28 நாட்கள் பொங்கல் கொண்டாடிய தமிழர்கள் ....

தமிழர்கள் தனித்துவமிக்க ஒரு இனம் என்பதை உணர்த்துகிற விழா பொங்கல்.இயற்கையுடன் இணைந்து தமிழர்கள் கொண்டாடும் விழா பொங்கல்.தமிழர்களின் ஆதி தெய்வம் நிலம் தான்.தங்களுக்காக சகலத்தையும் தரும் நிலத்திற்கும்,அதற்கு உதவுகிற கால்நடைகளுக்கும் எடுக்கப்படும் விழா.

28 நாட்கள் நடந்த பொங்கல் விழா...

        கேரளா மக்களின் மிக பெரிய விழாவாக ஓணம் கொண்டாடுகிறார்கள். கர்நாடகாவில் தசரா... இப்படி இந்தியா முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அந்த விழாக்களுக்கு பின்னால் ஒரு மதம் சார்ந்த விஷயங்கள் அதிகம் இருக்கும். ஆனால் பொங்கல் சாதி,மதம் கடந்து கொண்டாடப்படுகிறது என்பது தனிச்சிறப்பு.

       சிலப்பதிகாரத்தின் தொடர் காப்பியமான மணிமேகலை காப்பிய காலத்திலேயே பொங்கல் திருவிழா, இந்திரவிழாவாக கொண்டாப்பட்டுள்ளது.சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்னும் போது பொங்கல் திருவிழாவின் பழமையை புரிந்து கொள்ளலாம்.
அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன்,உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். அந்த காலத்தில் 28நாட்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது.
இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.
 போகி பண்டிகை அன்று ஊரையும்,நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது.நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜை நடைப்பெற்றது.இவ்விழா நாளில் பகைமை,பசி,நோய் நீங்க கடவு¬ளை வணங்கினர் .மழைக்குரிய தெய்வம் இந்திரன்,அவனை வழிபட்டால்,மாதம் மும்மாரி பெய்து பயிர் செழிக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.  அன்றைய இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.

 ஆட்டு ஊரலும் ...கிரைண்டர் மிக்ஸியும்

மிகப்பெரிய ஆட்டு ஊரல் தெருவுக்கு ஒன்றாக கிராமங்களில் இருக்கும்.ஒரு தெருவே சேர்ந்து அரிசி,ஊளுந்து ஊற வைத்து மொத்த மாக ஊரலில் போட்டு ஆட்டுவார்கள்.நான் பத்து ஆட்டு,நீ பத்து ஆட்டு,மாவை தள்ளிவிட இரண்டு பேர். பொங்கலுக்கு இட்லி,தோசைக்கு மாவு ஆட்டுவதே ஒரு திருவிழா போல நடக்கும்.சிறிய கிராமமாக இருந்தாலும் இந்த மாவு ஆட்டுகிற வேலை 3, 4 இடங்களில் நடக்கும்.தினசரி கேப்பை கூலும்,கம்பங்கூலும் குடிப்பவர்களுக்கு தீபாவளி,பொங்களுக்கு தான் இட்லி,தோசையும், அரிச சோறும் கிடைக்கும்.  இன்றும் ஆட்டு ஊரல்கள் அப்படியே கிடந்தாலும்,எல்லா வீடுகளிலும் கிரைண்டர்,மிக்ஸி சத்தம் தான் கேட்கிறது.
    காலை தூங்கி எழும் போது கண்களில் இருக்கும் பீளை போல இருக்கும் கண்ணுபீளைச்செடியும்( எப்படி ஒரு உவமை), வேப்ப இலையையும் சேர்த்து வீடுகளில் கட்டுவார்கள். கிராமத்து மந்தை நிறைய மாட்டுவண்டிகள் இருக்கும்.பொங்கல் துவங்கியதும் மாட்டுவண்டிகளை கண்மாயில் நிறுத்தி கழுவுவார்கள். மாடுகளுக்கு செமகவனிப்பு இருக்கும்.மாட்டின் தேல் மின்னுகிற அளவுக்கு தேய்த்து குளுப்பாட்டுவார்கள். அதன் கொம்புகள் நன்றாக சீவப்பட்டு, மாட்டுக்காரர் எந்தகட்சியோ அதற்கு ஏற்ப கருப்பு சிவப்பு,கருப்பு சிவப்பு வெள்ளை,சிவப்பு.... பெயிண்ட் அடித்து அழகு பார்பார்கள்.இன்றைய கிராமத்து மந்தைகள் வெறிசோடி போய் ஒன்றோ, இரண்டோ டிராக்டர்கள் மட்டும் நிற்கின்றன.

