ரபேல் ஊழல்: எளிமையாகப் புரிந்துகொள்வது எப்படி?


ரபேல் விமானம்: என்ன தேவை?

இந்தியா கடைசியாக வாங்கியது  சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996-ல் வாங்கியதுதான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001-ல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமாகி 2016-ல்தான் விமானப் படையில் இது சேர்க்கப்பட்டது.இதற்கிடையில் போர் விமானங்களின் தேவை உணரப்பட்டதால் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சியில், 2007-ல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற பல நாட்டு  நிறுவனங்களில் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்தின் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டது.

மன்மோகன் ஆட்சியின் ஒப்பந்தம் என்ன?

126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது. இவற்றில்  18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை  தஸ்ஸோ நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. இதன்படி ஹெச்ஏஎல் – தஸ்ஸோ இரு நிறுவனங்கள் இடையேயான  ‘வேலை ஒப்பந்தம்’ 2014 மார்ச்சில் கையெழுத்தானது.

மோடி அரசு செய்த மாற்றம் என்ன?

2014 மே மாதம் மோடி அரசு ஆட்சிக்கு வருகிறது. 2015 ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக  36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக அறிவிக்கிறார். அடுத்து, 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்கிறார் அன்றைக்குப் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர். அடுத்து, 2016 செப்டம்பரில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதை ஏன் ஊழல் என்கிறார்கள்?

1. விலை: முந்தைய மன்மோகன் அரசு விமானத்தை வாங்கவிருந்த விலை சுமார்

ரூ. 526 கோடி. மோடி அரசு வாங்குவது சுமார் ரூ. 1,670 கோடி!

2. உற்பத்தி: முந்தைய ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இப்போதைய ஒப்பந்தப்படி, எல்லாமே பிரான்ஸில்தான் தயாரிக்கப்படும்.

3. தொழில்நுட்பம்: முந்தைய ஒப்பந்தத்தில், தஸ்ஸோ நிறுவனம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும். இன்றைய ஒப்பந்தத்தில்,  ‘சில தனியார் நிறுவனங்களுக்கும்’ தொழில்நுட்பம் தரப்படும். அந்தத் தனியார் நிறுவனம் எது? அதுதான் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’.

4. அனுபவம்: பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் விமானத் துறையில் அனுபவம் உள்ள நிறுவனம். ஏற்கெனவே போர் விமானங்களைத் தயாரித்துக்கொண்டும் உள்ளது. மோடி அரசில் முடிவு செய்யப்பட்ட ரிலையன்ஸுக்கு விமானத் துறையில் எந்த அனுபவமும் இல்லை.

5. மோடியின் மீறல்: 2015-ல் பிரான்ஸுக்குச் சென்றபோது ரபேல் விமானங்கள் வாங்குவதாக தடாலடியாக அறிவித்தார் மோடி. இது போன்ற பல்லாயிரம் கோடி ஆயுதங்கள் வாங்கும் விஷயங்களில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற விஷயங்களில் போர் விமானம் குறித்த தொழில்நுட்பம்தான் ரகசியமே தவிர, விலை ரகசியமாக வைக்கத் தேவையில்லை.  ஆனால், மோடி அரசு விலையை ரகசியம் என்கிறது.

6. சந்தேக ரிலையன்ஸ்: 2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோடி, ரபேல் விமானம் வாங்கப்படும் என்று அறிவித்தார் அல்லவா, அப்போது கூடவே சென்றவர் அனில் அம்பானி. இந்தப் பயணத்துக்குச் சில நாட்கள் முன்தான்  ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ எனும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. பிரதமர் பிரான்ஸுக்குச் சென்று ரபேல் வாங்குவதென அறிவித்ததற்கு இரண்டு நாட்கள் முன்புகூட, போர் விமானங்கள் விஷயத்தில் ஹெச்ஏஎல் இருக்கிறது என்று பேட்டி அளித்திருக்கிறார் வெளியுறவுத் துறைச் செயலர். இந்தப் பின்னணியில்தான் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் வந்ததைக் கேள்விக்குள்ளாக்குகின்றன எதிர்க்கட்சிகள்.

7. ஒல்லாந் குண்டு: ரபேல் ஊழலில் ரிலையன்ஸ் விவகாரம் வெளியே வந்ததும், “ரிலையன்ஸுக்கும் தஸ்ஸோவுக்கும் என்ன ஒப்பந்தம் என்று எங்களுக்குத் தெரியாது. தஸ்ஸோ தனக்கு விருப்பமான கூட்டாளியைத் தேர்வுசெய்யலாம், அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று சொன்னார்கள்  மோடியும் அவரது அமைச்சர்களும்.  ஆனால், “மோடி அரசு, ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது, எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை” என்று பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஒல்லாந் சொல்லியிருப்பது பெரும் திருப்பம். ஏனென்றால்,  அவர்தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்!

-ஆர்.ஷாஜஹான், எழுத்தாளர்.
நன்றி- தி இந்து தமிழ் நாளிதழ்

Comments