சிலந்தியின் நூல்’ என்ற இந்தச் சிறுகதை ‘காற்றுவெளி” கலை இலக்கிய’ இதழில் வெளிவந்துள்ளது. முழுகதையையும் கீழே இணைத்துள்ளேன்.‘காற்றுவெளி இதழ் லண்டனிலிருந்து வெளிவருகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் படைப்புகளை வெளியிடுகிறது. இதழ் தொடர்ந்து சமூக அக்கறையுடனும் மாற்றுச் சிந்தனைகளுடனும் பல்வேறு படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. இந்த இதழ் மொழி பெயர்ப்பு சிறப்பிதழிலாக வெளிவந்துள்ளது. அந்த இதழில் வெளியான இந்தக் கதை, மனித வாழ்க்கையின் உளவியல் சிக்கல்களையும் நாம் நம்மைச் சுற்றி உருவாக்கிக்கொள்ளும் வலைகளையும் பேசுகிறது.தமிழில் மொழிபெயர்த்து அதை நம் சிறுகதை தன்மைக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளேன்.
சிலந்தி தன் வலையைத் தானே பின்னிக்கொள்வது போல, மனிதனும்
சில நேரங்களில் தன்னுடைய ஆசைகள், உறவுகள், எதிர்பார்ப்புகள், பயங்கள் ஆகியவற்றால் ஒரு வலையை
உருவாக்கிக்கொள்கிறான். அந்த வலையிலிருந்து அவன் எப்படி வெளியேறுகிறான் என்பதுதான்
கதையின் மையச் சிந்தனையாக அமைகிறது.
‘சிலந்தியின் நூல்’ ஒரு கதையை மட்டும் சொல்லவில்லை; நம்மைச் சுற்றி இருக்கும் வலை எது, அதைப் பின்னுவது
யார் என்ற கேள்வியையும் வாசகனுக்குள் எழுப்புகிறது.
கதையின் பிடிஎப் கோப்பு படிக்க..
கதை மட்டும் -கிளிக்செய்க
காற்ருவெளி இதழ் இணைப்பு
காற்றுவெளி
இதழ் -கிளிக் செய்க
முழுகதையும் கீழே.. இணைத்துள்ளேன்
சொர்க்கத்தில் அது ஒரு இனிய காலைப்
பொழுது.
பஞ்சுப்பொதி
போன்ற மேக கூட்டம்,பசுமையான புல்வெளிகள், குளிர்ந்த
சுற்றுப்புறம், பூமியில்
காணக்கிடைக்காத அழகான பூக்கள், தாமரை பூத்திருந்த
குளம். தாமரை மலர்கள் அனைத்தும் முத்துக்களைப் போல வெண்மையாக
இருந்தன; அவற்றின் மையத்திலிருந்த பொன்னிற மகரந்தப் பைகளும்
கேசரங்களும் விவரிக்க முடியாத நறுமணத்தை இடைவிடாது காற்றில் பரப்பிக்கொண்டிருந்தன.
ஒரு நாள், சொர்க்கத்திலுள்ள தாமரைக் குளத்தின் கரையில் புத்தர் தனியாக
உலாவிக்கொண்டிருந்தார்.
குளக்கரையில் நின்றிருந்த புத்தர்,
நீர்ப்பரப்பை மூடியிருந்த இலைகளுக்கு இடையிலான ஒரு இடைவெளியை
பார்த்தார். அதன் வழியாகக் கீழே இருந்த காட்சியை
உற்று நோக்கினார்.
சொர்க்கத்தின் தாமரைக் குளத்திற்குக் கீழே நரக உலகம் விரிந்திருந்தது.
படிகம் போன்ற தெளிவான நீரின் வழியாக, ஜப்பானிய புத்த மத நம்பிக்கையில் இறந்தவர்கள்
கடக்கும் சான்சு
ஆறும் (Sanzu-no-Kawa), தண்டனைகளின் அடையாளமான
ஹரி-நோ-யாமா (Hari-no-Yama)
என்ற ஊசி மலையும், கண்ணாடியின் மறுபக்கத்தில்
இருப்பதுபோல் தெளிவாகத் தெரிந்தன.
அந்தக் கணத்தில், நரகத்தின் ஆழத்தில் துன்புற்றுக்
கொண்டிருந்த கண்டதா
(Kandata) என்ற மனிதன் புத்தரின் பார்வையில் பட்டான். எங்கும்
நெருப்பும் புகையும் சூழ்ந்த அந்த நரக உலகில், கொதிக்கும்
நெருப்புக் குளங்களில் பாவிகள் தள்ளப்பட்டு, தாங்க முடியாத
வேதனையில் அலறிக் கொண்டிருந்தனர். அவர்களிடையே கண்டதாவும் துடித்துக்
கொண்டிருந்தான்.
