நீங்கள் முதன் முதலில் கேட்ட கதை எது? எஸ்.ராமகிருஷ்ணன்

நீங்கள் எப்போது யாரிடம் கதை கேட்டீர்கள், நீங்கள் எப்போது யாருக்குக் கதை சொல்லியிருக்கிறீர்கள் ? நீங்கள் முதன் முதலில் கேட்ட கதை எது?  என்ற கேள்விகளோடு துவங்கி , உலகின் மிகச்சிறிய கதை தமிழ்தான் உள்ளது  என்கிறார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன். கடந்த ஆக்டோபர் 11 திண்டுக்கல் புத்தகத்திருவிழாவில் பேசிய எஸ்.ரா ... பள்ளிகளில் கதை சொல்ல தனி வகுப்பறைகள் வேண்டும் என்கிறார்...

இனி எஸ்.ரா வின் பேச்சிலிருந்து...

உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் எப்போது யாரிடம் கதை கேட்டீர்கள், நீங்கள் எப்போது யாருக்குக் கதை சொல்லியிருக்கிறீர்கள் ? நீங்கள் முதன் முதலில் கேட்ட கதை எது? என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? இப்படி நான் ஏன் கேட்கிறேன் என்றால் இன்றைக்கு கதை கேட்பவர்களும், கதைசொல்பவர்களும் இல்லை என்று சொல்லலாம். கதைக்குக் கால் உண்டா? என்று கேட்பார்கள். கதைக்குக் கால் உண்டா, கை உண்டா என்று எனக்குத் தெரியாது.

ஆனால் கதைக்கு இதயம் இருக்கிறது. அதனால் தான் ஒருவன் படிக்கும் கதையில் வரும் கதாப்பாத்திரமாக தன்னையும் நினைத்துக் கொள்கிறான். 600 பக்கங்கள் உள்ள பொன்னியின் செல்வனை நாம் படிக்க ஆரம்பித்தால் ஒரு சரித்திர காலத்திற்குச் சென்று விடுகிறோம். மன்னர்கள் வந்துவிடுகிறார்கள். குதிரைகள் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. பயணக் கட்டுரைகளைப் படிக்கும் போது நாம் போகாத ஊருக்கெல்லாம் போக முடிகிறது. புத்தகங்களை நாம் படிக்கும் போது நம் விழித்திரை முன்னால் நடைபெறும் சம்பவங்களாகத் தெரியும். ஒரு மனிதனுக்கு தனது வாழ் நாள் முழுக்க போதாது. மனிதன் ஆயிரம் ஆயிரம் கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் வாழவே முடியாத கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்கிறது புத்தகம். சிறு வயதில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா கதை சொல்லக் கேட்டிருக்கிறோம்.


இப்போது யாராவது தங்கள் குழந்தைக்கு கதை சொல்கிறார்களா? இன்றைக்கு உள்ள குழந்தைகள் எல்லாம் யாராவது கதை சொல்லமாட்டார்களா? ஏங்குவதற்குப்பதிலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சித்திரக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமது காலத்தில் உணவோடு கதையையும் சேர்த்து நமக்கு தாய் ஊட்டினாள். ஒரு தாய் மொழியில் கதை கேட்டால் தான் அது சிறந்த ஞானம் உள்ள குழந்தையாக, சிந்திக்கும் திறன் உள்ள குழந்தையாக பரிணமிக்கும். எனது குழந்தை அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் படிக்க வைக்கிறேன் என்று பெருமை கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை, ஒரு பள்ளியில் குழந்தைகள் கற்றுக் கொள்ள மியூசிக் கிளாஸ் உள்ளது, யோகா கிளாஸ் உள்ளது, கராத்தே கிளாஸ் உள்ளது,

கதை சொல்லித் தரும் வகுப்பறை இல்லை, ஆனால் கதை சொல்லித்தரும் வகுப்பறை அவசியம் வேண்டும். நாம் நமது தலைமுறைகளுக்கு நமது முன்னோர்கள் நமக்களித்த கதைகளைக் கொண்டு செல்ல வேண்டாமா? கதை என்பது ஒரு விதை. ஒரு மனிதன் தனது வாழ்நாள் அனுபவங்களை கதைகளாக சொல்லி யிருக்கிறான். உலகின் முதல் கதை என்ன என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியுமா? குகையில் வாழ்ந்த மனிதன் கூட கதை சொல்லி இருக்கிறான்.தனது கதையை கல்வெட்டுக்களாக பாறைகளில் பதித்துள்ளான். இன்றைக்கு அவை தொன்மங்களாக உள்ளன, ஒரு மனிதன் தான் பெற்ற அறிவை பிறருக்குச் சொல்லித்தருவதற்கு கதை பயன்பட்டது, நமது கடவுள்களுக்குக் கூட ஒவ்வொரு கதை இருக்கிறது.


