கோவிலை சூறையாடியுள்ளனர்.கோவிலின் உள்ளே இருக்கும் கருவறையை உடைத்து நாசம் செய்ததுடன் அங்கிருந்த சுவாமி சிலைகளை உடைத்து வெளியே வீசியுள்ளனர்.அத்துடன் கருவறையின் முன்னே உள்ள பாதாள சுரங்கத்திற்குள் நுழைய முடியாத ஆத்திரத்தில் சுரங்கப்பாதையை முற்றிலுமாக அடைத்துச் சென்றுவிட்டனர்.இதன் காரணமாக பாண்டியமன்னர்கள் சேர்த்து வைத்திருந்த பொக்கிஷங்கள் அனைத்தும் சுரங்கப்பாதைக்குள் வானரங்களின் பாதுகாப்பிற்கு சென்றுவிட்டது.இன்றுவரையில் அந்த பொக்கிஷம் கூடக்கோவில் ஈஸ்வரன் கோவிலின் கீழே இருக்கும் பாதாள சுரங்கத்தில் பத்திரமாக இருப்பதாக நம்பப்படுகிறது.இதனிடையே கடந்த 5தலைமுறைக்கு முன்பாக இந்த பகுதியில் வசித்து வந்த சிலர் கோவிலில் சிதிலமடைந்து கிடந்த பாதாள சுரங்கத்தின் வரைபட அமைப்பினை கண்டறிந்துள்ளனர்.பின்னர் அதனை மையமாக கொண்டு பாதாள சுரங்கத்தின் தடங்கல்களை அகற்றி தீவட்டிகளை ஏந்திக் கொண்டும்,முதுகில் தீவிட்டிக்கு தேவையான எண்ணையை சுமந்து கொண்டும் உள்ளே சென்றுள்ளனர்.அப்போது நீண்டதூர பயணத்திற்கு பிறகு வட்டவடிவமாக மைதானம் போல் ஒளிவெள்ளத்துடன் காட்சியளித்த இடத்தில் பாண்டிய மன்னரின் பொக்கிஷம் மலைபோல் கொட்டிக் கிடந்ததாம்.இவற்றை எடுப்பதற்கு சிலர் முயன்ற போது திடீரென்று அங்கு திடீரென்று வந்த வால்முளைத்த மனிதர்கள் அவர்களை எடுக்கவிடாமல் தடுத்து வெளியில் விரட்டியதாகவும்,உள்ளே நடந்தவற்றை வெளிஉலகிற்கு சென்று தெரிவித்தால் தலை சுக்குநாறாக வெடித்து சிதறிவிடும் என்று சாபமிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் பயந்து போனவர்கள் வந்தவழியை திரும்பிப் பார்க்காமல் வெளியே தப்பி வந்ததுடன் தங்களது அனுபவங்களை வெளியில் யாருக்கும் கூறிடாமல் ஏடுஎழுதி வைத்தனராம். இத்தகைய மர்மங்கள் நிறைந்த இந்த ஈஸ்வரன் கோவில் தற்போது காலச் சக்கரத்தின் சுழற்சியால் பாழடைந்து முட்செடிகளுக்கு மத்தியில் சிதிலமடைந்து வருகிறது.அன்று மன்னர் உருவாக்கிய கிணறு இன்றளவும் வற்றிடாமல் மக்களுக்கு தண்ணீரை வாரி வழங்கி வருகிறது.அதனருகில் தண்ணீர் தேக்கிடும் கல்தொட்டியும் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.கோவிலின் மேற்கூரையை மரங்கள் தமதாக்கிக் கொண்டதால் உத்திரம் உடைந்து உதிரும் நிலையில் உள்ளது.கருவறையில் இருந்த சிலைகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் முட்புதருக்குள் பரிதாபமாக விழுந்து கிடக்கிறது.ஆங்காங்கே முட்புதருக்குள் கோவிலின் தூண்கள் உடைந்து சிதறிக்கிடக்கிறது.இருப்பினும் கோவிலினுள் இருந்து பாதாள சுரங்;கத்திற்கு சென்றிடும் பாதை மண்மூடிக்கிடக்கிறது.அதற்கு அருகிலுள்ள கற்சுவரில் பாதாள சுரங்கத்திற்கு சென்றிடும் வரைபடம் இன்றும் அழிந்திடாமல் உள்ளது.700ஆண்டுகளுக்கு மேலாக இயற்கையின் சீற்றங்களை தாக்குப்பிடித்து கம்பீரமாக நிற்கும் கூடக்கோவில் ஈஸவரன் கோவில் பல்லவர் மற்றும் சோழர் கால கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.