உங்களுக்கு 40+ வயது இருக்குமானால் லட்டு படத்தை ஏற்கனவே பார்த்த மாதரி தோனும்... பாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தை இன்றைய பாணியில் எடுத்திருக்கிறார்கள். பாக்கியராஜிடம் சொல்லாமல் நடந்த கதை திருட்டு. ரஜினிகாந்த் தலைமுடியை கோதியே சூப்பர்ஸ்டார் ஆனா மாதிரி..., அப்பாவி முகம் அதற்கு பொருந்தாத சேட்டைகள் செய்தே பவர்ஸ்டார் உருவாகிவிட்டார். வயிற்று வலி இருப்வர்கள் பார்க்க வேண்டாம்...
சந்தானம், பவர் ஸ்டார், சேது என மூன்று இளைஞர்கள். மூவரும் விசாகாவை ஒருதலையாக காதலிக்கிறார்கள். அவள் ஒருவரைக் காதலித்தால் மற்றொருவர் விலகிக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மூவரும் தனித்தனியாக அவளை அணுகுகிறார்கள்.
விசாகாவை கவர்வதற்காக, அவளுடைய அப்பா, சித்தப்பா, சின்னம்மா என்று மூவரும் ஒவ்வொருவராக ஐஸ் வைக்கிறார்கள். இறுதியில், விசாகா யாரை காதலிச்சார்? முடிவு என்ன ஆச்சு? என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.
படத்தோட மிகப்பெரும் பலமே பவர்ஸ்டார்தான். பவர்ஸ்டார் நிஜவாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளை வசனங்களாக போட்டு தாக்குகிறார் சந்தானம். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதையெல்லாம் பவர் ஸ்டாரும் என்ஜாய் பண்ணுகிறார் என்பதுதான்.
பவர் ஸ்டார் படத்தில் ஸ்கோர் செய்யும் காட்சிகள் ஏராளம். ‘அழகுமலர் ஆட’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவது, தனது அல்லக்கைகளின் பாராட்டுதல்களுடன் நடனப் பயிற்சி மேற்கொள்வது என அசத்துகிறார்.
சந்தானம் இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல் மற்றவர்களுக்கும் சமவாய்ப்பு கொடுத்திருக்கிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு வெற்றியையேக் கொடுத்துள்ளது.
சேது இந்த படத்தின் மூலம் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகி விசாகா அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார்.
சங்கீத வித்வானாக வரும் வி.டி.வி. கணேஷ், தனது குரல் கெட்டதற்கான காரணம் சொல்வது அடக்கமுடியாத சிரிப்பு. கோவை சரளா, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், தேவதர்ஷினி ஆகியோரும் காமெடியில் நம் வயிரை பதம் பார்த்திருக்கின்றனர்.
படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசி காட்சி வரை காமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் மணிகண்டன். படத்தோட கதை திருட்டுக் கதை என்பது மட்டுமே உறுத்தினாலும், குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று வயிறு குலுங்க சிரித்துவிட்டு வரலாம்.
தமன் இசையில் அனைத்து பாடல்களும் ஓ.கே. ரகம். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வேகமும், படத்திற்கு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. மொத்ததில் இந்த லட்டு இனிக்கிறது.-
- செல்வன்
Comments