கண்டதா
உயிரோடு வாழ்ந்த காலத்தில் எண்ணற்ற பாவங்களைச் செய்தவன். கொள்ளை, கொலை, தீவைப்பு என அவன் செய்யாத கொடுமை இல்லை என்றே
சொல்லலாம். ஆனால் அவன் வாழ்வில் ஒரு நல்ல செயல் மட்டும் இருந்தது.
ஒருமுறை
அடர்ந்த காட்டின் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, பாதையோரமாக மெதுவாக ஊர்ந்து
சென்றுகொண்டிருந்த ஒரு சிறிய சிலந்தியை அவன் கவனித்தான்.
முதலில்
அதை மிதித்துக் கொன்றுவிட அவன் காலை உயர்த்தினான். ஆனால் ஏனோ ஒரு கணம் தயங்கினான்.
"இது எவ்வளவு சிறிய உயிராக இருந்தாலும், இதற்கும்
உயிர் இருக்கிறது. காரணமின்றி இதைக் கொல்வது சரியல்ல."
என்று
நினைத்த அவன், அந்தச் சிலந்தியை உயிரோடு விட்டுவிட்டான்.
நரகத்தை நோக்கிக் கீழே பார்த்தபோது, கண்டதா ஒரு காலத்தில் அந்தச் சிறிய சிலந்தியின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் புத்தரின் நினைவில் மின்னியது. அந்த ஒரே நற்செயலுக்கான கைம்மாறாக, அவனை நரக வேதனையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.
அப்போது
அவரது பார்வை அருகிலிருந்த ஒரு சொர்க்கச் சிலந்தியின் மீது விழுந்தது. அது அமைதியான
நீலத் தாமரை இலைகளின் மீது, வெள்ளியைப் போல ஒளிரும் மெல்லிய நூலை
நெய்துக்கொண்டிருந்தது.
புத்தர் அந்த மெலிந்த சிலந்தி நூலை மெதுவாகத் தன் கையில் எடுத்தார்.
பின்னர் முத்துக்களைப் போன்ற வெண்மையான தாமரை மலர்களுக்கு இடையிலிருந்த சிறிய
இடைவெளி வழியாக, வெகு கீழே விரிந்திருந்த நரகத்தின் ஆழத்தை நோக்கி அதை இறக்கினார்.
எங்கும் அடர்ந்த இருள் சூழ்ந்திருந்தது. அந்த இருளை அவ்வப்போது
கிழித்துக்கொண்டு மேலெழுவது போலத் தெரிந்தது ஹரி-நோ-யாமா என்ற ஊசி மலையின்
கூர்மையான முனைகள். அவை மின்னும் ஒவ்வொரு கணமும் நரகத்தின் அச்சத்தை இன்னும் ஆழமாக
உணர்த்தின.
அந்த இரத்தக் குளத்தில் எண்ணற்ற சித்திரவதைகளை அனுபவித்துப் பாவிகள்
முற்றிலும் சோர்ந்துபோயிருந்தனர். உரக்கக் கதறுவதற்குக்கூட அவர்களுக்கு வலிமை
எஞ்சியிருக்கவில்லை. அந்தக் கொடூரமான அமைதியை உடைத்தது, அவ்வப்போது அவர்களிடமிருந்து எழுந்த மெல்லிய பெருமூச்சுகள் மட்டுமே.
அவர்களிடையே
கண்டதாவும் தன் துன்பத்தைச் சுமந்தபடி அலைந்துகொண்டிருந்தான். முடிவே இல்லாத
வேதனையும் இருளும் சூழ்ந்த அந்த நரகத்தில், ஒரு சிறு நம்பிக்கைக்குக் கூட இடமில்லை என்று
எண்ணியவனாய் தலைகுனிந்து நின்றான்.
ஒருகாலத்தில்
கொடூரமான கொள்ளைக்காரனாக வாழ்ந்திருந்தாலும், அந்த இரத்தப்
பொய்கையில் துடித்துக்கொண்டிருந்த கண்டதாவால், சாகும்
தருவாயிலுள்ள ஒரு தவளையைப் போல வேதனையில் புரள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய
முடியவில்லை.
