காதலில் ஜெயிப்பது எப்படி?


நீங்கள் தற்போது எந்த வயதிலும் இருக்கலாம், 80,60,40,20 இப்படி அனைத்து வயதினரும் பார்க்க வேண்டிய படம்.குடும்ப வாழ்க்கையில் எங்கெல்லாம் சொதப்பு கிறோம், என்பதை தெரிந்து கொள்ள, வாழ்க்கையை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள பார்க்கவேண்டிய படம். கவர்ச்சி நடனங்களோ, ஆபாச வசனங்களோ இல்லாத குடும்ப படம்.

அருணாக வரும் சித்தார்த்தும் பார்வதியாக வரும் அமலா பாலும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். சில சந்திப்புகளில் இருவருக்கும் பிடித்துப்போகவே நண்பர்களாக பழகி வருகிறார்கள். அருண் குடும்பம் மிகவும் இனிமையான குடும்பம்.


சந்தோசத்தின் பிறப்பிடம் என அருண் வீட்டை சொல்லலாம். அப்பா வக்கீல். அம்மா ஹவுஸ்வொய்பாக இருக்கிறார். இவர்களது செல்லப்பிள்ளையாக அருண். பார்வதியுடன் அருண் நட்புக்கொண்டிருப்பதை கண்டு இருவரும் மகிழ்கின்றனர். இதனிடையே அருண்-பார்வதி நட்பு காதலாக மாறுகிறது.

பார்வதி வீடோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இவரது அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும், இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சனைகளால் விவாகரத்து வரை போய்விடுகிறார்கள். இந்நிலையில் தனித்து விடப்படும் பார்வதி அருணின் அன்பை நாட, அருணோ அவரை அறியாமல் பார்வதியை தவிர்த்து விடுகிறார். இதற்கு முன் சிறு சிறு சொதப்பல்களால் சண்டையிட்டு பின் சேர்ந்து கொண்டாலும் இந்த நிகழ்வால் பார்வதி அருணை விட்டு பிரிந்து விடுகிறார்.

சொதப்பலில் விழுந்த அருண்- பார்வதி காதல் என்ன ஆனது? பார்வதியின் பெற்றோர்கள் நிலை என்ன ஆனது? என்பதை சொல்லி சுபம் போட்டிருக்கிறார் அறிமுக இயக்குனரான பாலாஜி மோகன். அருண் என்ற கேரக்டரில் வரும் சித்தார்த் அப்பிராணி காதலன் வேடத்தில் அசத்துகிறார். காதலி பிரிந்து விட்டாளே.


அதை மறக்க என்ன செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்க, அவர்களில் 75 சதவீதம் பேர் தண்ணியடிக்க சொல்கின்றனர். அப்போது ”ஏற்கனவே என் இதயம் டேமேஜ் ஆயிடிச்சி, இதனால் என் கிட்னியையும் டேமேஜ் செஞ்சுக்க விரும்பல” எனும்போது பளிச்சென மனதில் நிற்கிறார். பார்வதியாக வரும் அமலாபால் கல்லூரி மாணவி பாத்திரத்தில் கச்சிதமாய பொருந்துகிறார்.

தன் அம்மாவிடம் ”நான் இருக்கறதையே நீங்க ரெண்டு பேரும் மறந்துட்டீங்களே. விவாகரத்து கேட்க போறீங்கண்ணு என்னிடம் ஏம்மா கேட்கல” என உடைந்து அழும்போது மனம் கனத்துப்போகிறது. காதல் செய்வதை விட காதலனுடன் இவருக்கு நன்றாக சண்டைபோட வருகிறது. காதல் காட்சிகளில் இன்னும் நடித்திருக்கலாமோ என கேட்கத் தோன்றுகிறது.

சித்தார்தின் அப்பா அம்மாவாக வரும் ராகவேந்தர்- சிவரஞ்சனி ஜோடி சரியான தேர்வு. அப்பாத்திரமாகவே வாழ்ந்து அசத்தியிருக்கிறார்கள். இப்படி ஒரு அப்பா அம்மாவா என ரசிக்க வைத்திருக்கிறார்கள். அமலாபால் அப்பா அம்மாவாக வரும் சுரேஷ்- சுரேகா ஆகியோர் நடிப்பு பிரமாதம். தலைக்குமேல் வளர்ந்த மகள் இருக்கும் போது இவர்களுடைய காதலில் சொதப்புவதாகட்டும் மீண்டும் இணைவதாகட்டும் அனைத்தும் கிளாப் ரகம். காமெடிக்கு சித்தார்தின் நண்பர்களாக வரும் அர்ஜினும், சிவாவும் படத்தில் ஆங்காங்கே மொக்கையும் அறையும் வாங்கி நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.

