பூமியை போலவே இருக்கும் 16 கிரகங்கள் உள்ளிட்ட 50 புதிய கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து புதிய சாதநை படைத்துள்ளனர்.
இதில் ஒரு கிரகம் தனது நட்சத்திர மண்டலத்தின் விளிம்பில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. வேற்று கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஹார்ப்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள்தான் இந்த புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.
தாங்கள் கண்டுபிடித்துள்ள நட்சத்திரங்களில் 40 சதவீதம் சூரியனை போன்ற ஒத்த தன்மை கொண்டவை
என்றும் அந்த நட்சத்திர மண்டலங்களில் குறைந்தபட்சம் ஒரு கிரகமாவது நமது சனிக்கிரகத்தை விட மிகவும் இலகுவானதாக இருக்கும் என்றும் இந்த விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.
சிலி நாட்டில் இ.எஸ்.ஓ.வின் லா சில்லா கோளரங்கத்தின் அமைக்கப்பட்டுள்ள 3.6 மீட்டர் அதிநவீன தொலை நோக்கி கருவி மூலம் இந்த புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மைக்கேல் மேயர் தலைமையிலான ஹாப்ஸ் குழுவினர்தான் இந்த அரிய கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.
ஒரே சமயத்தில் இவ்வளவு புதிய கோள்களை கண்டுபிடித்தது இந்த விஞ்ஞானிகள் குழுதான் என்பது சுவாரஸ்யமான விஷயமாகும்.
இந்த குழுவின் இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் மிஞ்சி விட்டது.
சூரியனை போன்ற நட்சத்திரங்கள் சிலவற்றின் மண்டலத்தில் நமது நெப்டியூனை போன்ற கிரகங்களும் பூமியை போன்ற கிரகங்களும் உள்ளன என்றும் அதில் ஒன்றில் பூமியை ஒத்த தன்மையுடன் கூடிய ஒரு கிரகம் இருக்கிறது என்றும் இந்த ஆராய்ச்சியாள்கள் கூறுகின்றனர். ரேடியல் வெலோசிட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூரியனை போன்ற நட்சத்திரங்களை பற்றிய ஆராய்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக தாங்கள் நடத்தியதாகவும் அதன் அற்புத பலனாக இந்த புதிய நட்சத்திர மண்டலங்களும் அவற்றின் மண்டலத்தில் உள்ள கிரகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மைக்கேல் மேயர் கூறினார். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேலும் 150 கிரகங்களை தாங்கள் கண்டுபிடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் வியோமிங் என்ற இடத்தில் வேற்று கிரக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புக்கள் குறித்த மாநாடு ஒன்று விரைவில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் வேற்று கிரக ஆராய்ச்சியாளர்கள் சுமார் 350 பேர் தாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய கிரகங்களை பற்றிய தகவல்களை சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.
அந்த மாநாட்டில் மைக்கேல் மேயர் தலைமையிலான இந்த ஹாப்ஸ் ஆராய்ச்சி குழுவினரும் தங்களது இந்த புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி விவரங்களை சமர்ப்பிக்க இருக்கின்றனர்.
அகஸ்டின் சின்னப்பா
Comments