மரண வெளியும் - கற்கள் தானாக நகர்ந்து செல்லும் மர்மமும்

அமெரிக்காவின் ரேஸ்டிரெக் பிளாசா என்ற பிரதேசத்தில் கிடக்கும் கற்கள் தானாக நகர்ந்து சென்று பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிகழ்வை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இன்று வரை விடை கிடைக்காமல் திணறி வருகின்றனர்.
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா பகுதியில் உள்ள ரேஸ்டிரெக் பிளாசா பிரதேசம் தற்போது உலக பிரசித்தி பெற்ற இடமாக மாறியுள்ளது. இந்த இடத்திற்கு மரணவெளி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மனிதர்களோ, மரம் மட்டைகளோ, உயிரினங்களோ கிடையாது. பார்ப்பதற்கு பாலைவனம் போல பரந்து விரிந்து கிடக்கும் இந்த பிரதேசத்தில் வறட்சியின் போது பூமியில் வெடிப்பு விழுந்து அதனுள் ஐஸ் படர்ந்து கிடக்கும் அதிசயம் காணப்படுகிறது.

இந்த பகுதியில் பூமியில் கிடக்கும் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. கற்கள் பூமியில் நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெள்ளத் தெளிவாக காணப்படுகிறது. இங்கு கிடக்கும் கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள்ளாக மர்ம பூமியின் முழு பிரதேசத்தையும் சுற்றி வந்து கொண்டிருப்பது ஆய்வுகளின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் சற்று புதுமையாக சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பித்து ரயில் தண்டவாளம் போல் ஒரே சமயமாக பூமியை சுற்றி வந்த அடையாளங்களும் உள்ளன. சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ வளைந்து தங்களது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. சில நேரம் ரிவர்சில் கற்கள் பயணம் செய்திடும் சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது.


இந்த மர்ம பூமிக்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து உடைந்து விழும் கற்துண்டுகள், மரணவெளி முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இவைகளே அந்த மரணவெளி முழுவதிலும் நகர்ந்து திரிகின்றன. இவற்றில் பெரும்பாலான கற்கள் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாக நகர்கின்றன. ஆனால் சில கற்களோ நீண்ட காலமாகியும் ஒரு சில அடிகள் மட்டுமே நகர்கின்றன. இவைகளுக்கு அன்லக்கிஸ்டோன்ஸ் என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
இந்த மர்ம பிரதேசம் குறித்தும் கற்கள் தானாக நகர்ந்து செல்வது பற்றியும் முதன் முதலில் 1948 ம் ஆண்டில் தகவல்கள் வெளியானது. ஆனாலும் 1972 - 1980 ம் ஆண்டுகளில்தான் இந்த மரணவெளி பகுதியில் கற்கள் தானாக நகர்வது குறித்து பெரிய அளவிலான ஆய்வுகள் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற கற்கள் தானாக நகர்வதற்கு இந்த பாலைவனம் காரணமா அல்லது களிமண் தட்டுகள் காரணமா என முதல் கட்ட ஆய்வில் ஆராயப்பட்டது.
ஆனால் வேகமான கற்கள் காற்றில்தான் கற்கள் மெதுவாக நகர்வதாக சிலர் கூறுகின்றனர். எனினும் இந்த மரணவெளி பகுதியில் கடும் காற்று வீசுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்ததையடுத்து அந்த கூற்று மெய்ப்படாமல் போய் விட்டது. இருப்பினும் நிலத்திற்குள் இருக்கும் ஒருவித அமானுஷ்ய சக்தியே கற்கள் தானாக நகர்வதற்கு காரணம் என மசாசூசெட்ஸ் நகர் ஹாம்ஷயர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கண்களுக்கு புலப்படும் வகையில் இந்த கற்கள் நகர்வது கிடையாது. இதில் அதிசய நிகழ்வாக வருடம் முழுவதும் சிறிய கல் ஒன்று இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதிலும் 36 கிலோ எடையுள்ள பெரிய கல் ஒன்று 659 அடிகள் நகர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கல்லின் அளவுக்கும், நகர்வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த பாழடைந்த மர்மமான மரணவெளி பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. விஞ்ஞான உலகில் புரட்சி செய்து விண்வெளியை கூட ஆட்டிப் படைக்கும் அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்களில் இந்த கற்கள் இன்று வரை விரலை விட்டு ஆட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விடை கிடைக்காமல் விஞ்ஞானிகளை திணறடித்து வரும் மர்மங்களில் இந்த மரணவெளியில் தானாக நகர்ந்து வரும் கற்கள்தான் பிரபலம். காலங்கள் மாறும். காட்சிகள் மாறும். அப்போது மர்மங்களின் குட்டு உடையும். இதுவே இயற்கையின் நியதி. அதுவரை நாமும் காத்திருப்பது காலத்தின் கட்டாயம்!


செல்வராஜ்

  
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

என்னால் நம்ப முடியவில்லை.