அப்படியிருக்க, ஒரு நாள் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது. தற்செயலாகத்
தலையை உயர்த்தி இரத்தப் பொய்கைக்கு மேலிருந்த வானத்தை நோக்கிப் பார்த்தபோது,
மிக உயர்ந்த சொர்க்கத்திலிருந்து ஒரு மெல்லிய வெள்ளிச் சிலந்தி நூல்
தன்னை நோக்கி இறங்கி வருவதைக் கண்டான். மனிதர்களின் பார்வைக்கே அஞ்சுவது போல,
அந்த ஆழ்ந்த இருளில் அது மெதுவாக மின்னிக்கொண்டிருந்தது.
அந்தக் காட்சியைக் கண்டதும், அவன் இதயம் நம்பிக்கையில் துள்ளியது. உடனே, “இந்த நூலைப் பற்றிக்கொண்டு மேலே ஏறிவிட்டால், நிச்சயமாக
நரகத்திலிருந்து தப்பித்துவிடலாம்,” என்று எண்ணினான்.
அதிர்ஷ்டம் துணைநின்றால், சொர்க்கத்தையே அடையவும் முடியும். அப்படியானால் இனி
ஹரி-நோ-யாமாவின் ஊசி மலையில் ஏற வேண்டியதுமில்லை; இரத்தப்
பொய்கையில் மீண்டும் மீண்டும் மூழ்கி வேதனைப்பட வேண்டியதுமில்லை.
இந்த
எண்ணம் தோன்றிய அடுத்த கணமே, கண்டதா இரு கைகளாலும் சிலந்தி நூலை இறுகப்
பற்றிக்கொண்டு, தன் முழுப் பலத்தையும் திரட்டி மேலே ஏறத்
தொடங்கினான்.
ஒருகாலத்தில் புகழ்பெற்ற கொள்ளைக்காரனாக இருந்த கண்டதாவுக்கு, கயிறுகளிலும் பாறைகளிலும் ஏறி இறங்குவது புதிதல்ல. எனவே, சிலந்தி நூலை இரு கைகளாலும் இறுகப் பற்றிக்கொண்டு, குரங்கைப்
போல வேகமாக மேலேறத் தொடங்கினான்.
ஆனால், நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் இடையே எண்ணற்ற மைல்கள் இடைவெளி இருந்தது.
எவ்வளவு முயன்றாலும், அந்தப் பயணம் எளிதானதாக இருக்கவில்லை.
சிறிது தூரம் ஏறியவுடன் அவன் மூச்சு முட்டி, உடல் முழுவதும்
சோர்ந்து போனது. இனி ஒரு அங்குலம்கூட மேலேற முடியாத நிலை ஏற்பட்டது.
வேறு வழியின்றி, சிலந்தி நூலில் தொங்கியபடியே சிறிது நேரம்
ஓய்வெடுத்தான். பிறகு, மெதுவாகக் கீழே குனிந்து பார்த்தான்.
தன் முழுப் பலத்தையும் திரட்டிப் பல தூரம் ஏறியிருந்ததால், சற்று முன்பு துடித்துக்கொண்டிருந்த இரத்தப் பொய்கை இப்போது இருளின்
ஆழத்தில் ஒரு சிறிய புள்ளியைப் போல மறைந்திருந்தது. அச்சமூட்டிய ஹரி-நோ-யாமா என்ற
ஊசி மலையும் அவனுக்குக் கீழே மங்கலாகத் தெரிந்தது.
அதைக் கண்டதும் அவன் மனம் நம்பிக்கையால் நிரம்பியது.
“இதே
வேகத்தில் தொடர்ந்து ஏறினால், நரகத்திலிருந்து தப்பிப்பது
இனி வெகுதூரத்தில் இல்லை,” என்று தனக்குள்
நினைத்துக்கொண்டான்.
சிலந்தி நூலை இறுகப் பற்றிக்கொண்டு மேலேறிக்கொண்டிருந்த கண்டதா, தன்னையும் அறியாமல் சிரித்தான். நரகத்தில் விழுந்த நாளிலிருந்து
ஒருமுறைகூட எழாத குரலில்,
“வெற்றி! வெற்றி!” என்று உரக்கக் கத்தினான்.
ஆனால், அடுத்த கணமே அவன் முகம் வெளிறிப்போனது.
தனக்குக் கீழே, அதே சிலந்தி நூலைப் பற்றிக்கொண்டு எண்ணற்ற பாவிகள்
எறும்புக் கூட்டம்போல் வரிசை வரிசையாக மேலே ஏறிவருவதை அவன் கண்டான்.
ஒரு கணம் அவன் அப்படியே உறைந்து நின்றான். ஆச்சரியமும் அச்சமும் கலந்த
அந்தத் தருணத்தில், அவன் வாய் தன்னையும் அறியாமல் திறந்தபடியே இருந்தது.
தான் ஒருவன் ஏறுவதற்கே அறுந்துவிடுமோ என்று தோன்றிய அந்த மெல்லிய
சிலந்தி நூல், இத்தனை பேரின் எடையை எப்படித் தாங்கும்?
பாதியிலேயே அது அறுந்துவிட்டால், இவ்வளவு கஷ்டப்பட்டு இத்தனை தூரம் ஏறிவந்த தானும்
மீண்டும் தலைகுப்புற நரகத்திற்குள் விழுந்துவிட வேண்டியதுதானே! அந்த எண்ணமே அவன்
உடலை நடுங்கச் செய்தது.
இதற்கிடையில், இரத்தப் பொய்கையிலிருந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாவிகள் நெளிந்தபடி வெளியேறி, அந்த
ஒற்றைச் சிலந்தி நூலில் ஒருவருக்குப் பின் ஒருவராக மேலேறிக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவரும் தங்கள் முழுப் பலத்தையும் திரட்டிப் பிடித்துக்கொண்டு ஏறினர்.
“இப்படி எல்லோரும் ஏறிக்கொண்டே வந்தால்...”
என்று கண்டதாவின் மனம் பதறியது.
“இந்த
நூல் நிச்சயம் அறுந்துவிடும்!”
அந்த எண்ணம் தோன்றியவுடனே, கண்டதா உரத்த குரலில் கத்தினான்.
“ஏய், பாவிகளே! இந்தச் சிலந்தி நூல் என்னுடையது.
இதில் ஏற உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? கீழே
இறங்குங்கள்! உடனே கீழே இறங்குங்கள்!”
அந்த வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெளிவந்த அடுத்த கணமே, அதுவரை அறுந்துவிடும் அறிகுறியே இல்லாமல் இருந்த அந்த மெல்லிய சிலந்தி
நூல், கண்டதா தொங்கிக்கொண்டிருந்த இடத்தில் சடக்
என்ற ஒலியுடன் திடீரென அறுந்தது.
என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள், அவன் தலைகுப்புறக் கீழே
பாய்ந்தான். பம்பரம்போல் சுழன்றபடியே இருளின் ஆழத்தில் விழுந்து, இறுதியில் இரத்தப் பொய்கைக்குள் கல்லைப் போல மூழ்கிப்போனான்.
மீண்டும் நிலவுமில்லாத, நட்சத்திரங்களுமில்லாத அந்த இருளின் மேல், சொர்க்கத்திலிருந்து இறங்கியிருந்த மெல்லிய வெள்ளிச் சிலந்தி நூலின் சிறு
பகுதி மட்டும் அமைதியாகத் தொங்கிக்கொண்டிருந்தது.
சொர்க்கத்தின் தாமரைக் குளத்தின் கரையில் நின்றிருந்த புத்தர், நடந்த அனைத்தையும் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தார். கண்டதா மீண்டும்
இரத்தப் பொய்கையின் ஆழத்தில் மறைந்ததைப் பார்த்ததும், அவரது
முகத்தில் மெல்லிய சோகம் படர்ந்தது. பின்னர் அவர் மீண்டும் அமைதியாக நடக்கத்
தொடங்கினார்.
நரகத்திலிருந்து தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நினைத்த சுயநலத்தால், தன் மீட்சிக்கான வாய்ப்பையே இழந்து மீண்டும் நரகத்தில் விழுந்த கண்டதாவைப்
பார்த்தபோது, புத்தரின் இதயத்தில் ஆழ்ந்த பரிதாபம்
எழுந்திருக்க வேண்டும்.
ஆனால் சொர்க்கத்தின் தாமரைகள் இவற்றைப் பற்றிச் சிறிதும்
கவலைப்படவில்லை.
முத்துகளைப் போன்ற வெண்மையான மலர்கள் புத்தரின் பாதங்களைச் சுற்றி
மெதுவாக அசைந்தன. அவை அசைந்த ஒவ்வொரு முறையும், அவற்றின் பொன்னிற
மகரந்தத்திலிருந்து எழுந்த இனிய நறுமணம் காற்று முழுவதும் அமைதியாகப் பரவியது.
சொர்க்கத்தில் நண்பகல் நேரம்
எழுத்தாளர்
அகுடகாவா ரியூனோசுகே (1892–1927) ஜப்பானின் தலைசிறந்த நவீன சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். மனித மனத்தின் சிக்கல்களையும் புத்தமதச் சிந்தனைகளையும் நுட்பமாகப் பிரதிபலிக்கும் அவரது படைப்புகள் உலக இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன.
அவரது
நினைவாக ஜப்பானின் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான “அகுடகாவா பரிசு”
ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.




No comments:
Post a Comment