இயக்குனர் பாலாஜி மோகனின் வசனங்கள் சில இடத்தில் பளிச் ரகம். சுரேஷ் “தன் மனைவி பற்றி அமலாபாலிடம் ”இந்த உலகத்துல யாருமே ‘மேட் பார் ஈச் அதர்’ இல்லமா. நமக்கு பிடிச்சவங்களுக்காக நாம மாத்திக்கனும். அப்போ ‘மேட் பார் ஈச் அதர்’ ஆகிடும்மா” என்பார். அமலாபால் கண்ணீர் விடுவதைப் பார்த்து விட்ட சித்தார்த் ”பெண்களிடம் இருக்கும் பெரிய ஆயுதமே, அவங்களேடா டேமை உடைக்கறதுதான்…” என சொல்கையில் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறார்.

சுரேஷ் தனது மனைவியை அரவது மாமனாரின் 80வது கல்யாணத்தில் சந்திக்கும்போது இளையராஜாவின் ‘வளையோசை சலசலவென…’ பாடல் பின்னணியில் ஒலிக்கும் போது தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது. தன் மகளிடமே தனது மனைவிக்கு காதல் கடிதம் கொடுத்து விட்டு கம்பீரமாக சுரேஷ் நடந்து வரும்போது நீரவ்ஷாவின் கேமரா கவிதை படிக்கிறது. இவரது ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

படத்தில் தமனின் பின்னணி இசை அருமை. அழைப்பாயா.. அழைப்பாயா… பாடல் நன்றாக இருக்கிறது. இன்றைய இளைஞர்களை காதல் செய்பவர்களை மையப்படுத்தி சண்டைக்காட்சி இல்லாமல் கொலை இரத்தம் இல்லாமல் வில்லன் இல்லாமல் இப்படத்தை இயக்கிய பாலாஜி மோகனை பாராட்டலாம்.

ஆனால் படத்தில் டாகுமெண்டரி போல் சில காட்சிகளை அமைத்திருப்பது படத்திற்கு தொய்வை உண்டாக்குகிறது. மற்றபடி காதலிப்பவர்களுக்கும், காதலித்தவர்களுக்கும், காதலிக்க இருப்பவர்களுக்கும் இப்படம் பிடிக்கும்.

-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

அரவான் படம்தான் இந்த ஆண்டில் முதலில் பார்த்துவிடவேண்டும் என்று இருக்கிறேன். அதற்கடுத்து இப்படம், மெரீனா'ல்லாம் பார்க்க வேண்டும். நல்ல பதிவு. நன்றி.
- சித்திரவீதிக்காரன்.
  •  ரோபோவை  திருமணம் செய்த   இளைஞர்
    20.11.2021 - 0 Comments
    கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், மனைவி அமைவதெல்லாம்  இறைவன் கொடுத்தவரம் என தமிழில் பலமொழிகள்…
  • கச்சதீவில் சந்தித்த சிங்கள போலீஸ்...+ படங்கள்
    21.05.2014 - 0 Comments
    உங்கள் பெயர், எங்கிருந்து வருகிறீர்கள், யார் மூலமாக கச்சதீவு உங்களுக்கு தெரியும், எதற்காக…
  • மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருடும் சோவா வைரஸ்
    16.09.2022 - 0 Comments
     வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து சேவா என்ற வைரஸ்  மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருடப்படும் அபாயம்…
  • எனது பிளஸ்2 ஆசிரியரை தேடிக்கொண்டிருக்கிறேன் - இயக்குனர் சசிக்குமார் பேட்டி
    13.03.2012 - 0 Comments
    ஒவ்வொரு பேட்டியிலும் எனது ப்ளஸ்2 ஆசிரியரை பற்றி தெரிவி க்கிறேன்.ஆனால் அவரை பார்க்க முடியவில்லை என கண்கலங்கிய…
  • தலைவா பட தடைக்கு 3 காரணங்கள் ....
    16.08.2013 - 3 Comments
    தலைவா படம் ஒரு வாரகாலமாக தடை செய் யப்பட்டுள்ளது. படம் தடை செய்ய ப்பட பல காரணங் கள் சொல்லப் படுகின்றன.…