கன்னிப் பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து 36 திருமண ஜோடிகள் வீரமரணம்

மதுரை மாவட்டம் திருமங்கலம்  அருகே தஞ்சமடைந்த கன்னிப் பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து 36 திருமண ஜோடிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி 72 தாத்தகாரு வீரக்கோவில்: 
200 ஆண்டுகளுக்கு முந்தைய மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு:ஆங்கிலேயர்கள் காலத்தில் ஜமீன்தாரிடமிருந்து தப்பிவந்து கிராமத்தில் தஞ்சடைந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து 36 திருமண ஜோடிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி 72 தாத்தகாரு வீரக்கோவில் குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மதுரையம்பதியின் சுற்றுப் பகுதிகளில் குறுநில மன்னர்களாக ஆட்சி புரிந்து வந்த காலத்தில் சாப்டூர் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்கள் சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளது. இருப்பினும் ஜமீன்தாரிடமிருந்து தப்பி வந்து கிராமத்தில் தஞ:சமடைந்த கன்னிப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் அவரை காட்டிக் கொடுக்க மறுத்து ஒரே சமயத்தில் 36 திருமண ஜோடிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி 72 தாத்தகாரு வீரக்கோவில் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போது சாப்டூரை தலைமையிடமாக கொண்டு ஜமீன்தார்களின் நிர்வாகம் இருந்து வந்துள்ளது.அப்போது பருவமடையும் கன்னிப்பெண்களை சேவகம் செய்வதற்காக ஜமீன்தார்களிடம் ஒப்படைப்பது வழக்கமாக இருந்து வந்தது.இந்த விஷயத்தில் யாருக்கும் விதிவிலக்கு இல்லாத நிலையில் ஏழை ஒருவரின் மகள் பருவமடைந்த தகவல் ஜமீன்தர்ருக்கு சென்றுள்ளது.இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் அரண்மனை காவலர்கள் அந்த ஏழையின் மகளை அழைத்துவரச் சென்றுள்ளனர்.அப்போது தான் சீராட்டி வளர்த்த மகளை அரமண்மனைக்கு அனுப்பிட மனமில்லாததால் அந்த ஏழை தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் ஜமீனை விட்டு வெளியேறி ஒவ்வொரு கிராமம் கிராமமாக தஞ்சம் கேட்டு கால்நடையாக சென்றுள்ளார்.
வழியில் அவர் சென்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஜமீன்தாரின் கோபத்திற்கு ஆளாகிட வேண்டாம் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்துள்ளனர்.இதனால் மனமுடைந்த அந்த ஏழை தனது மனம் போன போக்கில் நடந்து சென்று கடைசியாக திருமங்கலம் அருகேயுள்ள கட்ராம்பட்டி எனும் கிராமத்தில் தஞ்சம் கேட்டுள்ளார்.அன்றைய காலகட்டத்தில் கட்ராம்பட்டி கிராமம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 48கிராமங்களின் தாய் கிராமமாக திகழ்ந்து வந்துள்ளது.இந்த கிராமத்தில் வசித்தவர்கள் அனைவரும் வீரர்களும் புஜபல பராக்கிரமம் கொண்டவர்களுமாக இருந்துள்ளனர்.மேலும் இந்த சமுதாயத்திற்கு சொந்தமான 48 கிராமங்களைச் சேர்ந்தவர்களும் திருமணம் முடிக்க வேண்டுமென்றால் தங்களது தாய் கிராமமான கட்ராம்பட்டியில் வந்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனராம். இத்தகைய சிறப்பு மிக்க கட்ராம்பட்டி கிராமத்திற்கு வந்து சேர்ந்த அந்த ஏழை மற்றும் அவரது குடும்பத்திற்கு கிராமமக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆதரவு தெரிவித்து அடைக்கலம் கொடுத்துள்ளனர்.மேலும் தங்களது உயிரே போனாலும் பரவாயில்லை கட்ராம்பட்டியை நம்பி வந்த அந்த கன்னிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுவது என்றும் சபதம் செய்துள்ளனர்.
இதனிடையே தனது அரண்மனை சேவகத்திற்கு வராமல் தப்பியோடி தலைமறைவாகி விட்ட அந்த கன்னிப்பெண்ணை பிடித்து கொண்டு வருமாறு சாப்டூர் ஜமீனிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒவ்வொரு கிராமமாக கன்னிப்பெண்ணை தேடி வந்துள்ளனர்.கடைசியாக கட்ராம்பட்டி கிராமத்திற்கு வந்து வீரர்கள் விசாரித்தபோது யாரும் அந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்காமல் ஒற்றுமையாக இருந்துவிட்டனர்.அந்த சமயத்தில் தாய் கிராமமான கட்ராம்பட்டி கிராமத்தின் வடமேற்கு பகுதியில் மரங்கள் அடர்ந்த இடத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த 36 ஜோடிகளுக்கு திருமண வைபம் நடைபெற்றுள்ளது.இதனை பார்த்த ஜமீன்தாரின் வீரர்கள் அந்த இடத்திற்கு சென்று கன்னிப்பெண்ணை குறித்து விசாரித்துள்னர். அங்கிருந்தவர்களும் புதுமணத் தம்பதியரும் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறிவிட்ட நிலையில் ஜமீன்தாரின் வீரர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த சிலர் கொம்புஊதி ஜமீன்தாரின் படைகள் ஏமாந்து திரும்பிச் சென்றுவிட்டன என்று ஏளனம் செய்துள்ளனர்.இது ஜமீன் வீரர்களுக்கு தெரியவரவே அவர்கள் அனைவரும் கன்னிப்பெண்னை தேடி அலைந்து திரிந்த ஆவேசத்தில் கட்ராம்பட்டியில் அன்றையதினம் 36 ஜோடிகளுக்கு திருமணம் செய்த இடத்திற்கு வந்து மணமகன்களை நிறுத்திவைத்து தஞ்சமடைந்த கன்னிப்பெண் குறித்து கேட்டு மிரட்டியுள்ளனர்.
அப்போது புதுமாப்பிள்ளைகளாக மணக்கோலத்தில் இருந்தவர்கள் கன்னிப்பெண் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது,அப்படி ஏதேனும் தெரிந்தாலும் தாய் கிராமத்தின் நியமப்படி உயிரே போனாலும் எதுவும் கூறமாட்டோம் என்று ஆணித்தரமாக கூறியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த ஜமீன்தாரின் படைகள் அன்றையதினம் ஆட்சிசெய்துவந்து ஆங்கிலேயரின் சிறப்பு உத்தரவை பெற்று தஞ்சமென வந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்த 36 புதுமாப்பிள்ளைகளையும் வாளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர்.அப்போது மக்கள் வெள்ளமென திரண்டு வந்து ஜமீன்வீரர்களுடன் போராடியபோது அவர்கள் கட்ராம்பட்டி கிராமத்திலிருந்து பின்வாங்கிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் அன்றைய தினம் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்த நிலையில் ஜமீன்வீரர்களால் படுகொலை செய்யப்பட்டு வீரமரணமடைந்த தங்களது கணவர்களது சிதையில் எரிந்து கொண்டிருந்த தீயில் குதித்து 36 புதுமணப் பெண்களும் உடன்கட்டை ஏறி வீரச்சாவு அடைந்துள்ளனர்.இதனால் அந்த கன்னிப்பெண் ஜமீன் சேவகத்திற்கு செல்லாமல் கட்ராம்பட்டி கிராம மக்களால் குடும்பத்துடன் காப்பாற்றப்பட்டாள்.மொத்தத்தில் தாய் கிராமமான கட்ராம்பட்டி கிராமத்தில் தஞ்சமென வந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து ஜமீன்தாரின் படைவீரர்களின் தாக்குதலுக்கு இலக்காகி 36ஜோடிகள் வீரமணடைந்த இடம் தற்போது 72 தாத்தகாரு வீரக்கோவிலாக உள்ளது.
இன்றைக்கும் கட்ராம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் வசித்திடும் அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது வீடுகளில் நடைபெறுகின்ற சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்து காரியங்களையும் 72தாத்தகாரு வீரக்கோவிலில் வழிபாடு செய்த பின்னரே தொடங்குகின்றனர்.கடந்த காலத்தில் திறந்தவெளியாக இருந்த 72தாத்தகாரு வீரக்கோவிலில் தற்போது பீடம் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.மழை வேண்டி தாத்தகாரு கோவிலில் வழிபாடு நடத்தினாலும்,ஆடமாடுகளை விற்பதற்கும் பல்லிசகுனம் உத்தரவாக கிடைத்திடும்.மேலும் இந்த கோவிலில் செய்யப்படும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி ஜெயம் கிடைத்திடும் என்ற நம்பிக்கை மக்களிடையே இன்றும் காணப்படுகிறது.எனினும் 72தாத்தகாரு வீரக்கோவிலின் வீரவரலாறு இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெரும்பாலும் தெரியாமலே உள்ளது. 200ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் அருகே தாய்கிராமமாக திகழ்ந்த கட்ராம்பட்டியில் தஞ்மடைந்த கன்னிப் பெண்ணை காப்பாற்றுவதற்காக 36புதுமண ஜோடிகள் தங்களது உயிரை தியாகம் செய்து வீரமரணமடைந்த 72 தாத்தகாரு வீரக்கோவிலின் மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு தமிழர்களின் வீரத்தையும் விவேகத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

புகைப்படம் ,கட்டுரை ஆக்கம்
திருமங்கலம் செல்வராஜ்

Comments