பாண்ட்...ஜேம்ஸ்பாண்ட்!


 உலகம் அழியப்போகிறது!
 பூமிக்கு நேர் மேலே, விண்ணில் மிதந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளை தன் வசப்படுத்தி விட்டான் வில்லன். அங்கிருந்து அழிவுக்கதிர்களை வீசி, பூமிக் கிரகத்தை அழித்து நாசம் பண்ணத் திட்டமிட்டு விட்டான். (அணுகுண்டுகள் வீசி துவம்சம் பண்ணிய வல்லரசுகள் உட்பட) உலக நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கின்றன.
 வக்கிர மனம் கொண்ட வில்லனை வீழ்த்தி, பூமியை இனி யாரால் காப்பாற்றமுடியும்?
 இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது.
 அது...,
 ‘ஜேம்ஸ்பாண்ட்!’
 ஆம். அவர் களமிறங்கி விட்டால், என்ன சாகசம் செய்தாவது, மிகக் கடைசி வினாடியில் பூமியைக் காப்பாற்றி விடுவார்... நிச்சயமாய்!
 உலகமெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களின் நிஜ ஹீரோ என்றால், நிச்சயமாக அது ஜேம்ஸ்பாண்ட் மட்டுமே.
எவ்வளவு பெரிய இடர் வந்தாலும், முகத்தில் கொஞ்சம் கூட அலுப்புக் காட்டாமல், கழுத்து ‘டை’ கூட கசங்காமல், கனக்கச்சிதமாக காரியத்தை செய்து முடிப்பதில் ஜேம்ஸ்பாண்டிற்கு நிகர்... வேறு யாருமில்லை; அவரேதான். ஜேம்ஸ்பாண்ட் சினிமா வெளியாகும் தினத்தைக் கொண்டாட உலகமே ஆவலாகக் காத்திருக்கும்.
 பெரும்பாலும் ஓரிரு ஆண்டு இடைவெளிக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளித் திரைகளில் பாண்ட் சாகசம் காட்டுவார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, ஜேம்ஸ்பாண்ட் சாகசம் செய்யும் ‘ஸ்கை ஃபால்’ சினிமா 2012ம் ஆண்டு வெளியாகிறது. அதற்கு முன்பாக..

 ‘007’ பற்றி சுருக்க்க்க்க்கமாய்...!

  பிரிட்டீஷ் எழுத்தாளர் இயன் ஃப்ளமிங் கற்பனையில் உதித்த கதாபாத்திரம்தான் ஜேம்ஸ்பாண்ட். 1952ல் ஃப்ளமிங், தனது நாவலில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தினார். பாண்ட் பட்டையைக் கிளப்பப் போகிறார் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து தனது துப்பறியும் நாவல்கள், சிறுகதைகளில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தை அவர் பயன்படுத்த... உலகமெங்கிலும் உள்ள வாசகர்களின் மனதில் சின்னதாய் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்தார் பாண்ட்.

ஃப்ளமிங் 1964ல் மறைந்தப் பிறகும், பாண்ட் பாத்திரம் உயிர்ப்புடன் நிலைத்து நின்றது. ஜேம்ஸ்பாண்ட் கதைகள் என்றால், என்ன விலை கொடுத்தும் படிக்க உலகம் தயாராய் இருப்பதை அப்போதைய எழுத்தாளர்கள் புரிந்து கொண்டனர். கிங்ஸ்லீ அமிஸ், ஜான் பியர்ஸன், ஜான் கார்ட்னர், ரெய்மன்ட் பென்ஸன், சார்லி ஹிக்ஸன் என நிறைய எழுத்தாளர்கள் ஜேம்ஸ்பாண்டை தத்தெடுத்துக் கொண்டனர்.
 ஜேம்ஸ்பாண்ட் கதைகளுக்கான வரவேற்பு உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே செல்ல... அந்தக் கதாபாத்திரத்துக்கு உருவம் கொடுத்துப் பார்க்கும் முயற்சி துவங்கியது. இயன் ஃப்ளமிங் நாவலைத் தழுவி, 1962ம் ஆண்டு முதல் ஜேம்ஸ்பாண்ட் சினிமா ‘டாக்டர் நோ’ வெளியானது. ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்த சீன் கானரி, அந்தப் பாத்திரத்துக்கு கனக்கச்சிதமாகப் பொருந்தினார். ‘டாக்டர் நோ’ வசூலை வாரிக் குவித்தது.

 1962ம் ஆண்டில், 10 லட்சம் (அமெரிக்க) டாலர் பட்ஜெட்டில் தயாரான ‘டாக்டர் நோ’, 5 கோடியே 96 லட்சம் டாலர்களை வாரிக்குவித்தது (அமெரிக்காவில் மட்டும் ஒரு கோடியே 61 லட்சம் டாலர் வசூல்!). உலக சினிமா ரசிகர்கள் மனதில் அப்போது தடம் பதித்த ஜேம்ஸ்பாண்ட் இந்த வினாடி வரை நாட்-அவுட்டாக தூள் கிளப்புகிறார். 1962 துவங்கி, 2002 வரை 20 ஜேம்ஸ்பாண்ட் சினிமாக்கள் வெளியாகி வசூல் குவித்திருக்கின்றன. நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, 21 வது பாண்ட் சினிமாவாக ‘கேஸினோ ராயல்’ வெளியாகியிருக்கிறது.
 மற்ற சினிமாக்களுக்கும், ஜேம்ஸ்பாண்ட் சினிமாவுக்கும் மிக நிறைய வித்தியாசம் இருக்கிறது. ‘அர்னால்ட் ஸ்வார்ஸ்னெகர், சில்வஸ்டர் ஸ்டாலன், புரூஸ் லீ, ஜாக்கிசான்...’ என, மற்ற சினிமாக்களில், நடிகர்கள் ஆராதிக்கப்படுவார்கள். பாண்ட் சினிமாக்கள் அப்படி அல்ல. இங்கு ஜேம்ஸ்பாண்ட் மட்டுமே ஹீரோ; அந்தப் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அல்ல! ஜேம்ஸ்பாண்ட் படம் என்றுதான் பேசுவார்களே தவிர, அந்த பாத்திரத்தில் நடித்த நடிகரின் பெயரை அல்ல!
 ஜேம்ஸ்பாண்ட் பாத்திரம் ஏற்று நடிக்கும் வரை, சம்பந்தப்பட்ட நடிகர் பற்றி வெளியுலகத்திற்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது. பாண்ட் ‘கோட்’ மாட்டியதும், ஒரே நாளில் அவர் புகழ் எங்கேயோ போய் விடும். பாண்ட் வேடத்தில் நடிக்கும் ஒப்பந்தம் முடிந்து விட்டதென்றால்... முடிந்தது. அவ்வளவு காலம் அவர் தலையில் இருந்த கிரீடம், புதிய ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்குச் சென்று விடும்.
 ‘டாக்டர் நோ’ துவங்கி, 2002ல் வெளியான ‘டை அனதர் டே’ வரையிலான 20 படங்களில் ஐந்து பேர் (சீன் கானரி, ஜார்ஜ் லாஸன்பை, ரோஜர் மூர், டிமோத்தி டால்டன், பியர்ஸ் பிரஸ்னன்) ஜேம்ஸ்பாண்ட் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். முதல் ஜேம்ஸ்பாண்ட் சீன் கானரி, ரோஜர் மூர், பியர்ஸ் பிரஸ்னன் ஆகியோர் பாண்ட் வேடத்துக்கு வெகு துல்லியமாகப் பொருந்தினர். 2006ல் வெளியான ‘கேஸினோ ராயல்’ படத்தில், பிரிட்டீஷ் நடிகரான டேனியல் கிரெய்க் புதிய பாண்ட் வேடமேற்றார். இன்று வரை அவர் தொடர்கிறார்.


ஜேம்ஸ்பாண்ட் சினிமாக்களுக்கு என்று சில சம்பிரதாயங்கள் உண்டு. ஜேம்ஸ்பாண்ட் என்றால்... கருப்பு கோட், டை அணிந்து, படு கம்பீரமாக, முகத்தில் கொஞ்சம் கூட உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், கழுத்துக்கு நேராய் கத்தி இருக்கும் வினாடியில் கூட, முகத்தில் புன்னகை மாறாமல் ‘ரவுண்டு’ கட்டும் அந்த ஸ்டைலுக்கு மயங்காத ரசிகர்கள் இருக்கமுடியாது. பாண்ட் சினிமாக்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் அபாரமானவை. அவர் பயன்படுத்தும் கார் முதற்கொண்டு, கையில் கட்டியிருக்கும் கடிகாரம் வரை... சகலமும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
 ‘டாக்டர் நோ’ துவங்கி, இன்றுவரை ஜேம்ஸ்பாண்ட் சினிமாக்களின் துவக்கம் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருக்கும். சினிமா துவங்கிய வினாடியில், கருப்பு கோட் சகிதம் கம்பீரமாய் நடந்து வரும் பாண்ட், சட்டென ஒரு எதிர்பாராத வினாடியில் நம் பக்கம் திரும்பி துப்பாக்கியால் சுட... ரத்தம் திரையின் மீது பரவும். அந்த வினாடியில் பற்றிக் கொள்ளும் பரபரப்பு, படம் முடியும் வரை கொஞ்சம் கூடக் குறையாமல் ஓடும்.
 அது முடிந்ததும் ஜேம்ஸ்பாண்ட் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக, கற்பனைக்கும் எட்டாத சூப்பர் சாகசம் ஒன்று முதல் காட்சியாக கட்டாயம் இடம்பெறும். பெரும்பாலும் ஏழு முதல் பத்து நிமிடங்கள் இந்த சாகசக் காட்சி நீடிக்கும் (‘தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப்’ சினிமாவில் அதிகப்பட்சமாக 15 நிமிடங்கள் பாண்ட் சாகசம் இடம் பிடித்தது). டிக்கெட் எடுத்து உள்ளே வந்தவர்கள், மிரட்சியடைந்து போகும் இந்த பிரமாண்ட பாண்ட் சாகசத்துக்குப் பிறகே ‘டைட்டில் கார்ட்’ காட்டப்படும். படத்தின் கருவை மையப்படுத்தி, மிக வித்தியாசமாக டைட்டில் காட்சி டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

 ‘டாக்டர் நோ’ துவங்கி இன்றுவரை, ‘பாண்ட்... ஜேம்ஸ்பாண்ட்’ என்று படு ஸ்டைலாக தன்னை ஜேம்ஸ்பாண்ட் அறிமுகப்படுத்திக் கொண்டு களமிறங்குவார். உலக சினிமா சரித்திரத்தில் மிகப் பிரபலமான உச்சரிப்புகளில் ‘பாண்ட்... ஜேம்ஸ்பாண்ட்’ வசனமும் ஒன்று, என அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட் தேர்வு செய்து கவுரவித்திருக்கிறது. படம் துவங்கிய வினாடி முதல், கடைசி ரீல் வரை, கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், அழகுப் பெண்களுடன் ஜாலியும், அதேசமயம்... சாகசமும் செய்வது ஜேம்ஸ்பாண்டிற்கு மட்டுமே கை வந்த கலை!
 சினிமா முடியும் போது, நம்மவர்கள் போல ‘வணக்கம்’ என்றோ, ‘தி எண்ட்’ என்று ‘கார்டு’ காட்டி முடிப்பதில்லை. மாறாக, ‘ஜேம்ஸ்பாண்ட் வில் ரிடர்ன்’ அல்லது, ‘ஜேம்ஸ்பாண்ட் வில் பி பேக்’ என்று காட்டுவார்கள். 1983ல் வெளியான ஆக்டோபஸி சினிமாவுக்கு முன்பு வரை, ‘ஜேம்ஸ்பாண்ட் வில் ரிடர்ன் இன்....’ என்று போட்டு, அடுத்து வெளியாக உள்ள பாண்ட் சினிமா டைட்டிலை அறிவித்து விடும் பழக்கம் இருந்தது.
 இந்த நடைமுறையில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. மூன்று முறை தவறுகளும் நடந்து விட்டன. முதலாவதாக, 1964ல் வெளியான ‘கோல்ட் ஃபிங்கர்’ சினிமாவின் கடைசி காட்சியில், ‘ஜேம்ஸ்பாண்ட் வில் ரிடர்ன் இன்...- ஆன் ஹெர் மெஜஸ்டீஸ் சீக்ரெட் சர்வீஸ்’ என அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்தனர். அறிவித்த சில நாட்களில் தயாரிப்பாளர்கள் மனம் மாறிவிட்டது. அடுத்தடுத்த பிரிண்ட்களில் அந்த டைட்டில் அறிவிப்பை நீக்கிவிட்டனர். ‘கோல்ட் ஃபிங்கர்’ படத்துக்குப் பிறகு ‘தண்டர்பால், யூ ஒன்லி லிவ் ட்வைஸ்’ ஆகிய சினிமாக்கள் வெளியாகின. அதற்குப் பிறகே, ‘ஆன் ஹெர் மெஜஸ்டீஸ் சீக்ரெட் சர்வீஸ்’ வெளியானது.
 ‘தி ஸ்பை ஹு லவ்ட் மீ (1977)’ படத்தின் முடிவில் ‘ஜேம்ஸ்பாண்ட் வில் ரிடர்ன் இன்... ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி’ என டைட்டில் அறிவித்தனர். ஆனால், அந்தக்காலத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்டார் வார்ஸ்’ மாயையை தகர்க்கும் நோக்கில், தயாரிப்பாளர்கள் அடுத்ததாக ‘மூன்ரேக்கர்’ என்ற பாண்ட் சினிமாவை தயாரித்தனர். இதை விட பெரிய தவறு, ‘ஆக்டோபஸி (1983)’ படத்தில் நடந்தது. இந்தப் படத்தின் முடிவில், அடுத்த பாண்ட் சினிமா டைட்டில் ‘ஃப்ரம் எ வியூ டூ எ கில்’ எனத் தவறுதலாகக் காட்டப்பட்டது.
 நிஜத்தில் அந்த நாவலின் பெயர் ‘எ வியூ டூ எ கில்’. தவறு தெரிந்ததும், தலையில் அடித்துக் கொண்டு திருத்தப்பார்த்தார்கள். அதற்குள் படம் பிரிண்ட் போட்டு தியேட்டருக்குப் போய் விட்டது. இதெதுக்கு வம்பு என்று, அடுத்த சினிமாவின் பெயரை அறிவிக்கும் பழக்கத்தை அத்தோடு நிறுத்தி விட்டார்கள்.
2006ல் ‘கேஸினோ ராயல்’ 2008ல் ‘குவாண்டம் ஆஃப் சொலெஸ்’ படங்களுக்கு அப்புறம், நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, 2012ல்... வெளியாகிறது ‘ஸ்கை ஃபால்’... 23வது ஜேம்ஸ் பாண்ட் படம். டேனியல் கிரெய்க் தான் இதிலும் பாண்ட்.
மீண்டும் ஒரு பாண்ட் சாகசத்தைக் காண உலகம் காத்திருக்கிறது!

திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்


அமெரிக்கவின் பயமே ஜேம்ஸ்பாண்ட் வில்லன்கள்...

அமெரிக்காவை எந்த நாடுகள் பகைத்து கொள்கின்றனவோ அந்த நாடுகளிலிருந்தே ஜேம்ஸ்பாண்டின் வில்லன் உருவாக்கப்படுவார். முதலில் ரஸ்யா, கியூபா, ஈராக் என தன் வில்லன்களின் பட்டியலை தன் எதிரிநாடுகளிலேயே இனம் கண்டது அடுத்த வில்லன் பாகிஸ்தானிலிருந்து கூட வரலாம்.மேலும் அமெரிக்காவின் கம்யூனிச பயமே ஜேம்ஸ்பாண்ட படங்களின் மையக்கருத்தாக இருக்கும். ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வில்லன் கதாபாத்திரம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.நாவலாசிரியரான பிளமிங்குக்கும் அமெரிக்க அரசுக்கும் முதலில் எந்த தொடர்பும் இல்லை,முதல் படம் வெற்றி பெற்று அடுத்த படத்திற்கான கதை ரஸ்யாவை மைமாக கொண்டு எழுதப்பட்டது. அதை வாசித்த அன்னைறய அமெரிக்க அதிபர் கென்னடிக்கு அந்த நாவல் மிகப்பிடித்த போனது,என்னென்றால் ரஸ்யாவின் அபரிதமான வளர்ச்சி,மற்றும் கம்யூனிசமும் அமெரிக்காவை பயமுறுத்தின.நாவலாசிரியர் பிளமிங்கை அழைத்து பேசி கென்னடி நாவல்களை படமாக்கும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கனார். அமெரிக்க அரசாங்கத்தின் எதிரிநாடுகளை பிரதான எதிரியாக சித்தரித்து மேலும் நாவல்களை எழுத வேண்டும் என்பதும் அந்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாகும்.அதன் படி பிளமிங்கின் நாவல்களின் படமாக்கும் உரிமைகள் ஹாலிவுட் நிறுவன தயாரிப்பாளர்கள் சிலருக்கு வழங்கப்பட்டன. ஹாலிவுட்டுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இப்படியான ரகசிய உறவுகள் காலம் காலமாக இருந்து வருகின்றன.
     சினிமா என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் மட்டுமல்ல மக்களின் மனங்களில் கருத்துக்களை தினிக்கும் வலிமையான ஊடகம்.

ஜேம்ஸ்பாண்டுக்க வயது 50....

1962ல் முதல்படமான டாக்டர் நோ வெளிவந்தது இந்த ஆண்டு (2012ல்) அடுத்த படமான ஸ்கைபால் 23வது படம்.ஜேம்ஸ்பாண்ட கதாபாத்திரம் தோன்றும் படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை யொட்டி அதன் முதல் கதாநாயகன் சீனகானரியிலிருந்து இன்றைய ஜேம்ஸ்பாண்டான டேனியல்கிரேக் வரை அனைவரும் கலந்து கொள்ளும் விழா ஹாலிவுட் உட்பட பல இடங்களில் நடக்கி இருக்கிறது.
- அ.தமிழ்சசெல்வன்  


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்