காலைவேளையில் சிவப்பாகவும், பின்னர் நீலமாகவும், அடுத்து ஊதாவாகவும், அடுத்து எரியும் நெருப்பு போன்ற செந்நிறத்திலும் காட்சியளிக்கும் உலுரு மணற்பாறை உண்மையில் சாம்பல் நிறம் கொண்ட ஒரு ஒற்றைக்கல் பாறையாகும்.
மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்குப் பிராந்தியத்தின் தெற்குப்பகுதியில் இந்த மணற்கால் பாறை அப்பகுதியில் வாழும் அனங்கு இன பழங்குடி மக்களுக்கு புனிதமானதாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பிரபலமான அடையாளச்சின்னமான இதை 1873ம் ஆண்டில் ஜூலை 19 அன்று நில அளவையாளர் வில்லியம் கோஸ் கண்டுபிடித்தார்.
6 வகையாக மாறும் நிறங்கள்
தென் ஆஸ்திரேலியாவின் அன்றைய தலைமைச்செயலாளர் சர்.ஹென்றி அயர்ஸ் என்பவரின் பெயரை அதற்கு கோஸ் சூட்டினார். அன்று முதல் இரு பெயர்களும் வழக்கத்தில் உள்ளன. 1993ம் ஆண்டில் இரட்டைப்பெயரிடும் கொள்கை ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்தது. இதன்படி பழங்குடிமக்கள் வைத்த பெயரும், ஆங்கிலப்பெயரும் சேர்த்து புழக்கத்தில் இருக்கும். இதன்படி 15.12.1993ம் ஆண்டில் அயர்ஸ் ராக் / உலுரு என்று பெயரிடப்பட்டது. 2002ம் ஆண்டில் அலைஸ் ஸ்ப்ரிங்ஸ் சுற்றுலா அமைப்பு விடுத்த வேண்டுகோளின்படி, பழங்குடி பெயருக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் உலுரு / அயர்ஸ் ராக் என்று இதற்கு பெயரிடப்பட்டது. இதுவொரு மணற்கல்லால் ஆன ஒரு பாறையாகும். இது தரையில் இருந்து 348மீ (1142 அடி) உயரமும், கடல் மட்டத்தில் இருந்து 863மீ (2831அடி) உயரமும் கொண்டதாகும். இதன் பெரும்பகுதி தரைக்குள் புதைந்துள்ளது. இது 9.4 கி.மீ. சுற்றளவு கொண்டது.
இந்த பாறை உருவாகி சுமார் 85 முதல் 80 கோடி ஆண்டுகளாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவொரு சுற்றுச்சூழல் தலமாகவும் அறியப்படுகிறது. வரலாற்று ரீதியாக இப்பகுதியில் சுமார் 46 வகை பாலூட்டிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அண்மையில் நடந்த ஆய்வில் இங்கு 21 இனங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இங்கு வாழும் பாலூட்டிகளின் எண்ணிக்கை குறைவு இப்பகுதியின் சூழல் மற்றும் ஆரோக்கியத்தின் சீரழிவை சுட்டிக்காட்டுவதாக அனங்கு இன மக்கள் கூறுகின்றனர். மால்லீபௌல், பிரஷ்வால் போஸ்ஸம் ( மரங்களில் வாழும் ஒருவகை எலி), ருபஸ் ஹேர்-வால்லாபி, பில்பி, பர்ரோயிங் பெட்டாங், பிளாக் பிளாங்ட் ராக் வால்லாபி போன்ற அப்பகுதியில் வாழ்ந்த, இன்று மறைந்து விட்ட உயிரினங்களை மீண்டும் அங்கு வளர்க்க வேண்டும் என்று அனங்கு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அழியும் பாலூட்டி என்று கூறப்படும் முல்காரா மணற்பாங்கான பகுதிகளைக் கொண்ட உலுரு பாறை முதல் இப்பூங்காவின் வடக்கு எல்லை வரையிலான பிரதேசங்களில் காணப்படுகிறது. இப்பூங்காவில் ஏழுவகை வெளவால்கள் வாழுகின்றன. இங்கு ஊர்வன இனத்தைச் சேர்ந்த 76 வகை பல்லிகள்/ஓணான்கள் காணப்படுகின்றன. அதேபோல் இங்கு நான்கு வகை தவளைகள் வாழுகின்றன. அனங்கு மக்கள் உலுரு மீது ஏறுவதில்லை. அது புனிதமானதாக அவர்களால் கருதப்படுவதால் அவர்கள் அதன் மீது தங்கள் கால்களைப் பதிப்பதில்லை. அவர்கள் உலுரு மீது ஏறவேண்டாம் என்று சுற்றுலா பயணிகளிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
சிலைடு சோ - 9 படங்கள்
800மீ( அரை மைல்) உயரம் கொண்ட மலை மீது ஏறுவது எளிய காரியமில்லை. எனவே முழு உடல்தகுதி இல்லாதவர்கள் இதில் ஏறுவது உசிதமல்ல. மலையுச்சியில் பலத்த காற்று வீசும் போது பயணிகள் மேலே அனுமதிக்கப்படுவதில்லை. உலுருவின் சில பகுதிகளில் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அனங்கு மக்களின் பாரம்பரிய டிஜூக்குர்பா நம்பிக்கைகளுக்கொப்ப புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பாலினம் சார்ந்த மரபு நிகழ்ச்சிகள் நடப்பதால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலுருவில் உள்ள குகைகளில் அழகான கல் ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் அனங்கு மக்களின் நம்பிக்கைப்படி உலகமும் மனிதர்களும் எவ்வாறு தோன்றினார்கள் என்பதை விவரிக்கும் ஓவியங்களாக உள்ளன. மொத்தத்தில் உலுரு ஒரு பாரம்பரிய தலம், ஒரு சுற்றுச்சூழல் தளம்.
தொகுப்பு.
செல்வன்
Comments