ஈரமுத்தம்


முத்தம் விதை
உயிர்த்தெழுகின்றன
கோடி கோடி உணர்வுகள்,

முத்தம் தூண்டல் மட்டுமே
துவக்கிப் பெருகுகின்றன
உடலெங்கும்
ஆசை நரம்புகள்,

முத்தம் சாவி மட்டுமே
திறந்து விடுகிறது
துருப்பிடித்து இறுகி
உறைந்து போயிருக்கும்
ஆழ் கதவுகளை

அனுபவித்து ஆழ்ந்த
ஆயிரம் போகங்கள்
மறந்துபோகலாம்,
காக்கா கடியாய்
கடித்து கொண்ட
முதல் முத்தமும்
நினைவுப் பொக்கிஷம்,

சண்டையிட்டுக் கொள்ளுங்கள்
அழுது கொள்ளுங்கள்
சகவாசமே வேண்டாம் என
பிரிந்து போகவும் தயாராயிருங்கள்,

மறக்காமல்
கையிலெடுத்துக் கொள்ளுங்கள்
உங்களின் உன்னத முத்தத்தை,

ஈரமுத்தம் என்றாலும்
ஒரு நாள்
எரித்துவிடக்கூடம்
உங்களின்
சந்தர்ப்பவாத சண்டைகளை.



அ.வெண்ணிலா
நன்றி- விகடன் தீபாவளிமலர்- 2004

Comments