அந்த கதைகள் மூலமாக மனிதனுக்கு நீதிக்கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. கடவுள்களே நீதியுடன் வாழ்வதற்கு கதை தேவையென்றால் மனிதன் நேர்மையுடன் வாழ்வதற்கு கதை மிகவும் அவசியமாகிறது, ஏசுநாதர், புத்தர் போன்றவர்கள் கதை சொல்லிகளாக இருந்துள்ளார்கள். உலகின் மிகச் சிறியக் கதை தமிழ் மொழியில் தான் உள்ளது. ஒரு ஊரில் ஒரு நரி அதோட சரி என்று ஒரு வரிக்கதை தமிழில் தான் உள்ளது. நரியைப் பற்றி நாம் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறோம். அது தான் கதை. காக்காய் பாட்டியிடம் வடை திருடிய கதை கிரேக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் பிரபலமாகி தமிழ்நாட்டிற்கு வந்தது, அதே போல் ஒரு குரங்கின் இதயத்தை ருசிப்பதற்காக குரங்கை ஏமாற்றி தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலைப் பற்றிய கதை. அந்த கதையில் வந்த குரங்கு தனது இதயத்தை மரத்தில் வைத்துவிட்டு வந்ததாக சாமர்த்தியமாக தப்பியது. தீயவர்களுடன் சேர்க்கைக் கூடாது என்பதை வலியுறுத்தும் இந்த கதை தமிழகத்தில் இருந்து கிரேக்கத்திற்குச் சென்றது, இது போல ஆயிரம் ஆயிரம் கதைகள் தமிழ்நாட்டில் இருந்தும், கிரேக்கத்தில் இருந்தும் பரிமாற்றம் செய்யப்பட்டன. ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு கதை உண்டு, சில கதைகளை வெளியில் யாருக்கும் சொல்லாமல் தனக்குள்ளேயே பூட்டி வைத்துவிடுவார்கள், எனக்குப் பிடித்த கதையாக புதுமைப்பித்தனின் செல்லம்மா கதையைச் சொல்லலாம்.

அந்த கதையில் பிழைப்புத் தேடி சென்னையில் குடியேறி மீண்டும் தன் சொந்த ஊரான நெல்லைக்கு எப்போது சென்று சொந்தபந்தங்களைச் சந்திப்பது என்ற ஏக்கத்தில் மனைவி செல்லம்மா காத்திருந்து இறந்து போவாள். ஊரில் 10 வீடுகள் இருந்தாலும் ஒவ்வொரு வீட்டில் உள்ள பிரச்சனை ஒவ்வொருவருக்கும் தெரியும். சென்னையில் ஒவ்வொரு வீடும் ஒரு தனி தீவாக இருக்கிறது. இங்கு செத்தால் துக்கம் விசாரிக்கக் கூட யாரும் வரமாட்டார்கள் என்று மிக அழகாகவும் சோகமுடனும் சொல்லப்பட்ட புதுமைப்பித்தனின் கதையை நீங்கள் படிக்க வேண்டும்.
-எஸ்.ராமகிருஷ்ணன்

பள்ளிகளில் கதைகள் சொல்ல,விவாதிக்க என ஓரு பிரியர்ட் இருக்கும்.. அதைக்கூட வாத்தியார்கள் ஆங்கிலம்,கணக்கு பாடங்களை எடுத்து மண்டைகாய விடுவார்கள். அது போகட்டும் நாமவது நம் பிள்ளைகளுக்கு கதைசொல்லி வளர்ப்போம். 

தொகுப்பு
- செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

முதலில் வகுப்பறைகள் வேண்டும்... பிறகு தானி தனி வகுப்பறைகள்...

ப..ப...ப...நன்றி...

(ப = கிர்வுக்கு)
மிக மிக ஒரு நல்ல பதிவு. யாரைக் கேட்டாலும் "இப்பலாம் எங்கேங்க நேரம் கதை சொல்லவோ கேக்கவோ" னுதான் பதில் வரும். கதை சொல்வதும் கேட்பதும் ஒரு நல்ல கலை மட்டுமல்ல அது கேட்பவரையும், சொல்பவரையும் ஆளுமைத் திறனை வளர்க்க உதவும் ஒரு மேம்பட்ட கலை எனலாம் நான் எஸ்.ராமக்ருஷ்ணன் அவர்களின் எழுத்துக்களை ரசிப்பவன். இதோ அவர் கதை கூறுவதைப் பற்றியும் அவர் குழந்தைகளுக்குச் சொன்ன கதையும் அவர் வலைத்தளத்திலிருந்து. அருமையான ஒன்று http://www.sramakrishnan.com/?p=2917