பாலுமகேந்திராவின் "வீடு" திரைக்கதை - புத்தகமாக

25 வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட ஒருபடம் தற்காலத்திற்கும் அதன் காட்சிகள் கச்சிதமாய் பொருந்துகிறது என்றால் அந்த இயக்குநர் தன் தொலைநோக்குப் பார்வையை எப்படி கூர் தீட்டியிருப்பார். தன் சிறுவயதில் பசுமரத்தாணி போல் பதிந்த ஒரு நிகழ்வைப் படமாக இயக்கி அதை அவர் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார். சினிமா வியாபார மயமாகிக் கொண்டிருந்த சூழலில் வெறும் 12 லட்சம் மதிப்பில் வீடு படத்தை எடுத்து, 2 தேசிய விருதுகளை பெற்று, குறைந்த பட்ஜெட் டிலும் மக்களுக்கான படங்களை கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர்தான் இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. கோகிலாமுதல் தலைமுறைகள் வரை 26 படங்களை இயக்கியுள்ளார். அதில் கோகிலா, மூன்றாம் பிறை படங்களுக்கு ஒளிப்பதிவிற்கும், வீடு, சந்தியாராகம், வண்ண வண்ணப் பூக்கள் இயக்கத்திற்கும் என 5 தேசிய விருதுகளை பெற் றுள்ளார்.

வீடு, சந்தியாராகம் இந்த இரண்டு படங்களில் தான் குறைந்த அளவு தவறு செய்துள்ளேன் என்று கூறியிருக்கிறார் பாலு. இதுவே அவர் எந்த அளவிற்கு சினிமாவை நேசித்தார் என தெரிந்து கொள்ள முடிகிறது. தன் ஜீவனை சினிமா வளர்ச்சிக்காக ஆட்படுத்திக் கொண்ட பாலுமகேந்திரா இப்போது இல்லை. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிகழ்கால இயக்குநர்கள் பூர்த்தி செய்வார்களா என்பது சந்தேகத்திற்குரியது தான். தான் எடுக்கும் படத்தை நட்சத்திரங்களை வைத்து இயக்கும் வியாபார நோக்கம் இவருக்கு இல்லை. அதனால்தான் படங்களை விட சமூகத்திற்காக 35க்கும் மேற் பட்ட குறுப்படங்களை இயக்கியுள்ளார். இவரின் சினிமா பட்டறையில் உரு வானவர்கள்தான் பாலா, ராம், வெற்றி மாறன் போன்றோர்;இவர்களும் சினிமாவில் தங்களுக்கு என்ற ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள னர்.

பாலுமகேந்திராவின் வீடு படத்தின் திரைக்கதையை விமர்சனங்களுடனும், பேட்டிகளுடனும் வம்சி புக்ஸ் 248 பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இதில் ஒரு நாவலை படிக்கும் போது எப்படி இருக்குமோ அதைப் போலவே வீடு படத்தின் திரைக்கதை இருக்கிறது. நான் வீடு படத்தை பார்க்கவில்லை, ஆனால் புத்தகத்தை படிக்கும் போது அதன் வசனங்கள் காட்சிகளாக ஓடியது.

பல வசனங்கள் என் மனதில் காட்சிகளாகப் பதிந்துள்ளது. சொந்த வீடு கட்ட முனையும் சாதாரண மனிதன் சந்திக்கும் சோதனைகள் இன்றும் அப்படியே கண்முன் விரிகிறது .அப்படி அமைந்து பாலுமகேந்திரா எனும் பொறுப்புள்ள கதை சொல்லியை நமக்கு அடையாளப்படுத்துகிறது . படத்தில் ஒரு இடத்தில் நிலத்தை பார்க்க வருபவர் அந்த இடத்தில் தண்ணீர் சுவையாக இருக்கும். இதனால் அங்கு இடம் வாங்கிப் போட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறார். அப்போதே பாலு தண்ணீர் பிரச்சனை என்பது தலை விரித்தாடும் என்று படம் மூலமாக எடுத்துரைத்தார். இப்போது சென்னையில் அனைத்து வீடுகளிலும், நிறுவனங்களிலும் காசு கொடுத்து தான் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர்.

இந்தப் புத்தகம் திரைக்கதை வசனம் என நின்று விடாமல் பாலுமேந்திராவை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. ஜெயச்சந்திர ஹஷ்மியின் பேட்டி பயனுள்ளது. வளரும் இயக்குநர்களுக்கு எப்படி திரைக்கதை எழுத வேண்டும் என்பது பற்றியும் ஒரு படத்தை எந்த நோக்கத்தில் உருவாக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது இந்தப் புத்தகம்.

வீடு திரைக்கதை - உரையாடல்
ஆசிரியர்: பாலுமகேந்திரா
வெளியீடு:வம்சி புக்ஸ்
19,டி.எம். சாரோன்திருவண்ணாமலை - 6
00 601பக்: 248  
விலை ரூ. 200/-


வீரபத்ர லெனின்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...