வாழ்த்து அட்டைகளும் .. எஸ்.எம்.எஸ்,இ,மெயிலும்

10... 15 வருடங்களுக்கு முன்பு வரை பொங்கலோடு மிக நெருங்கி தொடர்புள்ள பொங்கல் வாழ்த்து அட்டைகள் காணாமலேயே போய்விட்டது.எனக்கு எத்தனை பொங்கல் வாழ்த்து அட்டைகள் வந்தது என்பது பள்ளி,கல்லூரி நாட்களில் பெருமைக்குரிய விஷயம்.குறைந்தது 10 கடைகளாவது ஏறிஇறங்கி தேடிபிடித்து வாங்குவார்கள். 1ரூபாயிலிருந்து அதிகபட்டசம் ரூ50ம் அதற்கு மேலும்கூட வாழ்த்து அட்டைகள் கிடைக்கும்.சாமி படங்கள், இயற்கை காட்சிகள்,அதிகமாக சினிமா நடிகர்,நடிகைகளின் படங்கள் போட்ட அட்டைகள் கிடைக்கும். சாதணர அட்டைகள், வழுவழுப்பான அட்டையில் ஜிகினா டிசைன்கள், திறக்கும் போது மியூசிக் கேட்கும் படி உருவாக்க பட்ட அட்டைகள்.இதில் நடிகர்,நடிகைகளின் படங்களுக்கு த்தான் கிராக்கி இருக்கும். விஜய்,சூர்யா,அஜித்க்கு கிடைக்காத கமல்,ரஜினி வரையே கிடைத்த வாய்ப்பு அது. செல்போன்களும்,கணிணியும் வரத்தொடங்கி ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்ட பிறகு வாழ்த்துக்கள் மெயில்களாக, மெசேஜ்களாக மாறிவிட்டன.

ஜல்லிக்கட்டும்.... மஞ்சுவிரட்டும்


இந்த பொங்கலுக்கு ஜல்லிகட்டு நடத்த அனுமதி கிடைக்குமா என தெரியவில்லை. கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தொடர்ந்து  நடத்த பட வேண்டும் என்பதே எதிர்பார்பாக உள்ளது. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு.ஜல்லிகட்டு பற்றி சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் மட்டுமே 17 பாடல்கள் உள்ளன.ஜல்லிக்கட்டை ... இலக்கியங்கள் ஏறுதழுவுதல் என்கின்றன. ஏறு என்பது காளையை குறிக்கு சொல்லாகும்.தற்போது ஜல்லிகட்டை விளையாட்டு என்று நாம் கூறுகிறோம். ஆனால் ஒருகாலத்தில் காளையை அடக்கும் வாலிபனையே பெண்கள் மணமுடிப்பார்களாம். தற்போது பொங்கலுக்கு மட்டுமே நடக்கின்ற ஜல்லிக்கட்டு சங்ககாலத்தில் திருமணங்கள் நிச்சயக்கபடும் போதேல்லாம் நடக்குமாம்.
இன்றைக்கு விலங்குகள் நல அமைப்புகளின் வழக்குகள் காரணமாக உச்ச நீதிமன்றம் வீதித்த 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜல்லிகட்டு நடத்தப்படுகிறது. மதுரை,திருச்சி,புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம்  உள்ளிட்ட பல மாவட்டங்களில் 215 ஊர்களில் ஜல்லிகட்டு நடத்த அனுமதி இருக்கிறது.  பல புதிய கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது தமிழகத்தில் 30 ஊர்களில் மட்டுமே நடத்தப்படுக¤றது.
 தமிழகத்தின் சில பகுதிகளில் ஜல்லிக்கட்டுவுக்கு பதிலாக மஞ்சுவிரட்டு நடத்துகிறார்கள். காளைகளை ஒட்டுமொத்தமாக விரட்டி ஓட்டும் விளையாட்டு மஞ்சுவிரட்டு. ஜல்லிகட்டில் ஏற்படுகிற உயிரிழப்புகளை,காயம் போன்வற்றை தவிர்க்க உருவாக்கபட்ட விளையாட்டாக மஞ்சுவிரட்டு இருக்கலாம்.
             ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரை அலங்காநல்லூரில் 200 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.கிராம கமிட்டி மூலமாக இத்தனை ஆண்டுகளாக பாரம்பரியம் கெடாமல் நடந்து வந்த ஜல்லிக்கட்டு இப்போது அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி கொண்டது. எந்த கட்சி ஆட்சிக்கு வருக¤றதோ அவர்களின் அரசு விழாவாக ஜல்லிக்கட்டு மாறிவிட்டது. அதனால் தான் ஜல்லிக்கட்டு உச்சநீதிமன்ற வரை பிரச்சனைக்குரிய விஷயமாக மாறிப்போனது.

மாறிவரும் வாழ்க்கையும் ... பொங்கலும்..

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால் நம் வாழ்க்கை முறை மாறிவருகிறது.மழையின்மை, விளைகிற பொருட்களுக்கு சரியான விலை இன்மையால் விவசாயம் குறைந்துவருகிறது. கிராமங்கள், மற்றும் சிறு நகரங்களில் இருந்து வேலை தேடி சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்கி கொள்கிறார்கள்.அவர்கள் பொங்கல் பண்டிகையை  இயற்கையோடு இணைந்து இயல்போடு கொண்டாடுவது இயலாத ஒன்று. அவர்கள் பொங்கலின் கடைசி நாளை காணும்பொங்கலாக கொண்டாடுகிறார்கள்.
    இன்றைக்கு சிறுநகரங்கள் பெரும் நகரங்களாகவும்,கிராமங்கள் நகரங்களாகவும் மாறிவருகின்றன. காலபோக்கில் பொங்கள் பண்டிகை ஒட்டுமொத்தமாக காணும்பொங்கலாக சுருங்கிவிடலாம். ஆனால் மனிதர்களுக்கு உணவு முக்கியம், உணவுக்கு விவசாயம் முக்கியம்,ஆகவே விவசாயம் இருக்கும் வரை பொங்கலை அதன் பாரம்பரியத்தோடு,தனிச்சிறப்பாக கொண்டாடுவதே தமினத்திற்கு தனி பண்பாட்டு அடையாளமாக இருக்கும்.

செல்வன்
ஜனவரி தமிழ்வாசல் மாத இதழில் 
வெளிவந்துள்ள  எனது கட்டுரை..


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Vijay Periasamy said…
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!
இனிய தமிழர் தின வாழ்த்துக்கள்...