சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான புனே திரைப்படக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
திரைப்படம், தொலைக்காட்சித் துறையின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக, அத்துறை தொடர்பான தொழில்நுட்பப் படிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. எனவே, இது தொடர்பான படிப்புகளில் சேருவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். திரைப்படக் கல்லூரிகளில் சர்வதேச அளவில் புகழ் பெற்றது புனேயில் உள்ள ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா. பழம் பெரும் பிரபாத் ஸ்டூடியோ இருந்த இடத்தில் 1960ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படக் கல்லூரி தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனம் இது.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர். அடூர் கோபாலகிருஷ்ணன், மணி கௌல், நஸ்ருதீன் ஷா, ஜெயபாதுரி, சத்ருகன் சின்ஹா, சுபாஷ் கய், மிதுன் சக்கரவர்த்தி, சஞ்சய் லீலா, பன்சாலி, பாலு மகேந்திரா...இப்படி இந்தக் கல்லூரியில் படித்து இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்து வரும் முன்னாள் மாணவர்கள் பலரும் இருக்கிறார்கள். இங்கு படித்த மாணவர்களின் திரைப்படங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன. எனவேதான், திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் துறையில் ஆர்வமிக்க மாணவர்கள் இந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்புகிறார்கள்.
இந்தக் கல்வி நிறுவனத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளும் மாணவர்களின் படைப்புத் திறனை வளர்ப்பதற்கு ஏற்ற வகையில் உள்ள வாய்ப்புகளும் இந்தக் கல்வி நிறுவனத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கியுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களின் நேர்முகப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திரைப்படத் தயாரிப்பிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பிலும் அந்தந்த மாணவர்களின் படிப்புக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு உண்டு. அத்துடன் இங்கு படிக்கும் திறமையான மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கவும் சாத்தியம் உண்டு.
புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில் டைரக்ஷன், ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகிய துறைகளில் மூன்று ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர இளநிலைப் படிப்புப் படித்திருக்க வேண்டும். சவுண்ட் ரிக்கார்டிங் மற்றும் சவுண்ட் டிசைன் படிப்புகளில் சேர இளநிலைப் படிப்புடன் பிளஸ் டூ வகுப்பில் இயற்பியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்து இருக்க வேண்டும். நடிப்பில் இரண்டு ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆர்ட் டைரக்ஷன் மற்றும் புரடக்ஷன் டிசைனில் இரண்டு ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர ஆர்க்கிடெக்ச்சர், பெயிண்டிங், அப்ளைட் ஆர்ட்ஸ், சிற்பம், இன்டீரியர் டிசைன்அல்லது நுண்கலை தொடர்பான படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஃபீச்சர் ஃபிலிம் ஸ்கிரீன் ப்ளே ரைட்டிங், டைரக்ஷன், எலெக்ட்ரானிக் சினிமாட்டோகிராபி, வீடியோ எடிட்டிங், சவுண்ட் ரிகார்டிங் அண்ட் டிவி என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் ஓராண்டு முதுநிலை சான்றிதழ் படிப்புகளில் சேரவும் இளநிலை பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். சவுண்ட் ரிகார்டிங் அண்ட் டிவி என்ஜினீயரிங் முதுநிலை சான்றிதழ் படிப்பில் சேர பட்டப் படிப்புடன், பிளஸ் டூ வகுப்பில் இயற்பியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியதும் அவசியம்.
இந்தப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க நுழைவுத் தேர்வு மே 6ஆம் தேதி நடத்தப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் தேதி மாற்றியமைக்கப்படலாம் என்றும் புனே திரைப்படக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அகர்தலா, அகமதாபாத், அலகாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வரம், சண்டீகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவாஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கொல்கத்தா, லக்னோ, மும்பை, புதுடில்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம்.
விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பைப் பெற பொதுப் பிரிவு மாணவர்கள் 2,150 ரூபாய்க்கு ‘அக்கவுண்டஸ் ஆபீசர், ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் புனேயில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் (அதாவது வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் உள்ளவர்கள்) ஆகியோருக்குக் கட்டணம் ரூ.650. விண்ணப்பங்களைத் தபால் மூலம் பெறுவதற்குக் கடைசி தேதி பிப்ரவரி 3ம் தேதியாகும். பிப்ரவரி 29ஆம் தேதி வரை நேரில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். திரைப்படத்துறையிலும் தொலைக்காட்சித் துறையிலும் கால் பதிக்க விரும்பும் மாணவர்களா
நீங்கள்? விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
-பொன். தனசேகரன்
நன்றி புதிய தலைமுறை
விவரங்களுக்கு:
Controller of Examinations,
Film – Television Institute of India,
Law College Road, Pune – 411 004
Phone : 020 - 25431817 / 25430017 / 25430363 / Ext. 223,
020 - 25425656 (Direct Line)
E-Mail : tutorial_sec@ftiindia.com
Website : www.ftiindia.com
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments