கக்கூஸ்’ - நம் முகத்தில் அறையும் ஆவணப்படம்


கக்கூஸ்’ என்று பெயர் மூலமாகவே நம் முகத்தில் அறைகிறது இந்த 115 நிமிட ஆவணப்பட ஆக்கம். நரகத்தையொத்த வாழ்க்கையைத் தலைமுறை தலைமுறையாக அனுபவிக்க நேர்ந்த ரத்தமும் சதையுமான நிஜ மனிதர்கள். அவர்கள் மீது வெறும் அனுதாபத்தை மட்டுமே எழுப்பிவிட்டு இருதுளி கண்ணீரைத் சிந்திச் செல்வது மட்டுமல்ல இது தரும் அனுபவம்.
நமது சுத்தம் மற்றும் சுகாதார வாழ்க்கைக்காக, சாதியின் பெயரால் ஒரு மனிதக் கூட்டத்தின் வாழ்க்கையையே நரகமாக்கிவிட்டு, கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கும் நமது கள்ளத்தனத்தைச் சீண்டும் ஆவணப் படைப்பு இது.

கழிவு மனப்பான்மை
தொழில்மயமாதல், நகரமயமாதல், நவீனமயமாதல், உலகமயமாதல், தனியார்மயமாதல் எல்லாவற்றையும் மானுடம் கடந்துகொண்டிருக்கிறது. தோட்டி என்று தொடங்கி தூய்மைப் பணியாளர்கள் என்பதுவரை அவர்களின் தொழிற்பெயர்களும் காலத்திற்கேற்ப மேலும் மேலும் நாகரிகமடைந்து வருகின்றன. மனிதக் கழிவை மனிதர்கள் அள்ளுவதற்குச் சட்டத்தின் அடிப்படையில் தடையும் உள்ளது. ஆனால் இன்னும் அரசாலும் தனியார் நிறுவனங்களாலும் எந்தப் பாதுகாப்புமற்று மனிதக் கழிவை அள்ள மனிதர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
பாதாளச் சாக்கடைகளில் மூச்சு முட்டி, விஷவாயு தாக்கி இறந்துபோகிறார்கள். பகல் வெளிச்சத்தில் எல்லாம் சுத்தமாகவும் நீதியாகவும் நடந்துகொண்டிருப்பது போன்ற தோற்றத்தில் நகரங்கள் இருக்கின்றன. ஆனால் நள்ளிரவுகளிலும் அதிகாலையிலும் ஒதுக்குப்புறங்களிலும் நாம் கழித்த கழிவுகள் ஒரு சமூகத்தின் வாழ்க்கையை நரகமாக்கியிருப்பதை அடுக்கடுக்காக விவரிக்கிறது இந்தப் படம்.

சோப்புக்குக்கூட வக்கில்லையா?

“ பாதாளச் சாக்கடைக்குள் இறங்கும் ஒரு தொழிலாளிக்குப் பாதுகாப்பு உபகரணங்கள், தளவாடங்கள் என்று 40-க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்று ஏட்டில் இருக்கிறது. ஆனால் இன்னமும் இந்தியாவில் பாதாளச் சாக்கடையில் இறங்குபவன் வெறும் உள்ளாடையுடன்தான் இறங்குகிறான்” என்கிறார் திவ்ய பாரதி. ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தில் வரும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் சொல்கிறார். “துப்புரவுப் பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் கையுறைகளை ஒரு மணிநேரத்துக்கு மேல் போட்டிருந்தால் கை அரிக்கத் தொடங்கிவிடுகிறது.
எங்களுக்குத் தீயணைக்கும் படையினர் அணியும் ஷூக்களைக் கொடுக்கிறார்கள். அதை நாங்கள் போட்டு சாக்கடையில் இறங்கினால் அத்தனை தண்ணீரும் உடனடியாக ஷூக்களுக்குள் இறங்கிவிடும்” என்கிறார்.
துப்புரவுப் பணியாளர்களுக்கும், பாதாளச் சாக்கடையில் இறங்குபவர்களுக்கும் 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பது இருக்கட்டும். முன்பு தமிழக அரசு கொடுத்து வந்த சோப்பைக்கூடக் கடந்த 15 வருடமாக வழங்கவில்லை என்கிறது இந்த ஆவணப்படம்.

    


பெண்களே பலியாடுகள்
துப்புரவுப் பணிக்கும் காலம் காலமாகத் தொடரும் சமூக இழிவுக்கும் இடையிலான தொடர்பு, மிருகங்கள் முதல் மனிதர்களின் சடலங்கள் வரை அகற்ற வேண்டிய வேலை நிலை தொடங்கி ஒப்பந்தக் கூலிகள் என்ற பெயரில் அடிப்படை வேலைப் பாதுகாப்பைத் தருவதில் அரசும் தனியாரிடம் கைவிட்ட நிலை வரை இந்த ஆவணப்படம் விசாரிக்கிறது. பேருந்து நிலையக் கழிப்பறைகள் தொடங்கி நவீன கழிப்பறைகள் இருக்கும் நிலையும் அதில் பணிபுரியும் ஆண்கள், பெண்களின் நிலையையும் காமிரா தொடர்ந்து காண்பிக்கும்போது நமக்கு ஒரு பகுதி மரத்துப் போகிறது. ‘நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய். அவர்கள் அங்கே வாழ்கிறார்கள்’ என ஒவ்வொரு காட்சியும் நமது நீதியுணர்வைக் கலங்கடிக்கிறது.
துப்புரவுப் பணி நாடு முழுவதும் பெண்மயமாகிவரும் அவல நிலையையும் சொல்கிறது இந்த ஆவணப்படம். தற்போது இந்தியாவெங்கும் உள்ள மாநகராட்சிகளில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். மலம் மற்றும் சாக்கடை அள்ளும் பெண் தொழிலாளர்கள் பலரது கருப்பைகள் சீக்கிரமே அழுகிவிடுவதாக நம்மிடம் சிரித்துக்கொண்டே பகிர்ந்துகொள்கின்றனர். கண்ணாடி, உலோகப் பொருட்கள் கீறிய காய்த்துப்போன கைகளைக் காண்பிக்கின்றனர்.

 திவ்யா பாரதி
உயிர்போனாலும் உதவியில்லை
அரசுத் துப்புரவுப் பணியாளர்களின் வருகைப் பதிவை மேற்பார்வையாளர்களே பராமரிக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில் ஒரு துப்புரவுத் தொழிலாளி, பாதாளச் சாக்கடை சுத்தம் செய்வது போன்ற அபாயகரமான பணிகளில் ஈடுபட்டு இறந்துபோனால், அதைத் தவறி விழுந்த விபத்தாக மாற்றி, நஷ்ட ஈட்டுக்குப் பொறுப்பேற்காத தந்திர நடைமுறைகளும் இங்குள்ளன.
பணி நியமனம் தொடங்கி இறப்பிற்கான இழப்பீடு வரை பல்வேறு வகைகளிலும் அவர்களது வாழ்க்கையை ஊழலும் சுரண்டுவதாக உள்ளது.
2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையில் உள்ள இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடையில் விஷவாயு தாக்கி இறந்து போன நிலையில் அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடு கிடைப்பதற்காகப் போராடியதன் மூலம் வழக்கறிஞர் திவ்ய பாரதி இந்த ஆவணப் படத்துக்கான உந்துதலைப் பெற்றிருக்கிறார்.

ஹவுஸ் கீப்பிங் எனும் புதிய பெயர்
படிப்பும் இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களும் இருந்தாலும் துப்புரவுப் பணியாளர்களின் பெரும்பாலான குழந்தைகள் அத்தொழிலையே தொடர நேரும் சூழ்நிலைகளும் இப்படத்தில் விளக்கப்படுகின்றன. பட்டப்படிப்பு படித்து வேலை கோரிச் செல்லும் இளைஞர்களிடமும் ‘ஹவுஸ் கீப்பிங்’ என்ற நாகரிகமான பெயரில் வேலை செய்யச் சொல்லும் நிலைமை உள்ளது என்கிறார் சஃபாய் கர்மசாரி அந்தோலன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான பெஜவாடா வில்சன்.
முதல் உலக நாடுகள் அனைத்திலும் துப்புரவுத் தொழில் கிட்டத்தட்ட முற்றிலும் இயந்திரமயமாகிவிட்டது. இந்தியாவிலும் ஐஐடி போன்ற நிறுவனங்கள் பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்குவதற்கான எந்திரங்களைக் கண்டுபிடித்தும் அந்த எந்திரங்களைத் தொடர்ந்து வரும் அரசுகள் பரிசீலனைகூடச் செய்யாத சூழ்நிலை இருக்கிறது.
“எம்.ஜி.ஆர். காலத்தில் நான் இந்த வேலையைச் செய்யத் தொடங்கினேன். அன்னைலருந்து போற இடமெல்லாம் எனக்கு கக்கூஸ்னு தலைவிதி ஆகிடிச்சு” என்கிறார் முரண்நகையுடன் ஒரு பெண்மணி.
அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது சாதி. நாமும் அவர்களை விளிம்புக்கும் விளிம்பை நோக்கித் துரத்திக்கொண்டிருக்கிறோம். மதுரைப் போராட்டத்தில் திவ்யா பாடும் பாடல் காட்சி படத்தின் இறுதியில் வருகிறது. ‘ஆளு மட்டும் நீங்களா… செத்த மாடு மட்டும் நாங்களா…’ அந்தக் குரல் நமது நீதியுணர்ச்சியின் மீது சாட்டையடியாக விழுகிறது.

நன்றி தி இந்து தமிழ்
தொகுப்பு -செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

தம்பி... இதைக்குறித்து எப்போதோ பொங்கல் பொங்கி விட்டது...
Yarlpavanan said…
விழிப்புணர்வு மலரட்டும்
Kasthuri Rengan said…
வெகு அவசியமான பதிவு படம் எப்போ வரும் என்று தெரியவில்லை
  • 5300 ஆண்டுகளுக்கு முந்தைய பனிமனிதன் பேசிய மொழி தமிழ்
    13.10.2016 - 2 Comments
    5300 ஆண்டுகளுக்கு முந்தைய பனிமனிதன் பேசிய மொழி தமிழ் என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆடியோவால் பரபரப்பு…
  • எட்டையபுரத்து ஏகலைவன்
    11.09.2011 - 1 Comments
    சமீபத்தில் நகரின் மூலை முடுக்குகளிலும்..ஓர் சுவரொட்டி..u and me என்ற adult only திரைப்பட…
  • கக்கூஸ்’  - நம் முகத்தில் அறையும்  ஆவணப்படம்
    10.03.2017 - 3 Comments
    கக்கூஸ்’ என்று பெயர் மூலமாகவே நம் முகத்தில் அறைகிறது இந்த 115 நிமிட ஆவணப்பட ஆக்கம். நரகத்தையொத்த…
  • அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள்
    20.09.2011 - 4 Comments
    மனிதர்களின் பழக்கவழக்கங்கள¤ல் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்கள், நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, இயற்கைக்கு…
  • பாண்ட்...ஜேம்ஸ்பாண்ட்!
    23.01.2012 - 0 Comments
     உலகம் அழியப்போகிறது!  பூமிக்கு நேர் மேலே, விண்ணில் மிதந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளை தன்…