தெய்வத்தின் சிலைகள் கோவிலுக்கு வெளியே உடைபட்டு கிடந்தாலும் இந்த கோவிலுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு செல்வதற்கென அந்தணர்கள் சிலரும் பொதுமக்கள் பலரும் இங்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.மேலும் உடைந்து கிடக்கும் தெய்வத்தில் சிலைகளுக்கு பூத்தூவியும்,கோவிலுக்கு முன்பாக விழுந்து கும்பிட்டும் செல்கின்றனர்.அதே போல் ஒன்றரை ரூபாய் காசை இந்த கோவிலின் மேற்பகுதியில் வீசிஎறிவதாக நேர்ந்து கொண்டு செல்வோர் காரியம் முடிந்தவுடன் ஒன்றரை ரூபாய் காசை கோவிலின் மேல் வீசியெறிந்து நேர்த்திக்கடன் முடித்து மகிழ்வுடன் செல்கின்றனர்.
இந்த கோவிலின் சிறப்பு குறித்து கூடக்கோவிலைச் சேர்ந்த முதியவர் வெள்ளமுத்து கூறுகையில்: கூடக்கோவில் ஈஸ்வரன் கோவில் மிகவும் பழமையானதும் விசேஷ சக்திகள் கொண்டதுமாக உள்ளது.இங்கு வந்து ஒன்றரை ரூபாய் காசினை கோவிலின் மீது வீசி எறிவதாக வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும்.கோவிலில் தெய்வத்துடைய சிலை இல்லை ஆனால் இங்குள்ள சுரங்கத்தினுள் சென்றால் பாண்டிய அரசனின் பொக்கிஷம் இருப்பதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.இந்த கோவிலை ஆய்வு செய்தால் நிறைய மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்றார்.இந்த கோவிலின் பின்புறம் உள்ள விவசாயியான அழகர் கூறுகையில்:இந்த கோவிலின் கீழே பாண்டிய அரசனின் மொத்த பொக்கிஷமும் மறைத்து வைக்கப்பட்டிருப்பது நிச்சயம்.அதை யாராலும் எடுக்க முடியாது ஏனென்றால் பொக்கிஷத்தை வால்முளைத்த மனிதர்கள் காவல் காத்து வருகின்றனர்.700வருசத்துக்கு மேலாக பாதுகாத்துவரும் வால்முளைத்த மனிதர்களை மீறி எவராலும் அந்த பொக்கிஷத்தை எடுக்க முடியாது.இருந்தாலும் 700 வருசத்துக்கு மேலாக பாண்டிய அரசர்களின் நினைவை சுமந்து நிற்கும் இந்த கோவிலை  புதுப்பித்தால் நாடு சுபிட்சம் பெற்றிடும் என்று கூறினார்.மேலும் கூடக்கோவிலைச் சேர்ந்த மயில்ராஜன் என்பவர் அலைபேசியில் தெரிவித்த தகவலின்படி கோவில் பழமையானது தான்.அதில் சுரங்கம் போன்ற அமைப்பு இருப்பது உண்மை தான்.எனினும் சுரங்கத்தில் பொக்கிஷம்,உள்ளது அதனை வால்முளைத்த மனிதர்கள் காவல் காத்து வருகின்றனர் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை என்று தெரிவித்தார்.
எது எப்படி இருந்தாலும் சுமார் 700ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கூடக்கோவில் ஈஸ்வரன் கோவிலில் உள்ள பாதாள சுரங்கத்தில் பாண்டிய மன்னரின் பொக்கிஷம் இருப்பதாகவும் அதை வால்முளைத்த மனிதர்கள் காவல் காத்து வருகின்றனர் என்ற ஆச்சரியமான  தகவல் தற்போது வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-சாலமன் செல்வராஜ்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Palanikumar said…
Arumai nanbaa
Kaamaagyaa said…
Arumai
Nanbaa.. ♥