எவ்வளவு பிரமாண்டமான படமானாலும் சரி அதன் மையப்புள்ளி ''what if '' தான். இதை சரியாக திட்டமிட்டு திரைக்கதையை உருவாக்கி படமாக்கும் போது படத்தின் வெற்றி என்பது நிச்சயம். ''what if '' என்பது என்ன, பிரமாண்ட இயக்குனர்ஷங்கர், கமல்,மணிரத்தினம் படங்களில் திரைக்கதை, வசன அமைப்பில் பணியாற்றிய மறைந்த எழுத்தாளர் சுஜாதா .....
நான் ஆதாரமாக கதைகள், நாவல்கள் எழுதும் எழுத்தாளன். என்னைப் பல முறை பல காரணங்களுக்காகத் திரைக்கதை எழுதுவதற்கு அழைப்பார்கள்.
கதை பிடித்திருந்தால்தான் அவற்றை எடுத்துக் கொள்வேன்.
கதை பிடித்திருந்தது என்பதற்கு சில விதிகள் எனக்கு உள்ளன.
முதலாவதாக கதைக்கு ஒரு ‘ப்ரிமைஸ்‘ இருக்க வேண்டும். அதன் சாரத்தை ஒரு வரியில் சொல்வதற்கு இயல வேண்டும்.
‘ப்ரிமைஸ்‘ என்பது, கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டும். இதை ‘வாட் இப் — what if ‘ என்பார்கள். எல்லா நல்ல படங்களுக்கும் இந்த ‘ப்ரிமைஸ்’ உண்டு.
இந்த ‘ப்ரிமைஸ்‘ என்பது நன்றாக, எழுதப்பட்ட பெரிய நாவல்களுக்குக் கூட உண்டு. உதாரணமாக பொன்னியின் செல்வன்.
சில உதாரணங்கள்:
பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் ஐந்து பையன்கள் வீட்டைவிட்டுச் சென்றால் என்ன ஆகும் ? (பாய்ஸ்)
ஒரு பணக்காரனுக்குத் தன்னை அறியாமல் திருட்டுப் பழக்கம் இருந்தால் என்ன ஆகும் ? (கண்களால் கைது செய்)
பழைய காலேஜ் நண்பர்கள் ஒருவன் கல்யாணத்தில் சந்தித்தால் என்ன ஆகும் ? (பெப்சி)
திருநெல்வேலி கிராமத்துப் பெண்ணின் கணவனைக் காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டால் என்னாகும் ? (ரோஜா)
சுதந்திரப் போராட்டத் தாத்தா, லஞ்சம் வாங்குபவர்களையெல்லாம் கொல்ல ஆரம்பித்தால் என்னாகும் ? (இந்தியன்)
வரவேண்டிய சொத்தை எதிர்பாராமல் இழந்தால், இரு சகோதரிகளின் காதல்கள் என்னாகும் ? (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
அல்லது
சொத்தை இழந்த பெண்ணுக்குக் காதல் மலர்ந்தால் என்ன ஆகும் ? (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
ஆப்த நண்பனிடம், அவன் தங்கையைக் காதலிப்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டால் என்னாகும் ? (கண்ணெதிரே தோன்றினாள்)
பிரிவினையின் வகுப்புக் கலவரங்களில் மனைவியை இழந்தவன், காந்திதான் அதற்குக் காரணம் எனத் தீர்மானித்தால் என்னாகும் ? (ஹே ராம்)
ஒரு சாதாரண டி.வி. ரிபோர்ட்டருக்கு, ஒரு நாள் மட்டும் முதல்வராகும் வாய்ப்பு வந்தால் என்னாகும் ? (முதல்வன்)
ஒரு தாய்க்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன் குள்ளன் என்றால் என்ன ஆகும் ? (அபூர்வ சகோதரர்கள்)
ஒருவன் விரும்பும் பெண்ணை அவனது இரட்டை சகோதரன் கல்யாணம் செய்து கொண்டுவிட்டால் என்ன ஆகும் ? (வாலி)
ஒரு மிகச் சிறிய கிராமத்தில் ஒருவனுக்கு லாட்டரி விழுந்த அதிர்ச்சியில் அவன் இறந்து போனால் என்ன ஆகும் ? (Waking Ned Divine என்னும் ஐரிஷ் படம்)
ஒரு கணவன் மனைவி தம் பெண் குழந்தையின் ஒன்பதாவது பிறந்த நாளில் அவள் தத்து எடுக்கப்பட்டவள் என்ற உண்மையை அவளிடம் முதல் முறையாகச் சொன்னால் என்ன ஆகும் ? (கன்னத்தில் முத்தமிட்டால்)
ஓர் இளம் பெண் பெரிய வித்வானைச் சபையில் தைரியமாகத் தமிழில் பாடச் சொன்னால் என்ன ஆகும் ? (சிந்து பைரவி)
இப்படி யோசித்தால், எல்லா வெற்றிப் படங்களிலும் இந்த ‘என்னாகும்‘ இருக்கும், இருக்க வேண்டும். இதை நம் சினிமா பரிபாஷையில் ‘நாட்‘ அல்லது ‘தாட்‘ என்கிறார்கள்.ஹாலிவுட்டில்
அவர்கள் ‘ப்ரிமைஸ்‘ என்கிறார்கள்.
-எழுத்தாளர் சுஜாதா
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்
select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments