கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?

                 

இந்த கேள்வி பல காலமாக கேட்கபடும் கேள்வி தான்.கொரோனா காலத்தில்இப்படி ஒரு கேள்வி தேவையும் கூட.
இந்த கேள்வியை யாரிடம் கேட்பது அரசியல் வாதியிடமா? ஆன்மீகவாதியிடமா?. இல்லை உலகின் தலைசிறந்த விஞ்ஞானியிடமே கேட்கப்பட வேண்டும்.
           இந்த கேள்விக்கு மட்டுமல்ல இது போன்ற மனித மனதை துரத்துகின்ற பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் "ஸ்டிபன்ஹாக்கிங்".
         இந்த பெயரை கேட்டதுமே ... ஒரு தானியங்கி வில் சேர்,ஒடுங்கிப்போன முகம்,குறுகிய கண்கள் என்ற உருவம் தோன்றும். அந்ததோற்றத்தை பார்த்ததும் பரிதாபம் ஏற்படுவதை விட எப்படி முடிகிறது இந்த மனிதரால் என ஆச்சரியமே தோன்றும்.கொரோனா தொற்றுக்கே முடங்கிபோன இந்த உலகத்தில் இவர் ஒரு அதிசயமே.தன் 21 வயதிலிருந்து 76 வயது வரை வில் சேரில் அமர்ந்தபடியே   பிரபஞ்சத்தை சுற்றிவந்தவர்.
             ' BRIEF ANSWERS TO THE BIG QUESTIONS  'என்ற இவரின் ஆங்கில நூல் தமிழில் "ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்"- என்ற தலைப்பில் psv.குமாரசாமியின் மொழிபெயர்பில் "மஞ்சுள் பபிளிஷிங்ஹவுஸ்" வெளியிட்டுள்ளது.
              இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்  பல்கலைகழக தேவாலயமான கிரேட் செயின்ட் மேரி  தேவாலயத்தில் நடைபெற்ற ஹாக்கிங்கின் இறுதி ஊர்வலத்தின் வர்ணிப்போடு துவங்குகிறது இந்நூல்.இந்நூலின் சிறப்புரையில் அவரது மகளான லூசிஹாக்கிங்கின் தனது தந்தையின்  கடைசிகால  திட்டங்களில்ஒன்று இந்நூல் என்கிறார்.அவர் உயிரோடு இருந்தபோது துவங்கி அவரது மறைவுக்கு பின் வெளிவந்த நூல் இது.

           10  ஆழமான கேள்விகளும்   அதற்கு ஸ்டிபன்ஹாக்கிங்கின் அறிவார்ந்த பதில்களும்  உள்ளன.
1.கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?
2. பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?
3.  அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா?
4.வருங்காலத்தை நம்மால் கணிக்க முடியுமா?
5.ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது?
6.காலப்பயணம் சாத்தியம் தானா?
7.வருங்காலத்தில் நாம் இந்த  பூமியில் உயிர்பிழைத்திருப்போமா?
8.விண்வெளியை நாம் காலணிப்படுத்த வேண்டுமா?
9.செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?
10.வருங்காலத்தை நாம் எவ்வாறு வடிவமைப்பது?
              இந்த கேள்விகளில் "ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது?" போன்ற நேரடி அறிவியல்   கேள்விகளை தவிர்த்து ஒரு சாராசரி மனிதனுக்கு முன் உள்ள 4 கேள்விகளுக்கு -ஸ்டிபன்ஹாக்கிங் கின் பதில்களை சுருக்கமாக உங்கள் முன் வைக்கிறேன்.

1.கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?
2.அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா?
3.வருங்காலத்தில் நாம் இந்த  பூமியில் உயிர்பிழைத்திருப்போமா?
4.செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?

கடவுள் மீது எந்தவிதமான 
காழ்புணர்ச்சியும் கிடையாது....
தசாவதாரம் படத்தில் கமல் சொல்வதை போல " கடவுள் இல்லைன்னு எங்க சொன்னேன்... இருந்தா நல்லாயிருக்கும் தானே சொன்னேன் போன்ற சமாளிப்பு ஸ்டிபன்ஹாக்கிங்கின் பதிலில் இல்லை.
           கடவுள் மீது எந்தவிதமான காழ்புணர்ச்சியும் கிடையாது.... நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தை புரிந்து கொள்வதற்கு ஒரு அறிவார்ந்த வழிமுறையை உருவாக்குவதே என் வேலை என்கிறார்.
                             என்னை போல நீங்களும் அறிவியலில் நம்பிக்கை கொண்டுள்ள ஒருவராக இருந்தால் ஒரு சில விதிகள் எப்போதும் கண்டிப்பாக செயல்பட்டு வருகின்றனஎன்பதை நீங்கள் நம்புவீர்கள் . அந்த விதிகள் கடவுளின் கைங்கரியம் என்று கூற நீங்கள் முற்படக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட விவாதம் கடவுளைப் பற்றிய விவரிப்பே அன்றி அவருடைய இருத்தலுக்கான நீருபணம் அல்ல. என்கிறார்.... ஹாக்கிங்..
          சூரியனின் ஈர்ப்பு விசையால் பூமி உள்ளிட்ட கிரகணங்கள்  அதற்கான பாதையில் அதனை சுற்றி வருவது இயற்கை விதி.நம்மை சுற்றி யுள்ள பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள நட்சத்திர கொத்துகள், கேலக்சிகள்,கருந்துளைகள்,வெடிக்கும் நட்சத்திரங்கள் ...இவையெல்லாம் இயங்க விதிகள் செயல்படுகின்றன.இவற்றையெல்லாம் பார்க்கிற போது கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

 வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா....
            நாம் வாழும் சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகம் உள்ளிட்ட எதிலும்  உயிரினங்கள் இல்லை.நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்திலும் "யாரவது துணைக்கி இருக்கீங்களா" என கேட்டு கொண்டே இருக்கிறோம்.இது வரை பதில் இல்லை.
                        பூமிக்கு வெளியே அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? என்ற கேள்விக்கு ....
 முதலில் பூமியில் அறிவார்ந்த உயினங்கள் இருக்கின்றனவா என்பதே கேள்விக்குறிதான். வேடிக்கையை தள்ளிவிட்டு பார்த்தால் வேறு எங்காவது அறிவார்ந்த உயினங்கள் இருக்குமெனில் அவை மிகவும் தொலைவில்  இருக்கவேண்டும். இல்லையெனில் அவை இதற்குள் பூமிக்கு வருகை தந்திருக்கும். அவை பூமிக்கு வந்திருந்தால் அவற்றை நாம் கண்டிப்பாக அறிந்திருப்போம்.இது இன்டிபென்டன்ஸ்டே என்ற ஆங்கில படத்தில் வந்தது போல இருந்திருக்கும்."என்கிறார்.
                  நாம் கூடுதல் வளர்ச்சி அடையும் வரை வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து வரக்கூடிய பதில் களை படிக்காமல் இருப்பது நல்லது என்கிறார் ஹாக்கிங்ஸ் .

வருங்காலத்தில் நாம் இந்த  பூமியில் உயிர்பிழைத்திருப்போமா?
            வருங்காலத்தில் என்ன இப்போது நம் நிலைமை அது தானே. 1 கோடிக்கு அதிகமான  மனிதர்களை தொற்றிக்கொண்டுள்ளது கொரோனா.பலரை உயிர்பலி வாங்கி வருகிறது.இந்த நிலை எப்போது மாறும்.கொரோனா முற்றிலும் எப்போது  முடிவுக்கு வரும், மருந்து  எப்போது கண்டுபிடிக்கப்படும்.இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு கொரோனாவோடு போராட வேண்டும்.வேறு எதேனும் கொடிய வைரஸ் கள் வந்துவிடுமா.. மனித குலத்தின் வருங்காலம் எப்படி இருக்கும்?இது போன்ற கேள்விகள் தற்போதைய சுழ்நிலையில் கேட்கபடுகிறது.
             "அரசியல் ரீதியா நிலைகுலைந்திருக்கும் உலகம்,தீர்க்கமான முடிவெடுக்காத உலக தலைவர்கள்,கொள்ளை லாபத்திற்கா க இயற்கை வளங்களை  அழித்துவரும் பணக்காரர்கள். உலகை பல முறை அழிக்கும் வல்லமை பெற்ற அணுகுண்டுகள் வைத்திருக்கும் வல்லரசுகள்,மனிதர்களின் செயல்பாடுகளால் மாறிவரும் பருவகாலங்கள், இவையே மனிதர்கள் இந்த பூமியை அழிக்கப்போதுமானது "என்கிறார் ஹாக்கிங்ஸ்.
                      பூமிக்கு இருக்கின்ற அச்சுறுத்தலிலேயே மிகபெரியது எது ? என்ற கேள்விக்கு 
                   சிறுகோள் மோதலைத்தான் குறிப்பிடுவேன்.எனெனில் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வழியேயில்லை.கடந்த முறை அப்படி நடைபெற்ற மிகப்பெரிய மோதல் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது.அது அப்போது பூமியில் வாழ்ந்த டைனோசர்களை பூண்டோடு அழித்துவிட்டது. இயற்பியல் விதிகளும்,நிகழ்தகவல்களும்  அப்படி பட்ட மோதல் மீண்டும் நிகழும் என்கிறார்  ஹாக்கிங்ஸ்...நாம் காத்திப்போம்.

கைபேசியும்,கணிணியும் நம்மை விஞ்சிவிடுமா?
                என்னை கேட்டால் விஞ்சிவிட்டது என்பேன். தற்போதைய தலைமுறை கூகுள்(goole) தலைமுறை . எதை கேட்டாலும் கூகுளில் தேட துவங்கிவிடுகிறது.மிக எளிய கணக்குகளுக்கு கூட காலகுலேட்டர் தேவைபடுகிறது.கணிணி,கேபேசி, சாதனங்கள் இல்லாமல் இந்த உலகம் இனி ஒருநிமிடம் கூட இயங்க இயலாது.
          ஹாக்கிங் என்ன சொல்கிறார் தெரியுமா...
                  அறிவியல் அறிஞர்கள் பலர் சேர்ந்து பெரும் நுண்ணறிவு படைத்த அதி நவீன கணிணி ஒன்றை  உருவாக்கினார்கள். அவர்கள் அதனிடம் கேட்ட முதல் கேள்வி "கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார? என்பது தான். அதற்கு அக்கணிணி "இப்போது அவர் உருவாகிவிட்டார் " என்று பதிலளித்துவிட்டு ,தன்னை யாரும் ஒருபோதும் அணைத்துவிட முடியாதபடி செய்துவிட்டது. என்கிறார்.
               வளர்ச்சியடைந்து வரும் தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுவதிலேயே மனித குலத்தின் எதிர்காலம் இருக்கிறது .
      மனிதர்களின் மண்டை ஒட்டுப்பகுதி அல்லது மூளைக்குள் மின் முணைகளை பொருத்துவதன் மூலமாக வருங்காலத்தில் தகவல் தொடர்பு மனித மூளைக்கும், கணிணிக்கும் இடையே நேரடியாக நடைபெறும் ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் ஹாக்கிங்.
          234 பக்கங்கள் கொண்ட இந் நூலை மிகமிக சுருக்கமாக உங்கள் முன் வைத்திருக்கிறேன். கடவுள் நம்பிக்கை  என்பது ஒரு தனிமனிதனின்  சுகந்திரம். ஆனால் "ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்" என்ற இந்த நூலை படிக்கும் போது  நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சம்,நிகழ்வுகள்,வாழ்க்கை ,நம்மை கடந்து போன வரலாறுகளை  அறிவயில் பார்வையோடு விளக்கியுள்ளார் ஹாக்கிங். நூலை படித்து முடிக்கின்றபோது கடைசி கேள்வியான "வருங்காலத்தை நாம் எப்படி வடிவமைப்பது ?என்ற கேள்விக்கு விடை   உங்களுக்கு கிடைத்துவிடும்.

இந்த கட்டுரை காற்றுவெளி மின் இதழ் ஆகஸ்ட் 2020 வெளிவந்த எனது கட்டுரை
-அ.தமிழ்ச்செல்வன்


Comments

பதில்கள் நன்று...

ஊழ் அதிகாரம் இன்னும் பல உண்மைகளை தேட வைக்கும்...