இது ஆன்மீக அனுபவமல்ல. திருப்பறங்குன்றம் என்றாலே கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பக்தர்களுக்கு ஆன்மீகத்தை சரியாக புரிய வைக்கும் அனுபவம்.தமிழ் கடவுள் முருகனின் முதல்படை வீடான திருப்பறங்குன்றம் என்றாலே சுப்பிரமணியசாமி திருக்கோயிலும், கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம் என ஆன்மீகம் கமழும் இடத்தில், எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அழைத்துச்சென்ற ''பசுமைப் பயண'' நிகழ்வில் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறிய புதிய தகவல்கள் புதிய சிந்தைனைகளை தூண்டியது. திருப்பறங்குன்றத்தை வேறு ஒரு கோணத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.......
இம் மலையில் இயற்கையாக அமைந்த குகைகளில் கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 13ம் நூற்றாண்டுவரை சமணர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.சமணர்கள் நடத்திய சமணப்பள்ளி,அவர்கள் தங்கிய சமணப்படுக்கைகளை உருவாக்கி கொடுத்தவக்களின் பெயர்கள் அப்படுக்கைகளின் பக்கவாட்டிலுள்ள தமிழ்பிராமி கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.அதன்படி கி.பி.முதலாம் நூற்றாண்டில் எருக்காட்டூரைச் சேர்ந்த இழக்குடும்பிகள் போலாலயன் என்பவன் சமணபள்ளிகளையும், சமணபடுக்கைகளையும் தானமாக செய்வித்துள்ளான்.
மேலே உள்ள கல்வெட்டுச் செய்தி ''எரு காடூர் இழ குடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன் நெடுசாதன்''
என உள்ளது. இதனை எருகாடூர் இழகுடும்பிகன் போலாலயன் சார்பாக ஆய்சயன் நெடுசாத்தன் இந்த கற்படுக்கையைச் செய்தான் என்று கொள்ளலாம்.
திருப்பறங்குன்றம் மலையின் பின்பகுதியில் தற்போது உமையாண்டார் கோயில் என்று அழைக்கப்படும் சிவன்கோயில் உள்ளது. இக்கோயிலில் அசோகமரத்தின் கீழே அமர்ந்த தீர்த்தங்கரர்க்காக சமணர்களால் கி.பி. 8ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட குடைவரைக்கோயிலாகும்.
கி.பி. 13ம் நூற்றாண்டில் சமணர்கள் செல்வாக்கு இழந்த நிலையில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெயரால் ''சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில்'' என்ற பெயரில் பிரசன்னதேவர் என்ற சைவத்துறவி இக்குடைவரை கோயிலை சிவன் கோயிலாக மாற்றியுள்ளார். அதனைத் தெரிவிக்கும் கல்வெட்டு குடைவரைகோயிலின் கீழ்ப்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது.இன்றும் சிதைந்த நிலையில் சில சமணசிற்பங்கள் உள்ளன.
தமிழர்களும் முருக வழிபாடும்......
ஒட்டுமொத்த தமிழர்களின் குலதெய்வமாக முருகனைச் சொல்லலாம். ஆதிமனிதர்கள் தங்களது பிரச்சனைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளவே தெய்வங்களை உருவாக்கினார்கள். பயிரைக்காத்தல், கண்மாயிலிருந்து பாயும் நீரைக்காத்தல், அறுவடையில் விளைந்த பயிரைக்காத்தல்,கால்நடைகளை காத்தல்,ஊரைக்காத்தல் நோய்களிலிருந்து தங்களைக்காத்தல் போன்ற தேவைகளுக்காக காவல் தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், முத்தாளம்மன் போன்ற தாய்வழிசமுக தெய்வங்கள் உருவாக்கப்பட்டன. இதேபோலவே இளமை, உற்சாகம்,அழகுணர்ச்சி,காதல், வீரம், தீமையை அழிக்கும் தன்மை,பிறரைகாக்கும் பண்பு போன்ற தன்மைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தெய்வமாக முருகன் படைக்கப்பட்டார்.தமிழர்களின் வாழ்க்கைமுறை,பண்பாடு ,காலாச்சாரத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் முருகனின் தோற்றத்திலும் குணாம்சத்திலும் ஏற்பட்டது. முருகன் குறவர்களின் தெய்வமாக இருந்து குறவர்குல பெண்ணான வள்ளியை திருமணம் செய்ததாக பரிபாடல்,புறநானூறு,அகநானூறு போன்ற இலக்கியங்கள் கூறுகின்றன.கொற்றவை,பழையோள்,ஐயை என அழைக்கப்பட்ட தாய் தெய்வங்களின் மகனாகக் கருத்தப்பட்ட முருகன் வழிபாடு, பிற்காலத்தில் ஏற்பட்ட ஆரிய -_ திராவிட கலப்பு காரணமாக வணங்கும் முறையிலும்,தோற்றத்திலும் மாற்றமடைந்தது.ஆரியக் கலப்பு ஏற்படுவதற்கு முன்பு முருகன் வழிபாடு சாமியாடுதல், உயிர்பலிகொடுத்தல் போன்ற முறையிலேயே இருந்தது.
கி.பி. 3ம் நூற்றாண்டிலிருந்து 7ம் நூற்றாண்டு வரையிலான பல்லவமன்னர்களின் வழியாக வடஇந்திய ஸ்கந்தன்(ஸ்கந்தன் என்பது முருகனை ஒத்த வடஇந்தியாவில் ஆரியர்களின் தெய்வமாகும்) பழனி,திருத்தணி, திருச்செந்தூர்,குன்றக்குடி,திருப்பறங்குன்றம்,பழமுதிர்ச்சோலை என முருகனின் அறுபடைவிடுகளில் திருத்தணியில் முருகன் ஸ்கந்தன் இணைப்புக்கான அடையாளமாக திகழ்கிறது.கோயிலுக்குள் ஏறும்படிகளில் பாதியில் இந்திர வாகனமான ஐராவதம் யானை சிலை உள்ளது, அந்தயாணை தெய்வானை முருகன் திருமணத்தின் போது சீதனமாக கொடுக்கப்பட்டதாம். ஆரிய கலப்பிற்கு பிறகு முருகனுக்கு தெய்வானை,வள்ளி என இரண்டு மனைவிகள் உருவாக்கப்பட்டனர்.முருகனை வணங்கும் முறையில் இன்றும் அகமுறையில் அமைந்த கோயிலில் சுப்பிரமணியனாக ஐதீகமாக வணங்கும் ஒரு முறையும்,கோயிலுக்கு வெளியே சாமியாடி வணங்கும் முறையும் உள்ளது.
கிரேக்கம்,மற்றும் பாலஸ்தீன பகுதியிலும் முருகனை ஒத்த கடவுள் வழிபாடு இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் பற்றி...
எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் மதுரையைச்சேர்ந்தவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச்சுழல், உலகமயம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வருபவர். தன் எழுத்துக்களுக்காகத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாகப் பயணித்தும் வருபவர்.
இந்தியாவின் குஜராத், ஒரிசா, விதர்பா, ஜார்கண்டு, ஆந்திரம் என இந்தியாவெங்கும் களப்பணிக்காக மாதத்தின் பாதி நாட்கள் பயணத்தில் இருப்பவர். மிக அபூர்வமான பல தகவல்களைப் பார்வைகளைத் தமிழக வாசகர்களுக்கு வழங்கி வருபவர். தொடர்ந்து உயிர்மை, தலித் முரசு என பல இதழ்களில் எழுதியும் வருபவர், தன் எழுத்தின் ஒரு பகுதியாக முக்கிய படைப்புகளை தமிழுக்கு மொழியாக்கமும் செய்துள்ளார். குஜராத் இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை இந்திய மொழிகளில் முதலாவதாக தமிழல் நமக்கு வழங்கியவர். அத்துடன் அப்சலை தூக்கிலிடாதே, தோழர்களுடன் ஒரு பயணம் இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் இவரது இரு கட்டுரைத் தொகுதிகள்.
அ.முத்துகிருஷ்ணன் டிசம்பரில் (2010) பாலஸ்தீன ஆதரவுக்குழு ஒன்றுடன் இணைந்து தரைவழியாக பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து வழியாக பாலஸ்தீனம்வரைச் சென்று மகத்தான ஒரு பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியிருக்கிறார். மேலும் உயிர்மை இலக்கிய இதழில் இவர் எழுதிய யானைமலை குறித்த கட்டுரை மதுரை சுற்றியிருக்கிற 20க்கும் மேற்பட்ட தொல்லியல் தளங்களுக்கான மலைப்பயணத்தை துவக்க காரணமாக இருந்தது.இதுவரை 7 மலைப்பயணங்கள் முடிந்திருக்கின்றன.அரவரை தொடர்பு கொள்ள9443477353,மெயில் muthusmail@gmail.com
படவிளக்கம்
1. சமணக்குகை
2. கல்வெட்டு
3. உமையாண்டார்கோயில் மற்றும் சிற்பங்கள்
விமர்சனம் எழுத ...
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
அ.தமிழ்ச்செல்வன்
Comments
-சித்திரவீதிக்காரன்